கொல்கத்தா, பிப்.28–
மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அந்த டுவிட்டர் பக்கத்தின் பெயர் யுகா லேப்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது. கூடவே அதன் முகப்புப் படமும் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஹேக்கர்கள் அந்தப் பக்கத்தில் எதுவும் பதிவிடவில்லை. அந்தப் பக்கத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
யுகா லேப்ஸ் என்பது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ப்ளாக்செயின் தொழில்நுட்ப நிறுவனம் எனத் தெரிகிறது. கிரிப்டோ கரன்சி, டிஜிட்டல் ஊடகத்திலும் அவர்கள் செயல்படுகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. அந்தப் பக்கத்தின் பெயர் “NFT millionaire” என மாற்றப்பட்டது. பின்னர் டிஜிட்டல் கரன்சி வர்த்தம் தொடர்பாக சில செய்திகளும் பதிவிடப்பட்டன.
கடந்த ஏப்ரல் 2022–ல் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. ஹேக்கர்கள் முதல்வரின் படத்தை டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கினர். இதுபோல் அவ்வப்போது தலைவர்கள், பெரும்புள்ளிகள், கட்சிகள், அரசுத் துறைகளின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.