சென்னை, செப். 13–
புதுக்கோட்டை மற்றும் நாமக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் மணல் குவாரிகளில் சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை, திண்டுக்கல்லை சேர்ந்த தொழிலதிபர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் அமலாக்கத்துறையின் நேற்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
அதன்படி நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் அள்ளி அதனை சேமித்து வைக்கும் செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான மணல் கிடங்கிலும் மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் அமலாக்கத்துறையை சேர்ந்த 10 அதிகாரிகள், 7 பேர் கொண்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையுடன் செவிட்டுரங்கன்பட்டிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மணல் கிடங்கு அலுவலகத்தில் திடீரென சோதனையை தொடங்கினர்.
2வது நாளாக சோதனை
இந்த சோதனையில் ஆற்றிலிருந்து எவ்வளவு மணல் அள்ளி வந்து சேமிக்கப்படுகிறது. அதில் எவ்வளவு மணல் விற்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் பதிவு மூலம் எவ்வளவு விற்பனை நடைபெற்று உள்ளது. அதற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது குறித்தும், அதற்கான ஆவணங்கள் முறையாக உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 2-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. சோதனையையொட்டி மணல் குவாரிக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. பாதுகாப்புக்காகத் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் உள்ள நிலையில் சோதனை நடக்கிறது.
இந்த சோதனை நடைபெற்றுவரும் நிலையில், தொழிலதிபர் ரத்தினம் எங்கிருக்கிறார் என்ற விவரம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளன. சோதனையைத் தொழிலதிபர் ரத்தினம் நடத்தி வரும் நிறுவனங்கள், செங்கல் சூளை, பெட்ரோல் பங்குகளில் விரிவுபடுத்தப்படலாம் என அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் ராமச்சந்திரன் வீடு, அலுவலகங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுகிறது . ராமச்சந்திரன் உறவினர் வீரப்பனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், புதுக்கோட்டையில் பிரபல மணல் குவாரி உரிமையாளர் கரிகாலன் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.