சினிமா செய்திகள்

தியேட்டர்களை திருமண மண்டபங்களாக மாற்றுவோம்: திரையரங்கு உரிமையாளர்கள்

சென்னை, செப். 10-

திரையிட படம் தராவிட்டால், தியேட்டர்களை திருமண மண்டபமாக மாற்றுவோம் என்று பட அதிபர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு, பல படங்கள் ஓடிடியில் வெளிவரும் நிலையில், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பலர், தியேட்டர் அதிபர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் வி.பி.எஃப் கட்டணம் ரத்து, விளம்பர வருவாய், டிக்கெட் முன்பதிவில் பங்கு உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் புதிய படங்களை திரையிட தரமுடியாத சூழ்நிலை ஏற்படும் என்று கூறியிருந்தனர்.

இந்தக் கடிதத்துக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அளித்துள்ள பதிலில், “படங்களை வெளியிடுவதும் வெளியிடாததும் தயாரிப்பாளர்களின் சொந்த விருப்பம். நாங்கள் கட்டாயப்படுத்த மாட்டோம்.

படங்களை வெளியிடவில்லை என்றால், நாங்களும் தியேட்டர்களை ஐ.பி.எல் கிரிக்கெட்டை ஒளிபரப்புவது, திருமண மண்டபம் என்று மாற்றிக்கொள்வோம். அவர்களுக்கு ஒரு வழி இருக்கும்போது எங்களுக்கும் வழி இருக்கும். அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பு இல்லை. தயாரிப்பாளர்கள் முடிவினால் தியேட்டர்கள் மூடப்பட்டு விடும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சங்கத்தின் தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ளார். அதில் “திரையரங்க உரிமையாளர் டிஜிட்டல் புரொஜக்டர்களை எந்த நிறுவனத்திடம் பெறுகிறார்களோ, அதற்கு உண்டான தொகையை அவர்கள்தான் செலுத்த வேண்டும். வி.பி.எஃப் கட்டணம் என்ற பெயரில் தயாரிப்பாளர்களிடமும், வினியோகஸ்தர்களிடமும் எந்த தொகையும் பெறக்கூடாது.

வருங்காலத்தில் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் யாரும் வி.பி.எஃப் தொகையை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *