விழுப்புரம், ஜன.11–
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், திண்டிவனத்தில் ரூ.20 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணி, சலவாதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப்பணி மற்றும் மேல்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமானப்பணியினை மாவட்ட கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில் கூறியதாவது:–
திண்டிவனத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்புதிய பேருந்து நிலையத்தில், பேருந்து நிலைய வளாகத்தில், 50 பேருந்து நிறுத்தங்கள், 61 – கடைகள், 4 – தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம்,1 – சைவ உணவகம், 1 – அசைவ உணவகம், 1 – பொருள்கள் வைப்பறை,10 – காத்திருப்பு கூடம், 6 – நேரக்காப்பகம், 1 – காவல்துறை கட்டுப்பாட்டு அறை, 1 – நான் உங்களுக்கு உதவலாமா அறை, 1 – பேருந்து முன்பதிவறை, 1 – ரெயில் முன்பதிவறை, 1 – ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வறை போன்ற கட்டுமானப்பணிகள் அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கட்டப்பட்டு வருவதை நேரில் ஆய்வு மேற்கொண்டதுடன், கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட சலவாதி ரோட்டில் ரூ.268 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மேல்பாக்கம் ஊராட்சியில், தாட்கோ மூலம் ரூ.5.94 கோடி மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டட கட்டுமானப்பணியினை நேரில் பார்வையிட்டதுடன், மாணவர் விடுதியில் தரைதளத்தில் கழிவறை வசதியுடன் கூடிய 9 அறைகளும், முதல் தளத்தில் கழிவறை வசதியுடன் கூடிய 11 அறைகளும், சமையலறை, விடுதி காப்பாளர் அறை உள்ளிட்டவை கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
ஆய்வின்போது, திண்டிவனம் நகராட்சி ஆணையர் குமரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சுரேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.