செய்திகள்

திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி: ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. துவக்கி வைத்தார்

தஞ்சாவூர், பிப்.11–

தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டி கிராமத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியினை மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் திரு.ஆர்.வைத்திலிங்கம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முன்னதாக ஜல்லிக்கட்டு உறுதிமொழியினை மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலையில் காளை பிடி வீரர்கள் உறுதி மொழியினை ஏற்றனர்.

திருக்கானூர்பட்டியில் நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரியான விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் 640 காளைகளும், 254 காளை பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு காளையினை முறையாக கால்நடைத்துறை மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியுடைய காளைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. கால்நடைத்துறையின் மூலம் காளைகளுக்கு தனியாக ஆம்புலென்ஸ் வசதி தயரர் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. வீரர்களுக்கு மருத்துவத் துறையின் மூலம் முறையான பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு பணிகளில் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டனர். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டிருந்தது.

இப்போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை மற்றும் பிறமாவட்டங்களிலிருந்து காளை மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. 42 மாடு பிடி வீரர்களுக்கு போட்டியின் போது காயம் ஏற்பட்டது. 8 வீரர்களுக்கு சிறிய காயமும், 34 வீரர்களுக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. பலத்த காயம் ஏற்பட்ட வீரர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். கால்நடைத்துறை சார்பில் 8 கால் நடை மருத்துக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு காளை மாடுகளுக்கு போட்டியின் போது காயம் ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காவல்துறை துணைத்தலைவர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், ஒருங்கிணைந்த பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் ஆர்.காந்தி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், கால்நடைத்துறை உதவி இயக்குநர் ஈஸ்வரன், மாவட்ட மலோியா அலுவலர் போத்திபிள்ளை, நிலவள வங்கித்தலைவர் துரை.வீரணன், வட்டாட்சியர் அருணகிரி மற்றும் விழாக்குழுவினர் மற்றும் பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *