‘உதிர்’ படத்தில் மனோபாலா உள்பட 32 காமெடி நடிகர்கள்
சென்னை, பிப். 18–
“திரையரங்குகளில் திரைப்படங்கள் பார்ப்பது என்பதே நல்ல அனுபவம். டூரிங் டாக்கீஸ்களில் படம் பார்த்த அனுபவங்களை மறக்க முடியாது. அப்படிப்பட்ட திரையரங்கங்கள் இன்று காணாமல் போய்விட்ட சூழலில், தற்போது திரையரங்குகளுக்கு புதிய சாபக்கேடு வந்திருக்கிறது’’ என்று பிரபல டைரக்டர் பேரரசு வேதனையோடு கூறினார்.
‘கடலில் பிடிக்கப்பட்ட மீன்களை தான் கடல் மீன் என்போம், ஏரிகளில் பிடிக்கும் மீன்களை ஏரி மீன் என்போம். அதுபோல், திரையரங்குகளில் வெளியானால் தான் அது திரைப்படம். அப்போது தான் திரைப்படங்களுக்கு மரியாதை. ஆனால், தற்போது செல்போனில் படங்கள் வெளியாக தொடங்கியிருக்கிறது. அதனால், திரைப்படங்கள் செல் படங்களாகிவிட்டது என்றும் ஆதங்கத்தை வெளியிட்டார்.
இந்த நிலை தொடர்ந்தால் திரைப்படங்களுக்கு மட்டும் இன்றி திரை நட்சத்திரங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும். எனவே, திரைப்படங்களை திரையரங்குகளில் மட்டுமே வெளியிட வேண்டும், அதற்கு ரசிகர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஞான ஆரோக்கியராஜா தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’. விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, போண்டா மணி, தீப்பெட்டி கணேஷன், தலைவெட்டி முருகன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை உள்ளிட்ட மொத்தம் 32 காமெடியன்கள் நடித்திருக்கிறார்கள்.
குடி… குடிக்காதே படி– நன்றாகப்படி
ஜாக்குவார் தங்கம் பேசுகையில், குடி…குடி…என்று பாடல் தொடங்கியதும் நான் சற்று அதிர்ச்சியானேன். ஆனால், அதை படி…படி…என்று முடித்தது சிறப்பு. மதுவுக்கு அடிமையாகும் இளைஞர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் தான் சமூகம் முன்னேறும், அப்படி ஒரு கருத்தை சொன்ன அந்த பாடலுக்காகவே பாராட்டலாம் என்று வாழ்த்தினார்.
“நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…” உள்ளிட்ட பிரபலமான பல ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்த அரவிந்த் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆனந்த் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் தினா, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், மக்கள் தொடர்பாளர்கள் சங்க நிர்வாகிகள் விஜயமுரளி, பெரு. துளசி பழனிவேல் கலந்து கொண்டார்கள்.