திருச்சி, ஜூன் 12–
திருச்சி அருகே போதைப்பொருள் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி எடமலைப்பட்டி பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக புதூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதூர் காவல் நிலைய போலீசார் கிராப்பட்டி பேருந்து நிலையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை சோதனை செய்ததில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
5 பேர் கைது
இதனையடுத்து போதைப் பொருட்களை கடத்தி வந்த சாதிக் பாஷா, முகமது ஷெரிப், அப்துல் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,40,000 மதிப்புள்ள 218 கிலோ அளவிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் தில்லைநகர் பகுதியில் இருந்து போதைப் பொருட்களை ஏற்றி வந்ததை ஒப்பக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து தில்லைநகர் பகுதிக்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த காரை சோதனை செய்ததில் சுமார் ரூ.1,60,000 மதிப்பிலான குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட ஜெயராமன், ஜாகுபார் ஆகிய இருவரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.