செய்திகள்

திருச்சி, கரூரில் ஆடிப்பெருக்கு கோலாகலம்: புனித நீராடி புது தாலி மாற்றிக் கொண்ட பெண்கள்

திருச்சி, ஆக. 3–

திருச்சி, கரூர் மாவட்டங்களில் இன்று ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இங்கு அதிகாலை முதல் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வர தொடங்கினர். காலையில் சற்று கூட்டம் குறைவாக காணப்பட்டாலும் நேரம் செல்ல செல்ல கூட்டம் அலைமோதியது.

திருச்சி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மா மண்டபம் படித்துறையில் திரண்டிருந்தனர். வழக்கமாக ஆடிப்பெருக்கின்போது காவிரியில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்படும்.

அதேபோன்று இன்றைய தினமும் 10 ஆயிரம் கன அடி நீர் வந்தது. இதனால் காவிரியில் பாய்ந்தோடிய தண்ணீரை கண்டு பக்தர்கள் பூரிப்படைந்தனர். பின்னர் பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் புனித நீராடி காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்தனர்.

அதன் பின்னர் வாழை இலை விரித்து அதில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து, தேங்காய், பழம், வெல்லம், ஏலக்காய் கலந்த அரிசி, கரும்பு துண்டு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் ஆகியவற்றை வைத்தும், மஞ்சள், குங்குமம், கருகமணி போன்ற மங்கல பொருட்களை வைத்தும் படையலிட்டனர்.

சுமங்கலி பூஜை

பின்னர் வீட்டின் மூத்த சுமங்கலி பெண்கள் அந்தப் படையலுக்கு கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். இதில் மஞ்சள் கயிற்றை பூஜைக்கு பின் சுமங்கலி பெண்கள் மற்ற சுமங்கலி பெண்களின் கழுத்திலும், திருமணமாகாத இளம்பெண்களின் கழுத்திலும் கட்டி விட்டனர்.

பின்னர் தங்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி இறைவனை மனதுருகி வேண்டிக் கொண்டனர். வாழ்வில் வளமும் செல்வமும் பெருக, தொழில், வியாபாரம் விருத்தி அடைய, விவசாயம் செழிக்கவும் வேண்டிக்கொண்டனர்.

புதுமண தம்பதிகள் தாலிச்சரடுகளை மாற்றிக்கட்டி வீட்டில் உள்ள மூத்த சுமங்கலி பெண்களிடம் ஆசி பெற்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

அம்மா மண்டபம் படித்துறையில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு தீயணைப்பு படை வீரர்கள் ரப்பர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருந்த காரணத்தால் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியபடி அம்மா மண்டபம் தவிர்த்து அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபம், கீதாபுரம், சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை காந்தி படித்துறை, ஓடத்துறை, முக்கொம்பு, கம்பரசம் பேட்டை (தடுப்பணை), முருங்கைப்பேட்டை, முத்தரசநல்லூர், அக்ரஹார படித்துறை, பழுர் படித்துறை, அல்லூர் மேல தெரு படித்துறை, திருச்செந்துறை, வெள்ளாளர் தெரு படித்துறை, அந்தநல்லூர் படித்துறை, திருப்பராய்த்துறை, மேலூர் அய்யனார் படித்துறை, பஞ்சகரை படித்துறை ஆகிய இடங்களிலும் ஆடிப்பெருக்கு வழிபாடுகள் நடந்தன.

இதே போன்று பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு தண்ணீர் போதுமான அளவுக்கு வந்ததால் ஆடிப்பெருக்கு விழாவை பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *