செய்திகள்

திருச்சியில் நிறுவப்பட்டுள்ள சிவாஜி சிலையை வேறு இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை

சென்னை, மே 14–

திருச்சிராப்பள்ளி பாலக்கரை மெயின் ரோட்டில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை, நீதிமன்ற உத்திரவுபடி மாற்று இடத்தில் நிறுவ வேண்டும் என்று கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:–

மறைந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு, திருச்சியில் ஒரு சிலை நிறுவவேண்டும் என்ற சிவாஜி ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சிலை அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாநகராட்சித் தீர்மானம் அடிப்படையில், நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு, திருச்சிராப்பள்ளி, பாலக்கரை மெயின் ரோட்டில், முன்பிருந்த பிரபாத் தியேட்டர் எதிரிலுள்ள ரவுண்டானாவில், 23-02-2011 அன்று முழு உருவ வெங்கலச் சிலை நிறுவப்பட்டது. அதன்பிறகு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு குறுக்கிட்டதால் திறப்புவிழா நடைபெறவில்லை.

அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, பலமுறை ரசிகர்கள் கோரிக்கை விடுத்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவரும், சிவாஜி சமூகநலப்பேரவை தலைவருமான கே.சந்திரசேகரன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல், சிலை, அதே இடத்தில் சாக்குப் பையால் மூடப்பட்ட நிலையில், கடந்த 13 ஆண்டுகளாக இருந்தது.

மாற்று இடத்தில் சிவாஜி

சிலையை நிறுவ வேண்டும்

இதற்கிடையில், சிலையை திறக்கவேண்டும் என்று, மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரசிகர் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்ற உத்திரவின்படி, தற்போது சிலை நிறுவப்பட்டிருக்கும் சாலையில் சிலையைத் திறக்க அனுமதி அளிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது.

மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்திரவில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை இப்போது நிறுவப்பட்டிருக்கும் இடத்திலிருந்து அகற்றி, வேறொரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நிறுவவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

சிலை நிறுவுவது சம்பந்தமான உச்சநீதிமன்ற உத்திரவின் அடிப்படையிலும், திருச்சியில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை சம்பந்தமான வழக்கில், மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்திரவின் அடிப்படையிலும், திருச்சியில், வேறொரு முக்கிய சந்திப்பில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தன் கலைத்திறனால் தமிழினத்திற்குப் பெருமை சேர்த்தவரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சீடரும், காங்கிரஸ் கட்சியின் தூணாகத் திகழ்ந்தவரும், டாக்டர் கலைஞரின் நண்பராகத் திகழ்ந்தவருமான, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு, இளவயதில் அவர்கள் குடும்பம் வாழ்ந்தது திருச்சி சங்கிலியாண்டபுரத்தில்தான் என்பதால், திருச்சியில் அவருடைய சிலை அமைவது சாலப் பொருத்தமாக இருக்கும்.

தியாகிகள், கலைஞர்கள் என்று அனைவருக்கும் நினைவிடம், சிலை என்று அமைத்து, அவர்களைப் போற்றிடும் தாங்கள், திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையையும் முக்கிய இடத்தில் நிறுவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *