செய்திகள்

திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திண்டுக்கல், ஜூன் 23–

திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பதவியேற்றார். திருப்பூரைச் சேர்ந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று மாநிலத்தில் 5-ம் இடத்தையும், பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பிடித்தார். அதன் பின்னர் அரசு பணியில் தனது முதல் பயணத்தை தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ஆணையராக மகேஸ்வரி தொடங்கினார். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை சிறந்த நகராட்சியாக மாற்றியதற்காக கடந்த 2014ம் ஆண்டு விருது பெற்றார்.

விருது பெற்றவர்

அதன் பின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். குமாரபாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2018-ம் ஆண்டு இவருக்கு விருது வழங்கப்பட்டது. 2019-ம் ஆண்டில் தர்மபுரியை சிறந்த நகராட்சியாக மாற்றியதற்காகவும் விருது வழங்கப்பட்டது.

திண்டுக்கல்லில் மாநகராட்சி ஆணையராக பதவியேற்ற மகேஸ்வரி ஆர்.எம்.காலனி 1-வது கிராஸ் பகுதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் குடியிருந்து வருகிறார். இவரது கணவர் மருந்துகள் விற்பனை பிரிவில் பணிபுரிந்து வருகிறார். மகள் வெளியூரில் படித்து வருகிறார்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி வீட்டுக்கு இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் வந்தனர். அவர்கள் மகேஸ்வரி வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

வீட்டில் இருந்த ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றை எடுத்து சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது வேறு யாரும் அந்த குடியிருப்புக்குள் அனுமதிக்கப்படவில்லை.

காஞ்சிபுரத்தில் பணியாற்றியபோது கொரோனா காலக்கட்டத்தில் கிருமிநாசினி கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் வெளியூரில் வசித்து வருகின்றனர். காஞ்சிபுரம் உள்பட மகேஸ்வரியின் உறவினர் 5 பேர் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *