அறைகள் சொல்லும் கதைகள்- 23
நகரிலேயே பெரிய பூங்காவாக இருக்கும் அண்ணா பூங்காவிற்குள் வயதான ஒரு பெரியவர் தோளில் கைப்பையுடன் உள்ளே நுழைந்தார். நரைத்த தலைமுடி. நீண்ட தாடி . வெளிறிய தேகம். கண்களில் தீட்சண்யம். செருப்பு இல்லாத கால்கள். அவரைப் பார்ப்பதற்கு ஒரு ஞானியைப் போல் தோற்றம் அளித்தார். பூங்காவிற்குள் நுழைந்து இடது புறமும் வலது புறமும் திரும்பிப் பார்த்தார் .நடைப் பயிற்சி செய்பவர்கள். உடற்பயிற்சி செய்பவர்கள் . ஊஞ்சலாடுபவர்கள் சறுக்கி விளையாடுபவர்கள் . அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் என்று அத்தனை பேரையும் தன் ஒரே பார்வையால் பார்த்துவிட்டு நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவரவர்களுக்கு தேவையான வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். மனிதர்கள் தனக்கு என்ன தேவை என்று தெரிந்து கொண்ட அந்தப் பெரியவர் தான் தேர்ந்தெடுத்த இடத்திற்கு நடந்து சென்றார். அங்கே அவர் பார்த்த காட்சி அவரைக் கோபம் கொள்ள வைத்தது.
“சார் நான் இந்த காயினை நகத்தும் போது நீங்க தான் தப்பா வரீங்க. இது ராஜா இருக்க வேண்டிய இடம். இது ராணி இருக்க வேண்டிய இடம். இல்ல நீங்க தப்பா ஆடுறீங்க. உங்களுக்கு செஸ் பத்தி தெரியாதுன்னு நினைக்கிறேன். செஸ் ஆடறதுக்கு எல்லாம் பிரைன் வேணும் சார்” என்று ஒருவர் கத்த
” யாரு எனக்கு செஸ் விளையாடத் தெரியலங்கிறாயா? நான் செஸ் விளையாடுறதுல சாம்பியன் தெரியுமா? என்ன போய் இவ்வளவு கிண்டலா பேசிட்டு இருக்க .இந்த ஆள் கூட விளையாட முடியாது” என்று கோபித்துக் கொண்டு போனவரை
” சார் வாங்க இவரு தமாசா பேசுறாரு. நீங்க இத போய் கோவிக்கலாமா?” என்று இன்னொருவர் தேற்ற செஸ் விளையாட்டு அமோகமாக நடந்து கொண்டிருந்தது.
கேரம்போர்ட்டின் சிவப்புக் காயினை ஒருவர் தட்ட, கருப்பு காயின் பாக்கெட் ஆனது. இன்னும் கொஞ்சம் மாவு போட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். கொஞ்சம் மாவு போடுங்க அப்பத்தான் காயின் எல்லாம் வழுக்கிட்டுப் போகும் ” என்று இன்னொருவர் சொல்ல. கேரம்போர்டு விளையாட்டும் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது.
” சங்கமித்ரா நீ ஏன் வண்டி அப்படி ஓட்டிட்டு வந்த? அது தப்பு தானே?
” இல்லடா நான் சரியாத்தான் வந்தேன். அவன்தான் வந்து என் கால்ல இடிச்சுட்டான் என்னால கால எடுத்து வச்சு நடக்க முடியல ” என்று சங்கமித்ரா புலம்ப ,அவளைச் சுற்றி இருந்த கல்லூரி மாணவ மாணவிகள் சங்கமித்ராவிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
” டேய் அஸ்வின் உன்னுடைய பிறந்தநாளும் அதுவுமா சங்கமித்ராவை ஒருத்தன் வண்டியில வந்து இடிச்சிட்டான் .அதுதான் அவளுக்கு நீ கொடுக்கிற பிறந்தநாள் பரிசு போல? என்று சொல்ல
” ஏய் என்னய வச்சு கிண்டல் பண்றீங்களா? என்று சங்கமித்ரா சொல்ல ,கல்லூரி மாணவ மாணவிகள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் .
“இங்கே வா .இங்க ஓடாத. அங்கெல்லாம் போகக்கூடாது என்று ஓடும் குழந்தையை ஒரு தாய் அதட்டிக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தை அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது.
” சார் நான் பணம் தரேன். நீங்க தான் கேட்க மாட்டேங்கிறீங்க? இன்னும் ஒரு வாரத்தில கொடுத்துடறேன் சார் “என்று ஒருவன் தன் செல்போனில் புலம்பிக் கொண்டிருந்தான் .அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே
“சரி இப்ப என்ன பண்ணனும்னு சொல்றீங்க? என்னால பணம் தர முடியாது ஆள விடுங்க ?” என்று கொஞ்சம் அவன் குரலை உயர்த்த அங்கிருந்தவர்கள் எல்லாம் செல்போனில் பேசுபவனைத் திரும்பிப் பார்த்தார்கள்.
” அன்பே உன்ன நான் விட்டுற மாட்டேன் .நீ கலங்காத . நிச்சயமா நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்”
என்று அவன் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்த காதலியை பார்த்து பேசிக்கொண்டிருந்தான் காதலன்.
” எனக்கு என்னமோ நம்பிக்கை இல்ல; உங்க வீட்டுல ஒத்துக்குவாங்களா?
” அவங்க ஒத்துக்கலைன்னா என்ன? நாம ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று காதலர்கள் ஒரு மாதிரியாகப் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
இத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவர் தன் நீண்ட தாடியை நீவிக்கொண்டு அந்த மனிதர்களின் அத்தனை விஷயங்களையும் பார்த்துக் கோபமடைந்தார். இந்த அறிவற்ற மனிதர்களிடம் என்ன பேசுவது ? இவர்களின் அறிவு அபத்தமானது ” என்று நினைத்து வெளியேறினார். இருந்தாலும் அவர் மனது கேட்கவில்லை. அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒருவரை கூப்பிட்டார்.
“இங்க வாங்க ” என்றதும் அந்தப் பெரியவரின் தோற்றத்தைப் பார்த்த நபருக்கு எதற்காக நம்மை கூப்பிடுகிறார் என்று ஓடிவந்து
” என்னைய்யா ” என்றார்
“அங்க பாருங்க” என்று கை நீட்டினார்
“எங்க பாக்க சொல்றாரு இவரு?” என்று திரும்பிய அந்த நபர் பார்த்த இடத்தில் தியான அறை என்று எழுதி இருந்தது.
இதைப் பார்த்தவனுக்கு சுருக்கென்று வலித்தது. உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த அசிங்கங்களும் அந்தப் பூங்காவில் இருந்த தியான அறையில் அரங்கேறிக் கொண்டிருந்தன.தீட்சண்யம் நிறைந்த அந்தப் பெரியவர் பூங்காவின் ஒரு ஓரத்தில் அமர்ந்து கண்களை மூடினார். அவரின் தியானம் அங்கு அரங்கேறியது.சலசலப்பும் சல்லித்தனமான பேச்சுகளும் ஒலித்துக் கொண்டிருந்தன தியான அறையில்.
#சிறுகதை