சென்னை, நவ. 2
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா? என்று தவெக தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் குட்டிக்கதை சொல்ல வரவில்லை. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன் என்றும் அவர் கூறினார்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதை பல முறை வரவேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது மாநாட்டுக்கு உணர்வு பூர்வமாக வாழ்த்தும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்திய நடிகர் விஜய், ‘திராவிடமும் தமிழ் தேசியமும் தான் எங்கள் கொள்கை’ என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் தமிழ்நாடு நாளை ஒட்டி சென்னையில் நேற்று நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில், விஜய் அறிவித்த கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்தார் சீமான்.
பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது :-
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்கிறார். ஒன்று ஆற்றில் கால் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சேற்றில் கால் வைக்க வேண்டும். இது என்ன ரெண்டிலும் ஒவ்வொரு கால் வைப்பது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ?. அண்மையில் வந்த படத்தில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் அவரே நடித்ததால் குழம்பிவிட்டார் போல். நீங்கள் சொல்வது கொள்கையே இல்லை.
ஒரு சாலையில் இடதுபுறம் நிற்க வேண்டும் அல்லது வலது புறம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி மோதிவிடும். திராவிடமும், தேசியமும் ஒன்று என்பது நடுநிலை இல்லை. மிகக் கொடுமையான நிலை.
சாம்பார் என்றால் சாம்பார் என சொல்ல வேண்டும்; கருவாட்டு குழம்பு என்றால் கருவாட்டு குழம்பு என்று சொல்ல வேண்டும். இரண்டையும் சேர்த்து, கருவாட்டு சாம்பார் என்று சொல்லக் கூடாது. காட்டுப்பூனையும், நாட்டு கோழியும் ஒன்றா?
நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் அல்ல. கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். ‘தம்பி’ நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் இல்லை. வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்க வேண்டும். ஆனால் நாங்கள் அவர்களை படித்து பட்டம் பெற்று பிஎச்டி வாங்கி விட்டோம்.
நீங்கள் இனிமேல் தான் சங்க இலக்கியம் எங்கு இருக்கிறது? என்று தேட வேண்டும். ஆனால் சங்க இலக்கியத்தில் வருகிற பாண்டியன் நெடுஞ்செழியனின் பேரன்களும், பேத்திகளும் நாங்கள். அது கதை இல்லை தம்பி. என் இன வரலாறு. எதிர் புரட்சி என்பது முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு என்பது தான் எங்களின் கதை. தம்பி நான் பேசுறது பஞ்ச் டயலாக் அல்ல தம்பி, நெஞ்சு டயலாக்.
வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலுநாச்சியார் யார் என்று சொல்லு தம்பி. இது ட்ரைலர் தான். மெயின் பிக்சர் எப்போது வரும் என்றால் அடுத்து உங்கள் படம் பார்த்த பிறகு தான் வரும். ஆவின் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொடுப்பேன் என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. கருப்பட்டிக்கு எப்படி பால்வரும்?
கழிப்பிடம், மது குடிப்பிடத்தை தவிர, எல்லா இடங்களுக்கும், கருணாநிதி பெயர் சூட்டப்பட்டு வருகிறது. மது குடிப்பிடம்தான் அவர் பெயர் வைப்பதற்கு சிறந்த இடமாக இருக்கும்.
தமிழகத்தில் 75வது ஆண்டு பொன் விழா கொண்டாடும் கட்சிக்கு, திராவிடம் என்றால் என்ன என்று சொல்ல தெரியவில்லை.
எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்ட வேண்டாம். 2026ம் ஆண்டு என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது.இவ்வாறு சீமான் பேசினார் .