செய்திகள் வாழ்வியல்

தியாகத் திருநாள் பக்ரீத் | சிறப்புக்கட்டுரை

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பாலைவனத்தில் ஏக இறைவனை வணங்குவதற்காக ஒரு ஆலயம் அமைக்கப்பட்டது. அதுவே மனித இனத்தின் நலனுக்காக அமைக்கப்பட்ட முதல் இறை ஆலயமாக கருதப்படுகிறது. ஒரு காலக்கட்டத்தில் இது மறக்கடிக்கப்பட்ட பொட்டல் காடாக மாறிவிட்டது.

ஆனால் இறைவன் அதனை மீண்டும் உருவாக்கி மக்கள் கூடும் இடமாகவும் உலகிற்கு வழிகாட்டும் மையமாகவும் மாற்ற நினைத்தான். அதுவே பக்கா என்றும் பிறகு பெயர் மருவி இன்று மக்கா என்றும் அழைக்கப்படும் இடமாகும். இவ்விடத்தை மீண்டும் வாழ்விப்பதற்காக இப்ராஹிம்(அலை) அவர்களை இறைத்தூதராக இறைவன் தேர்ந்தெடுத்தான். அவர் சிலைகளை வடித்து விற்கும் குடும்பத்திலே பிறந்திருந்தாலும் ஏக இறைக்கொள்கையில் நம்பிக்கை உடையவராக விளங்கினார்.

அவர்களுக்கு உருவ வழிபாட்டு முறை பிடிக்காத காரணத்தினால் குடும்பத்தினரும் ஊராரும் அவர்களை வெறுத்தனர். இந்நிலையில் அவர்கள் தம்முடைய கொள்கைளை பிரச்சாரம் செய்த போது அந்நாட்டு அரசரிடம் அவரை பிடித்து கொடுக்கிறார்கள்.

அவருக்கு பல்வேறு துன்பங்களும் அன்னல்களும் செய்யப்பட்டன .

எனவே அவர் அந்நாட்டை துறந்து பலஸ்தீனம் சென்று அங்குள்ள மக்களுக்கு போதனை செய்தார். அன்னார் மணமுடித்திருந்தாலும் குழந்தை இல்லாததால் இரண்டாவதாக மன்னர் குடும்பத்தைச்சேர்ந்த ஹாஜிரா என்பவரை மணமுடிக்கின்றார். இவர்களுக்கு மகன் பிறக்கின்றார். அவரே இஸ்மாயில். இந்நிலையில் இப்ராஹிம் (அலை) அவர்கள் மனைவி ஹாஜிராவையும் குழந்தை இஸ்மாயில் ஆகிய இருவரையும் பாலைவனத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிட்டு வருமாறு இறைக்கட்டளை பெறுகின்றார்கள்.

அவ்வாறே தண்ணீரோ புற்பூண்டோ கூட இல்லாத அந்தப் பாலை நிலத்தில் மக்கள் நடமாட்டமோ உணவுக்கான எந்த வழிமுறைகளும் இல்லாத அந்த கடும் வெயில் பிரதேசத்தில் அவர்கள் இருவரையும் தனியே விட்டுவிட்டு திரும்புகையில் எங்களை தனியே விட்டுவிட்டு தாங்கள் எங்கே செல்திறீர்கள் என்று கேட்டபோது பதில் பேசாது மெளனமான முறையில் இது இறைவனின் கட்டளையாகும் என்று சைகை மூலம் தெரிவிக்கின்றார்கள்.

ஹாஜிரா அம்மையார் இது இறைவனின் கட்டளையானால் அவன் எங்களை கைவிடமாட்டான் என உறுதியாக நம்பிக்கைக்கொள்கிறார்கள்..

மனைவியையும் மகனையும் பிரிந்து வந்த இப்ராஹிம் அவர்கள் இறைவனிடம் மன்றாடி பிரார்த்தனை செய்கிறார்கள். எங்கள் இறைவா உன்கட்டளையின் படியே உண்ணவும் குடிக்கவும் ஏதுமற்ற பாலைவனத்தில் உனது புனிதமான வணங்குமிடத்துக்கு பக்கத்தில் எனது குடும்பத்தினரை உன்னையே வணங்குவதற்காகவே விட்டுவிட்டேன். எனவே இறைவா மக்கள் எல்லாரும் இவரிடமும் இவரது வழித்தோன்றல்களிடமும் வந்து இவர்களுக்கு புத்தம் புதிய கனிகளை கொடுக்குமாவறு அவர்களின் உள்ளங்களைத்தூண்டு வாயாக; உனது வல்லமைகளைக் கண்டு உனக்கு நன்றி செலுத்துபவர்களாக ஆக்குவாயாக; நாங்கள் மறைப்பதையும் வெளியிடுபவற்றையும் நீ நன்கறிவாய். வானிலும் பூமியிலும் உனக்கு எதுவும் மறைவானதல்லஎன்று கூறுகிறார்.

பின்னர் உறுதிபூண்ட மனதுடன் அவர்கள் பீட்டிற்கு திரும்பி விடுகிறார்கள்.

அங்கே அந்த கடும் பாலை நிலத்தில் தனித்திருந்த அன்னை ஹாஜிராவும் குழந்தை இஸ்மாயிலும் கடும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். கொண்டு சென்ற உணவும் நீரும் சில நாட்களில் தீர்ந்துவிடவே பசியும் தாகமும் அவர்களை வதைக்கின்றது. அன்னையிடம் தாங்கும் சக்தி இருந்த போதிலும் குழந்தையின் நிலையைக்கண்டு பரிதவிக்கிறார்கள்.

உணவோ தண்ணீரோ எங்கேனும் கிடைக்குமா என அங்குமிங்குமாக அலைகிறார்கள். வழிதவறியாவது எவராவது வந்துவிட மாட்டார்களா? அவ்வாறு வந்தால் உதவி பெறலாமே என தவிக்கிறார்கள்.

அருகே இரண்டு குன்றுகள் இருந்தன. அந்த குன்றுகளின் மேல் ஓடிச்சென்று மாறி மாறி ஏறுவார்கள் நாலாப்புறமும் சுற்றிப்பார்ப்பார்கள். இவ்வாறு ஏழுமுறை செய்தார்கள். அவர்களின் தவிப்பைக் கண்ட இறைவன் அங்கே அடைபட்டு கிடந்த ஜம்ஜம் என்றும் நீருற்றை ஓடச்செய்தான்.

இவ்வாறே அவர்களுக்கு உண்ண பழமும் குடிக்க நீரும் கிடைத்தது. அதிலிருந்து தம் மகனும் தானும் நீர் அருந்தினார்கள்.

இறைவன் மேல் மேலும் அதிகமாக நம்பிக்கை வளர்த்தார்கள். அப்போது ஜர்ஹம் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பயணக்குழு பாதை தவறி இவர்கள் இருந்த இடத்தை அடைந்தார்கள். இவர்களிடம் தண்ணீர் காலியாகி இருந்தது. எனவே இவர்களின் அனுமதியுடன் அந்த பயணிகளும் அந்த ஜம் ஜம் நீரை பருகுகிறார்கள். தொடர்ந்து மீண்டும் அவ்விடம் வந்து தங்கிச்செல்ல கட்டிடம் ஒன்றையும் கட்டினார்கள்.

மேலும் தங்களை இஸ்மாயிலின் வழித்தோன்றல்கள் என்றும் அழைத்துக் கொண்டனர்

இவ்வாறாக அவ்விடம் சிறிது சிறிதாக வளர்ந்து ஊராக மாறி பக்கா என்றழைக்கப்பட்டு இன்றைக்கு மக்கா மாநகரம் என்னும் பெயரால் புகழ்பெற்று விளங்குகிறது.

இந்த வரலாற்றின் ஒரு பகுதியில் இஸ்மாயில் (அலை) அவர்கள் வாலிப வயதை அடைந்ததும் ஹஸ்ரத் இப்ராஹிம்(அலை) ஆகிய இருவரும் இணைந்து அவ்வூரில் ஏகத்துவ வழிபாட்டிற்காக முதன்முதலாக கட்டப்பட்ட அந்த இறை ஆலயத்தை இறைவனின் கட்டளைக்கிணங்க மறுநிர்மானம் செய்கிறார்கள். தற்போது அந்த ஆலயம் தான் பைத்துல்லாஹ் என்றழைக்கப்படுகிறது. இதன் மூலம் ஹஸ்ரத் இப்ராஹிம் ஹஸ்ரத் இஸ்மாயில் ஆகியோர்களின் மாபெரும் தியாகத்தால் ஆன்மீக உலகு உருவாவதற்கான அடிப்படை நிலை நாட்டப்பட்டது .

ஹஸ்ரத் இப்ராஹிம்(அலை) அவர்கள் தம் மகன் ஹஸ்ரத் இஸ்மாயில் (அலை) அவர்களை பலியிடுவது போல ஒரு கனவே தொடர்ந்து காணுகிறார்கள். இது பற்றி சிறுவனாக இருந்த இஸ்மாயிலிடம் கூறியவுடன் தந்தையே தாங்கள் இறைக்கட்டளையின் படியே நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் நாடினால் நான் பொறுமையுள்ளவனாக இருப்பேன் என்று பதிலளித்தார்கள்.

இப்ராஹிம்(அலை) அவர்கள் மகனை பலியிட துணிந்த போது இறைவன் அவரை தடுத்து நீர் ஏற்கனவே அந்தக் கனவை நிறைவேற்றி விட்டீர்கள் என்று கூறினான். அதாவது ஏற்கனவே மனைவியையும் மகனையும் பாலைவனத்தில் தனியே விட்டுவிட்டு வந்ததே அவர்களின் அந்த தியாகம் தான் கனவில் காட்டப்பட்டது . எனவே தமது கனவை ஏற்கனவே நிறைவேற்றி விட்டதை இறைவன் சுட்டிக்காட்டினான்

இவ்வாறான நிகழச்சிகளை நினைவு படுத்திகொள்ளவும் இறைவனுக்காக தியாகங்கள் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஹஜ்ஜீப் பெருநாள் என்னும் தியாகப்பெருநாள் கொண்டாடுகிறோம் .

இறைவன் நமக்கு சொல்லித்தரும் பாடம் என்னவென்றால் உலகிற்கு தன்னால் பலன் கிடைக்க வேண்டும் என்னும் நோக்கத்திற்காக தனக்கு ஏற்படும் தொல்லைகளை சகித்துக்கொள்வதே உண்மையான தியாகம் ஆகும் .

மக்கள் செத்து மடிய வேண்டும் என்று இறைவன் விரும்புவதில்லை. மக்கள் வாழ வேண்டும் என்பதையே இறைவன் விரும்புகிறான்.

மனித இனத்தின் வாழ்விற்காக செய்யும் தியாகங்களே இறைவனால் ஏற்றக்கொள்ளப்படும் .

இறைவன் நம் எல்லோருக்கும் உண்மையான தியாகம் செய்யும் வாய்ப்பைத் தந்தருள்வானாக .

– எழுதியவர் : எஸ்.எச்.எம் ஹிஸ்புல்லாஹ் ,சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *