செய்திகள்

திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்காவின் வேட்புமனுக்கள் ஏற்பு: 107 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

புதுடெல்லி, ஜூலை.1-–

ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்காவின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில் இறுதி நிலவரப்படி திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்கா உள்பட 115 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் மொத்தமுள்ள 115 வேட்புமனுக்களில் 28 மனுக்கள் தொடக்க நிலையிலேயே நிராகரிக்கப்பட்டன.

மீதமுள்ள 87 மனுக்களில் (72 வேட்பாளர்கள்) 79 மனுக்கள், தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறு மொத்தம் 107 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களான திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்கா ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த தேர்தலில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள வேட்புமனுக்களை திரும்பப்பெற வேண்டிய கடைசி நாள் நாளை (சனிக்கிழமை) ஆகும்.

அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் அரசிதழில் வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மனுவை நிரப்பும்போது தவறு ஏற்பட்டு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், ஒவ்வொரு வேட்பாளரும் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்படி, தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளரை குறைந்தபட்சம் 50 எம்.பி.க்கள் அல்லது எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும்; 50 பேர். வழிமொழிய வேண்டும். வைப்புத்தொகையாக ரூ.15,000 செலுத்த வேண்டும். அதை ரொக்கமாக செலுத்தலாம் அல்லது ரிசர்வ் வங்கியில் செலுத்தி அதன் ரசீதை செலுத்தலாம். காசோலை அல்லது வரைவோலை ஏற்றுக்கொள்ளபட்ட மாட்டாது. இதுபோன்ற நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.