சென்னை, ஏப். 15–
தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுகவின் தேர்தல் விளம்பரங்கள் சிலவற்றுக்கு அற்ப காரணங்களை கூறி, தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பதாக ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தார். மேலும் திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்க, நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆணையத்துக்கு உத்தரவு
இந்நிலையில், இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அளவிலான குழு முடிவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறை முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா? என்று திமுக தரப்பு எழுப்பிய கேள்வியை முன்னிட்டு, ஏப்ரல் 17-ம் தேதி விளக்கம் அளிக்க ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.