தெருத் தெருவாக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை முன்னால் காலை, மாலை இரவு என்று அறுசுவை உணவு விருந்து படைக்கப்பட்டது.
அன்று மதியம் சுரேஷ் தன் நண்பர்களுடன் சென்று வடை, பாயாசத்துடன் அறுசுவை விருந்துடன் மதிய உணவு சாப்பிட்டான் . சுடச்சுடப் பரிமாறப்பட்ட உணவையும் விநாயகரையும் ஒரு சேரப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டனர் சுரேஷும் நண்பர்களும்.
“மாப்ள இந்த விநாயகர் நமக்கு அறுசுவை விருந்து குடுத்திருக்கிறார். இன்னும் எத்தன நாளைக்கு இப்பிடி கெடைக்கும் “
“இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு கிடைக்கலாம். அவ்வளவு தான் “
“. அடடே… இந்த விநாயகர் சதுர்த்தி ஒரு வருசம் இருந்தா எப்படி இருக்கும்? காலை, மாலை, இரவுன்னு நல்லா சாப்பிடலாம்ல “
என்று எச்சில் ஊறச் சொன்ன நண்பனைத் தட்டிக் கொடுத்த சுரேஷ்
“ம்… ஒனக்கு உன் பிரச்சனை. விநாயகர சீக்கிரம் தண்ணியில கரைச்சா நமக்கு பிரச்சினை இல்லன்னு நாட்கள கஷ்டமா கடத்துற பாேலீஸ்காரங்களுக்கு பெரிய பிரச்சனை : இப்ப நமக்கு என்ன கெடைக்குதோ அத சாப்பிடுவோம் . நாளைக்கும் இதே இடத்தில இருப்பார் விநாயகர் “என்று சுரேஷ் சொல்ல, நண்பர்கள் சாப்பிட்டார்கள்.
மாலை அதே விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தில் சுண்டல் பொரியல் என்று சுவையாக வழங்கினார்கள். அதையும் வாங்கிச் சாப்பிட்டார்கள் சுரேஷ் நண்பர்கள்.அத்தனை கூட்டம் இருந்தாலும் அந்தக் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு வாங்கிச் சாப்பிடுவது என்பது அவர்களுக்குச் சுவையாகத் தான் இருந்தது . எதிரில் விநாயகர் சிலை கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அதற்கு இரண்டு காவலர்கள்; சுற்றிலும் மக்கள் என்று அந்த தெருவில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்
ஏன்டா விநாயகர் சதுர்த்தி முடியவும் சிலைகளை எல்லாம் கரைச்சிடுவாங்கல்ல.கஷ்டமா இருக்குடா. இன்னைக்கு இரண்டாவது நாள் சாப்பிட்டு இருக்கோம் . அதுக்கப்புறம் எங்க போய் சாப்பிடுவோம்? என்று விநாயகரை துதித்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
“இப்ப இந்தத் தெருவுல சாப்பிட்டு முடிச்சிட்டோம். அடுத்த தெருவில போய் பார்சல் வாங்கிக்கலாமா?”
என்று சுரேஷ் கேட்க
சரி என்று சுரேஷூம் நண்பர்களும் கிளம்பினார்கள்.அங்கேயும் விநாயகர் கம்பீரமாக வீற்றிருந்தார் தெய்வ பக்தி மேலிட விநாயகரைக் கும்பிட்டு விட்டு அங்கு போடும் சாப்பாட்டைப் பார்சலாக வாங்கினார்கள்.
” தம்பி, பார்சல் எல்லாம் வாங்க கூடாது .இங்க தான் சாப்பிடணும்”
என்று அங்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருப்பவர் சொல்ல
“இல்ல சார் வீட்ல நடக்க முடியாத பாட்டி . அதனாலதான் பிரசாதம் வாங்கிட்டு போறோம்”
என்று சொல்ல
“அப்படியா அப்படின்னா நிறைய வாங்கிட்டு போங்க” என்று அள்ளிப் போட்டான் அங்கு பரிமாறிக் கொண்டிருப்பவன்.
சுரேஷும் அவன் நண்பர்களும் பார்சலை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்தார்கள்.
” மாப்பிள்ள இன்னொரு ரவுண்டு போலாமா?
“சரி” என்று அடுத்த தெருவுக்குப் போனார்கள். அங்கேயும் கம்பீரமாக வீற்றிருந்தார் விநாயகர். அங்கேயும் பார்சலை வாங்கினார்கள்.
” எங்க தாத்தாவுக்கு விநாயகர்னா ரொம்ப பிடிக்கும். தாத்தா நடக்க முடியாம வீட்டில படுத்து இருக்காரு. அதுக்காக தான் இந்த பார்சல் என்று கூறி வாங்கினார்கள்.
அடுத்த தெருவுக்கும் சென்றார்கள். அங்கேயும் கம்பீரமாக வீற்றிருந்தார் விநாயகர் .அங்கேயும் ஒரு பொய்யைச் சொல்லி பார்சலை வாங்கினார்கள்.
” மாப்பிள்ளை நாலு நாளைக்கு நமக்கு சாப்பாடு கிடைச்சிடுச்சு. சோர்ல தண்ணி ஊத்தி வச்சுருவோம்.கெட்டுப்போகாதுஎன்று அன்று இரவு மறுபடியும் இன்னொரு தெருவில் சாப்பிட்டு வந்தார்கள்.
உண்மையில் அன்று இரவு நான்கு நாட்களுக்கு உணவைச் சேமித்து வைத்ததாகச் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள். அன்று நடுச்சாமம் அவர்கள் வீட்டின் முன்னால் யாரோ கதவு தட்டினார்கள்.
“யார் இந்த நேரம் ? என்று சுரேஷ் கதவு திறந்தான்.
“ஐயா பசிக்குது” என்று ஒரு குடும்பமே நின்றிருந்தார்கள்.
“கொஞ்சம் பொறுங்க ” என்ற சுரேஷ் வீட்டின் உள்ளே நுழைந்து சேமித்து வைத்திருந்த உணவை எடுத்து வந்து கொடுத்தான். பசியில் மயங்கிக் கிடந்தவர்கள் அரக்கப் பரக்கச் சாப்பிட்டார்கள்.அதற்குள் மற்ற நண்பர்களும் விழித்துக் காெண்டார்கள்.
“மாப்ள, நாம உணவ சேமிச்சு வச்சோம். விநாயகர் இப்பவே எல்லாருக்கும் குடுக்க வச்சிட்டாரு. ” என்று நண்பர் சொல்ல
கம்பீரமாக வீற்றிருந்தார் விநாயகர்.
#சிறுகதை