செய்திகள்

தினகரன் கட்சி வேட்பாளர் மீது இளம் பெண் ‘செக்ஸ்’ புகார்

தேனி, ஏப்.11-

முழங்கால் வலிக்காக சிகிச்சைக்கு சென்றபோது மயக்க ஊசி போட்டு பலாத்காரம் செய்ததாக, பெரியகுளம் அ.ம.மு.க. வேட்பாளர் டாக்டர் கதிர்காமு மீதான புகாரில் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. (தினகரன் கட்சி) சார்பில் போட்டியிடுபவர் டாக்டர் கதிர்காமு (வயது 61). கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவரான இவர் மீது, பெண் ஒருவர் தற்போது பாலியல் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தமிழக தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

‘எனது தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 2015-ம் ஆண்டு அல்லிநகரத்தில் உள்ள டாக்டர் கதிர்காமுவின் மருத்துவமனைக்கு சென்றோம். அப்போது எனக்கும் முழங்கால் வலி ஏற்பட்டதால் அவரிடம் வைத்தியம் பார்க்க நேரிட்டது. இதில் எனக்கு மயக்க ஊசி போட்டதால் நான் மயங்கிவிட்டேன்.

மயக்கத்தில் இருந்தபோது, டாக்டர் கதிர்காமு என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அவரிடம் நியாயம் கேட்டபோது, நான் மயக்கத்தில் இருந்தபோது பல புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் அதை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டினார்.

பின்னர் அவர் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார். பலமுறை அவரை தொடர்புகொண்டு என்னுடைய புகைப்படம், வீடியோக்களை கொடுத்துவிடுங்கள் என்று கேட்டேன். இதற்காக கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அவருடைய அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது அங்கு கதிர்காமுவுடன் இன்னொரு எம்.எல்.ஏ. மற்றும் 3 பேர் இருந்தனர். அவர்கள் சென்ற பிறகு, அந்த எம்.எல்.ஏ.வும் என் மீது ஆசைப்படுவதாக கதிர்காமு கூறி மிரட்டினார்’.

இவ்வாறு அந்த பெண் புகார் அளித்துள்ளதாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பிரச்சாரம் ரத்து

இதற்கிடையே டாக்டர் கதிர்காமு பெரியகுளம் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் மீது பாலியல் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதால் நேற்று அவர் தனது பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *