செய்திகள்

திரிஷாவைப் பற்றி தவறாகப் பேசவில்லை, மன்னிப்பு கேட்க முடியாது: மன்சூர் அலிகான்

என்னை பலிகடா ஆக்கி, நடிகர் சங்கம் நற்பெயர் வாங்க முயற்சி

சென்னை,நவ. 21–

நடிகை திரிஷாவைப் பற்றித் தான் தவறாக ஏதும் பேசவில்லை, மன்னிப்பு கேட்க முடியாது என்றும், என்னை பலிகடா ஆக்கி, நடிகர் சங்கம் நற்பெயர் வாங்க முயற்சி செய்கிறது என்றும் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுத்ததன் மூலம் நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘லியோ’ படத்தில் திரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை என கூறியிருந்தார். மேலும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளையும் கூறியிருந்தார்.

இதற்கு நடிகை திரிஷா கடும் கண்டனம் தெரிவித்தார். “மிக கேவலமாகவும் அவமரியாதை செய்யும் வகையிலும் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவரைப் போன்ற ஒருவருடன் சேர்ந்து நடிக்காததில் மகிழ்ச்சி. இனிமேலும் நடிக்காமல் பார்த்துக்கொள்வேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்துக்கு அவப்பெயரை உண்டாக்குகிறார்கள்” என்று கூறியிருந்தார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை குஷ்பு ஆகியோர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.

இந்த விவகாரத்தில் தாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு பரிந்துரைக்கிறோம்.

இதுபோன்ற கருத்துகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை தூண்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று’ என்று பதிவிட்டிருந்தது.

மன்சூர் அலிகானுக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:– “நடிகை திரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டிதான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். நடிகர் சங்கம் இவ்விவகாரத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது.

நடிகர் சங்கம் என்னிடம் எதுவும் விளக்கம் கேட்கவில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறியதால் நான் அவ்வாறு பேசினேன். நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். என்னை பலிகடா ஆக்கி, நற்பெயர் வாங்க நடிகர் சங்கம் முயற்சிக்கிறது.

ஒரு விஷயம் சர்ச்சையானால் அதுபற்றி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எந்த விளக்கமும் கேட்கவில்லை. என் மீது தவறாக நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 மணி நேரத்துக்குள் அவர்கள் அந்த நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை. எரிமலை குமுறினால் சுற்றியிருப்பவர்கள் தெறித்து ஓடுவார்கள்” என்றார்.

முன்னதாக நடிகர் சங்கம் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “மக்களால் கவனிக்கப்படும் பிரபலங்களாக இருக்கும்போது, தான் உதிர்க்கும் கருத்துகளும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வின்றி மன்சூர் அலிகான் பேசியது மிகவும் தவறாகும். எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம்” என்று வலியுறுத்தியிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *