வாழ்வியல்

திருச்சி ஏழைப்பிள்ளையார் என்ற சப்தபுரீஸ்வரர் கோவில்

அருள்மிகு ஏழைப்பிள்ளையார் திருக்கோவில் , திருச்சிராப்பள்ளி

விநாயகரை வழிபட அனைத்து வினைகளும் தீரும் என்பது நம்பிக்கை. இன்று விநாயகர் சதுர்த்தியை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உலகத்தின் பல பகுதிகளிலும் கொண்டாடும் அளவுக்கு இந்து மதத்தின் பெருமை வளர்ந்து உள்ளது. இந்தக்கோவில் மிகவும் தொன்மை வாய்ந்தது. பல்லவ மன்னர்கள் கட்டிய கோவில் மலைக்கோட்டை பிள்ளையார் திருக்கோவில் என்பதுவும் பின்னர் நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில் பூர்த்தி செய்ததாக வரலாறு. இந்த ஏழைப்பிள்ளையார் திருக்கோவில் சப்தபுரீஸ்வரர் கோவில் என்றும் பெயர் பெற்றது.

இதன் தல வரலாற்றை அறியும் பொழுது இது சிறிய கோவிலாக இருந்தாலும் சக்தியின் அளவு அதி அற்புதமானது என்கின்றனர்.

எல்லா இசைகளும் சிவபெருமானின் உடுக்கை ஒலியில் இருந்துதான் பிறந்தது. ஏழு சுவரங்கள் தான் இசையின் ஆதாரம். அவைகளின் கலவையே ராகம் என்பது ஆகும். இவைகளை கொண்டு பல ராகங்கள் உருவானதால் ஏழு சப்த சுவரங்களுக்கும் நாம் இன்றி மனித குலத்திற்கு நல்ல இசை கொடுக்க முடியாது என்று கர்வம் அடைந்தது. இசை அனைவரையும் இழுத்து ஈர்க்கும் தன்மை கொண்டது. இறைவன் சிவபெருமானே, இராவணன் மீட்டிய சாம கானத்தில் மனது மயங்கிவர் என்பதாக எண்ணிக் கர்வம், தலைக்கேற இறை வழிபாடு செய்ய மறந்தன. சப்த சுவரங்களே உலகில் உயர்ந்தவர்கள் என்று ஆணவம் கொண்டு இறைவனுக்கு மரியாதை தராது அவரை வழிபடுவதற்கும் மறந்தன. இதைக்கண்டு கோபம் கொண்ட கலைவாணி அவர்கள் ஏழு பேரையும் சபித்து, இனி உங்கள் சுவரங்கள் பயனற்று போகும் என்று உத்தரவிட்டாள்.

எனவே சப்தசுவரங்கள் ஊமையாகி வார்த்தைகளே வராமல் தவித்தன. தவற்றை உணர்ந்து சிவபெருமானை மன்றாடி மன்னித்து அருள வேண்டின. எனவே அவர்கள் மீது இரக்கம் கொண்டு, சிவபெருமான் நீங்கள் பூலோகம் சென்று, திருச்சியில் உள்ளமலை உச்சியில் வீற்றிருக்கும் விநாயகரை வழிபட்டு, சுற்றி வந்து கிரிவலம் வரும் பாதையில் ஏழாவதாக ஒரு பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து அங்கிருந்து பின்னர் மறுபடியும் உச்சிப் பிள்ளையாரை வணங்கினால், நீங்கள் இழந்த சக்தியை மீண்டும் பெருவீர்கள் என்று கூறினார்.

அதுபோலவே உச்சிப்பிள்ளையாரை தரிசித்து வணங்கி கிரிவலத்தில் ஏழாவதாக ஒரு பிள்ளையாரை பிரதிஷ்டை செய்ய பாவ விமோசனம் பெற்றனர்.

ஏழாவதாக வந்த பிள்ளையார் மருவி ஏழைப்பிள்ளையார் என்ற பெயர் உண்டாயிற்று.

இந்த பிள்ளையாரை பிரதிஷ்டை செய்தவர்கள் ஏழு சுவரங்கள் ஆதலால் இங்கு வந்து அருகம்புல் சாற்றி வழிபட இசைக்கலைஞர்களுக்கு நல்ல குரல் வளமும், செல்வ செழிப்பும் கிட்டும் என்பது ஐதீகம் . மேலும், மாணவ மாணவிகள் நன்கு மதிப்பெண் பெறவும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் அகலவும் ஏழைப்பிள்ளையாரை வேண்டினால் அனைத்து வேண்டியவையும் கிட்டும் என்பது நிச்சயம் என்கின்றனர்.

இந்த திருக்கோவிலில் பிள்ளையார் மட்டுமே மூலவர் ஆக உள்ளார். நாகர்கள் சிலைகள் மட்டும் சன்னதிக்கு வெளியே இருக்கின்றனர். சதுர்த்தி தினத்தன்றும், விநாயக சதுர்த்தி அன்றும், சிறப்பு வழிபாடுகள் உண்டு. தினமும் காலை 6 மணி முதல் பகல் 10 மணிவரையும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்து உள்ளது.

அருள்மிகு ஏழைப்பிள்ளையார் திருக்கோவில் வடக்கு ஆண்டார் வீதி, திருச்சிராப்பள்ளி.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு

……….ஔவையார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *