திருச்சி, ஏப்.3-
திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே கமல்ஹாசன் பேசியதாவது:-
பன்முகத்தன்மை, விரிந்த நோக்கம் இல்லாத எந்த அரசும் ஆபத்தானது.
நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்து இருக்கிறேன். தமிழக மக்களுக்கும், இந்தியாவுக்கும் எனக்குள்ள காதல் சாதாரணமானது அல்ல. இது சாதாரண காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. என் காதல் உங்கள் அனைவரின்பால் உண்டு. அதனால் தான் நான் அரசியலுக்கே வந்தேன்.
இந்தியாவில் 50 சதவீதம் மகளிர் பின்தங்கி இருப்பதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும். இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை என்பதை முதன்முதலில் மக்கள் நீதிமய்யத்தில் அறிவித்தோம். அப்போது என்னென்னமோ கிண்டல் செய்தார்கள்.
ஆனால் அதை உற்றுநோக்கி நடைமுறைப்படுத்திய ஒருகாரணத்துக்காக நான் இங்கு வந்தேன் என்று வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு பஸ்சில் கட்டணமில்லா பயணம் என்ற திட்டம் ஏன் தமிழ்நாட்டோடு முடிய வேண்டும்? இந்தியா முழுவதும் ஏன் வரக்கூடாது? அது தான் நல்ல அரசியல், அதை செய்யுங்கள்.
எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல். எதிர்த்து குரல் கொடுத்தாலும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது நமது அரசியல். அண்ணன், தம்பிகளை மோதவிட்டு பார்ப்பது ஒரு அரசியல் தந்திரம். அது இன்று நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. பண்பாட்டு பிரச்சினை, மொழிப்பிரச்சினை இவையெல்லாம் கிளப்பி அரசு செய்யும் தவறுகளை போர்த்தும் போர்வையாக இவை பயன்படுத்தப்படுகின்றன.
அமலாக்கத்துறை, வருமானவரித்துறை இவையெல்லாம் எனக்காக வேலை செய்வதாக நான் நினைத்து கொண்டு இருக்கிறேன். அதை வேறு யாரோ? வேட்டைநாய் போன்று பயன்படுத்தி வருகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜி.எஸ்.டி. வரி போட்டதும், இன்று சிறு, குறு தொழிலாளர்கள் எல்லாம் எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்று பதறுகிற நிலைக்கு ஆக்கிவிட்டார்கள். இதையெல்லாம் செய்து குழப்பிவிட்டால் தமிழகத்தை பிடித்துவிடலாம் என நினைக்கிறார்கள். அரசியலில் மதம் கலந்த எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. இதை மக்களாகிய நீங்கள் தான் கலக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.