சிறுகதை

திடீர் திருமணம் | ராஜா செல்லமுத்து

பத்திரிக்கை அடித்து சொந்த பந்தம் உற்றார் உறவினர்கள் என்று அத்தனை பேருக்கும் கொடுத்தாயிற்று. இன்னும் இரண்டு நாட்கள் தான் திருவுக்கு திருமணம். அவன் மனம் முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் மடை திறந்து ஓடியது.

சந்தோசம் இதுவென்று சொல்ல தெரியாத மகிழ்ச்சியில் இருந்தான் திரு.

‘‘திரு இப்ப சந்தோஷம் தானே.’’ அம்மா பார்வதி கேட்டாள்.

‘‘இல்லம்மா எனக்கு சந்தோசம்ன்னு சொல்றத விட உனக்கு வேலைய குறைக்கத்தான் நான் இந்த கல்யாணமே பண்றேன் ’’ என்று திரு சொன்னபோது பார்வதியின் கண்கள் பணித்தன.

‘‘இல்ல சாமி பொண்ணு உன்னை விட கொஞ்சம் கூடுதலா படிச்சி இருக்கா. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு ’’பார்வதி கொஞ்சம் எச்சில் விழுங்கியவாறே பேசினாள்.

‘‘அதுக்கு என்னமா… அவங்க வீட்டுல கேட்டுட்டு தானே பத்திரிக்கை அடிச்சிருக்கோம். அந்த பொண்ணுக்கு தெரியாதா என்ன: ராஜேஸ்வரி அப்படிப்பட்ட பொண்ணு இல்லன்னு நினைக்கிறேன் ’’என்று திரு ரொம்பவே நம்பிக்கையோடு பேசினான்.

‘‘ம் – அதுக்கு இல்லடா.கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சினைன்னா அதான் முதலிலேயே உன்கிட்ட கேட்டுட்டேன்’’ என்று அம்மா பார்வதி சொன்னாள்.

‘‘சரிமா ராஜேஸ்வரி என்னை விட கொஞ்சம் அதிகம் படிச்சவ தான்.. அவ கிட்ட கேட்டுட்டு தானே முடிவு பண்ணீங்க. ஆமா அப்புறம் என்னமா பயம் . நடக்கிறது நல்லபடியா நடக்கட்டுமே’’ என்று திரு மீதமிருக்கும் நண்பர்களுக்கும் பத்திரிக்கை கொடுத்துக் கொண்டிருந்தான்.

திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. திருமண வேலைகளை தடபுடலாக செய்து கொண்டிருந்தான் திரு.

‘‘ டேய் திரு புது மாப்பிள்ளையா ரொம்ப வேகமா வேலை செய்றாப்

போல ’’ நண்பர்கள் திருவை கேலி செய்வதுபோல் பேசினார்கள் .

‘‘ஆமாடா இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. வேலை ரொம்ப இருக்குடா என்று நின்று கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான் திரு.

அன்று இரவு வழக்கம் போலவே இருந்தது.

ஆனால் ஒரு பெரிய பேர் இடி திருவின் இதயத்தில் இறக்கியது.

‘‘ என்ன சொல்றீங்க உண்மையாவா நீங்க சொல்றது நிஜமாவா என்று திரு பயத்துடன் கேட்டான்.

‘‘ஆமா உண்மைதான் இத எப்படி திரு தாங்க போறான்’’ என்று உறவுகள் அந்த இரவே பேசிக்கொண்டன .

திரு அப்படியே உட்கார்ந்தான்.

‘‘இது நிஜமாவா’’ இதோடு நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பான்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவனுக்கு யாரும் பதில் சொல்லவே இல்லை நிலைகுத்தி நின்ற கண்களோடு நின்றான்.

‘‘விடுடா அந்த பொண்ணுக்கு உன் கூட வாழ கொடுத்து வைக்கல ன்னு நினைக்கிறேன். சரி போனா போறா. அவளுக்கு அவ்வளவுதான் புத்தி ன்னு நினைச்சுக்க…’’என்று திருவுக்கு உறவுக்காரர்கள் எல்லாம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இருந்தாலும் அவனின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருந்தது. அந்த இரவே ராஜேஸ்வரியின் வீட்டார்கள் திருவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

‘‘மாப்பிள்ளை என்னை மன்னிச்சிடுங்க. என்னோட மூத்த பொண்ணு இப்படி செய்வான்னு நினைச்சு கூட பாக்கல. இந்த அவமானம் உங்களுக்கு மட்டுமில்ல எங்க குடும்பத்துக்கு ரொம்பவே அசிங்கம். குறித்த தேதியில் குறித்த மண்டபத்துல உங்களுக்கு கல்யாணம் நடக்கும். இது சத்தியம் .என்னோட இரண்டாவது மகள் கூட உங்களுக்கு கல்யாணம். இது எங்க அம்மா மேல சத்தியம் என்று ராஜேஸ்வரியின் தந்தை திருவிடம் சத்தியம் செய்து விட்டுப் போனார்.

ராஜேஸ்வரியின் அப்பா பேசியதை திருவின் குடும்பமே ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘‘நீங்க ஒண்ணு வருத்தப்படாதீங்க கண்டிப்பா குறித்த நேரத்தில் குறித்த தேதியில் கல்யாணம் நடந்தே தீரும் என்று திரும்பவும் சொல்லிவிட்டுச் சென்றார் ராஜேஸ்வரியின் அப்பா என்ன திரு இவர் சொல்றது உனக்கு பிடிச்சிருக்கா என்று திருவின் குடும்பம் திரு விடம் கேட்டபோது பட்ட அவமானத்தை மறைப்பதற்கு இதைவிட வேறு வழியில்லை என்று எதுவும் பேசாமல் வீட்டுக்குள் சென்றான்.

வீட்டிற்கு வந்த ராஜேஸ்வரியின் அப்பா ராஜேஸ்வரியின் தங்கை ரம்யாவிடம் திரு குடும்பத்தில் பேசிய அத்தனையும் ஒப்பித்தார்.

முதலில் தயங்கிய ரம்யா சரிப்பா உங்களுக்கு ஒரு அவமானம்னா அது எனக்கும் தான்.அக்கா இப்படி செய்வாங்க நமக்கு யாருக்குமே தெரியாது..நம்ம குடும்பத்தை ரொம்பவே அசிங்கப் படுத்திட்டு போயிட்டா. நான் கண்டிப்பா நீங்க சொல்ற கட்டளைக்கு நான் கட்டுப்படுகிறேன் என்று ரம்யா அப்பாவிடம் சத்தியம் செய்தாள்.

குலுங்கிக் குலுங்கி அழுத ராஜேஸ்வரியின் அப்பா தன் மகள் ரம்யாவின் கையைப் பிடித்துக்கொண்டு ,

‘‘இந்த மாதிரி ஒரு அசிங்கத்தை உங்க அக்கா பண்ணிட்டு போவான்னு கனவுல கூட நான் நினைக்கலம்மா. இது நம்ம குடும்பத்துக்கு பெரிய களங்கம் ஆயிருப் திரும்ப கல்யாணம் பண்றது நல்லது. உன்ன நான் கேட்காமல் அங்க சத்தியம் பண்ணிட்டு வந்தது தப்புதான் என்னை மன்னிச்சிடு மா என்று ரம்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு அழுதார்.

அப்பா பேசியதை தலையாட்டிக் கொண்டே ரம்யா பதில் ஏதும் பேசாமல் கண்களில் கண்ணீரோடு குடும்பத்தில் சுற்றி நின்று கொண்டிருப்பவர்களை பரிதாபத்தோடு பார்த்தாள்.

குடும்பமே ரம்யாவின் சம்மதத்திற்கு தலையாட்டினார்கள்.

ஏற்கனவே அடித்த பத்திரிக்கையில் குறித்த தேதியில் குறித்த மண்டபத்தில் திருவுக்கும் ரம்யாவுக்கும் திருமணம் நடந்தேறியது.

இதனால் ஊராரின் பழிச்சொல் இரண்டு குடும்பங்கள் மீதிருந்த அவமானம் கொஞ்சம் விலகியது.

பத்திரிகையில ஒரு பேரு மணமேடையில் இன்னொரு பொண்ணு .நல்ல கூத்தா இருக்கு டா இது என்று ஊரார்கள் சிலர் சிரித்துக்கொண்டு பேசினார்கள்.

அன்று முதல் இரவு .திரு ஏற்கனவே பட்ட அசிங்கமும் அவமானமும் ஒரு சேர அவன் மனதில் இருந்தாலும் ரம்யாவை கரம் பிடித்ததில் அவமானம் கொஞ்சம் அழிந்துவிட்டதாக உணர்ந்தான்.

என்ன இருந்தாலும் இளமை அல்லவா ? அதுவும் தாலி கட்டிய மனைவி.

இளமையோடு இருப்பதைப் பார்த்த திருவிற்கு இளமையின் துள்ளல் துளிர்விட ஆரம்பித்தது.

முதலிரவு அறைக்குள் நுழைந்த ரம்யாவை ஆசையோடு பார்த்தான் திரு.

இது எதையும் சட்டை செய்யாத ரம்யா பாலை குருவிடம் கொடுத்து விட்டு கொஞ்சம் தள்ளி நின்றாள்.

பாலைக் குடித்துக்கொண்டே ரம்யாவை ஓரக்கண்களால் பார்த்தான். ஆனால் அவளோ இது எதையும் சட்டை செய்யாமல் வேறு திசையில் திரும்பி நின்று கொண்டிருந்தாள்.

சம்பிரதாயப்படி தம்ளரில் இருந்த பாதி பாலை குடித்துவிட்டு மீதத்தை ரம்யாவிடம் நீட்டினான். அவள் அலட்சியத்தோடு அந்தப் பாலை வாங்கி அருகில் இருக்கும் மேஜையின் மீது வைத்தாள். தன் அருகில் வருவாள் தன்னை கொஞ்சுவாள். இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்த ஆசைகளை அவளின் மீது கொட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த திருவிற்கு அவளின் வார்த்தைகள் தலையில் இடியை இறக்கியது.

‘‘இங்க பாருங்க என்கிட்ட என்ன ஏதுன்னு கூட கேட்காமல் எங்க அக்கா ஓடிப்போயிட்டா அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக என்னைய உங்க தலையில கட்டி வச்சுட்டாங்க. அதனால என்னோட மனசு மாறுவதற்கு கொஞ்சம் டைம் ஆகும். ஏன்னா நான் உங்கள என்னோட புருஷன் ஸ்தானத்துல வச்சு பார்க்கல. இந்த உறவு , இந்த திருமணம் , எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. அதனால என்னோட மனசு மாறுற வரைக்கும் இந்த முதலிரவு அது இதுன்னு எதுவும் இப்ப வேண்டாம் . அதைப்பற்றி நீங்க என்கிட்ட கட்டாயப்படுத்தவும் கூடாது .வாழ்க்கையில் முன்னேறுங்கள் . நீங்க என்ன வேலை பாக்குறீங்க, அப்படின்னு கூடத் தெரியாது. என்ன சம்பாதிச்சு இருக்கீங்க என்று கூட தெரியாது. ஜெயிக்க முயற்சி பண்ணுங்க அதுக்கப்புறமா நம்ம முதலிரவு வச்சுக்கலாம்; குழந்தை பெற்றுக்கொள்ளலாம். ஒரு வருஷத்துக்கு நமக்குள்ள எந்த தாம்பத்தியமும் வேண்டாம் என்று அடித்துச் சொன்னாள் ரம்யா.

தாலி கட்டிய மனைவி இப்படி பேசுவாள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்காத திரு அவளை ஏறிட்டுப் பார்த்தான் .

விருப்பமில்லாத பெண்ணிடம் எப்படி உறவு கொண்டாடுவது. அந்த முதலிரவு விளக்குகள் அணைக்கப் படாமலே இரவு விடிந்தது. திருவின் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏக சந்தோசம் களங்கத்தை தொலைத்து விட்டோம். மகன் இப்பொழுது சந்தோஷமாக இருக்கிறான் என்று திருவின் குடும்பம் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் முதலிரவு அறைக்குள் நடந்த உண்மையை அவன் யாரிடமும் சொல்லவில்லை.

குடும்பம் விருத்தியடையும் என்று திருவின் அப்பா அம்மா சந்தோசப் பட்டுக் கொண்டிருந்தார்கள். மறுநாள் அதே முதலிரவு அறை திரு ரம்யாவின் பேச்சிற்கு மறு வார்த்தை எதுவும் பேசாமல் தரையில் படுத்திருந்தான்.

ரம்யா கட்டிலில் படுத்திருந்தாள் .

வானத்தின் நுனியில் நின்று கொண்டிருந்த நிலா இப்போது உச்சியில் பிரகாசித்துக் கொண்டிருந்தது .

முன்னிரவு முடிந்து பின் இரவுக்கு தயாராகிக் கொண்டிருந்தது வானம். ஊரெங்கும் ஒரே நிசப்தம். இளமையின் புயலை இறுக அணைத்துக் கொண்டு தனியே படுத்துக் கிடந்தான் திரு. அப்படி அவன் தூங்கிக் கொண்டிருக்கும் நடுநிசியில் ஏதோ அரவம் கேட்டு எழுந்து உட்கார்ந்தான் . கட்டிலில் படுத்திருந்த ரம்யா இரண்டு கால்களுக்கிடையில் தன் முகத்தை புதைத்து அழுது கொண்டிருக்கும் அழுகுரல் கேட்டது.

யார் இது அழுகிறது என்று வியப்பாய் பார்த்தவனுக்கு பகீரென்றது ரம்யா செல்போனில் யாருடனோ பேசியபடியே அழுது கொண்டிருந்தாள். இந்த நேரம் யார் கிட்ட பேசிட்டு இருக்கா.இந்த பொண்ணு ஒருவேளை அவங்க அப்பா அம்மா கிட்ட பேசிட்டு இருக்கோ என்னவோ என்று ரம்யாவின் அருகே வந்தான் திருதிருவை பார்த்ததும் நிலைகுலைந்த ரம்யா,

‘‘ தப்பா நினைக்காதீங்க நான் செல்போன்ல எங்க அம்மா அப்பாட்ட பேசல. நான் ரமேஷ் என்னோட பிரண்டு கூட தான் பேசிட்டு இருக்கேன் . அவரு என்னோட அண்ணன் மாதிரி. அவர் கிட்ட தான் நடந்த எல்லா உண்மையும் சொல்லிக்கிட்டு இருக்கேன். ஏன்னா அவருக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாது. அவரு ரொம்ப நல்லவரு. நான் சென்னையில வேலை பார்த்துட்டு இருக்கும்போது கூட அவங்க வீட்டுல போயி நான் ஒரு மாசம் தங்கி இருக்கேன். ரமேஷ் அண்ணன் அவங்க அம்மா மட்டும் தான் வீட்ல இருப்பாங்க.அவரு ரொம்ப நல்லவரு. அவர் தப்பான ஆளில்லை. நான் அவர் கூட பேசுறேன். நீங்க அவருடைய ஏன் பேசுறீங்க ன்னு என்னை சந்தேகப்படக்கூடாது. நான் அவரோட தான் பேசுவேன். நீங்க என்னைய எதுவும் கேட்கக்கூடாது என்று ஒரு பெரிய இடியை திருவின் தலையில் இறக்கினாள் ரம்யா.

அவர் யாரு சொந்தமா இல்ல அவர் எப்படி உனக்கு தெரியும் என்று திரு கொஞ்சம் கோபமாகவே கேட்டான்.

‘‘இல்ல அவரு என்னுடைய காலேஜ் மேட். நானும் அவரும் ஒன்னாத் தான் படிச்சோம். எத்தனையோ பேரு என்கூட படித்திருந்தாலும் ரமேஷ் அண்ணன் ரொம்ப நல்லவரு என்று மீண்டும் மீண்டும் ரமேஷ் பற்றி பேசிக் கொண்டே இருந்தாள் ரம்யா.

சரிம்மா கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி இருந்திருக்கலாம். ஆனா இப்ப நீ என்னோட மனைவி. இதெல்லாம் இனிமேல் வச்சுக்க கூடாது. பகல்ல பேசு. வேண்டாம்னு சொல்லலை. இந்த அர்த்த ராத்திரியில் பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம். இனிமேல் நீ அவர் கூட பேசக்கூடாது என்று சொன்னான் திரு.

இல்ல நான் ஒரு கூட அப்படிதான் பேசுவேன். அவரோட பேசுறதுக்கு நீங்க தடை சொன்னீங்கன்னா நான் வீட்டைவிட்டு போயிருவேன் . கண்டிப்பா அவர் எனக்கு வேணும் என்று திருவிடம் எதிர்த்துப் பேசினாள் ரம்யா.

ரம்யா பேசுவதை எதிர்பார்க்காத திருவிற்கு கடும் கோபம் வந்தது.

‘‘அடிப்பாவி உங்க அக்காவாவது கல்யாண பத்திரிக்கை அடிச்சதுக்கு அப்புறம் யாரையோ கூட்டிட்டு போனா? அவ எங்கன்னு இன்ன வரைக்கும் தெரியல. ஆனா அவ நான் தாலி கட்டாமலே இன்னொருத்தன கூட்டிட்டு ஓடிட்டா. அவளக் கூட ஒருவகையில் மன்னித்துவிடலாம். ஆனால் நீ என்னடான்னா என்னை சாட்சிக்கு வச்சுக்கிட்டு இன்னொருத்தன் கூட பேசிகிட்டு இருக்கே. அதுவும் நான் கட்டின தாலிய உன் கழுத்துல சுமந்துகிட்டு. ஒருவகையில் உங்க அக்கா கூட நல்லவ. நீ ரொம்ப மோசம் ’’என்று தன் தலையில் அடித்துக் கொண்டான் திரு.

‘‘ஆமா நான் ரமேஷ் அண்ணா கூட அப்படிதான் பேசுவேன் . அதை நீங்க கேட்கக் கூடாது. ஏன்னா நான் உங்கள பார்த்து கல்யாணம் பண்ணல ; என்னைக் கேட்டு நிச்சயம் பண்ணல; இது எனக்கு பிடிக்காத திருமணம் தான்.

உங்க மூஞ்சியை நான் இதுக்கு முன்னாடி பார்த்தது கூட இல்லை. அப்புறம் எப்படி உங்க கூட……வாழச் சொல்றீங்க. என்னால முடியாது. நான் ரமேஷ் கூட அப்படிதான் பேசுவேன். இத நீங்க கண்டிச்சா நான் வீட்டு விட்டு ஓடிப் போய் விடுவேன் என்று பயமுறுத்தினாள் ரம்யா .

அவள் பேசுவது அத்தனைக்கும் உள்வாங்கிய திருவிற்கு மனம் குமுறியது.

நான் வாங்கி வந்த வரமா இது .பொண்ணு பாத்து நிச்சயதார்த்தம் பண்ணி பத்திரிக்கை அடிச்சு ஊரெல்லாம் கொடுத்ததுக்கு அப்புறம் உங்க அக்கா ஓடிப் போயிட்டா. அதுபெரிய அசிங்கமா இருந்தது . நான் உன்ன கல்யாணம் பண்ணனும்னு சொல்லல. உங்க அப்பாதான் இந்த முடிவு எடுத்தார் அதற்கு நான் பொறுப்பல்ல .ஏதோ போன ஜென்மத்துல உங்க குடும்பத்துக்கு நான் துரோகம் பண்ணி இருக்கேன் போல .அதான் இப்ப நீங்க என்னைப் பழி வாங்குகிறிங்க என்று கண்ணீர் விட்டு அழுதான் திரு.

திரு பேசியதை எதுவும் சட்டை செய்யாமல் அவன் எதிரிலேயே ரமேஷுடன் பேசிக்கொண்டிருந்தாள் ரம்யா.

அவன் இரவுகள் வெளியில் இருப்பவர்களுக்கு சந்தோசமான இரவாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ரணங்களை சுமந்துகொண்டு இருக்கும் பொழுதுகள் என்று யாருக்கும் தெரியாது. இரண்டு பேருக்குமான இந்த ரகசிய விவரங்களை திரு யாரிடமும் சொல்வதில்லை.

வெளியில் பேசும்போது ரம்யாவை உயர்ந்த இடத்தில் வைத்தே பேசுகிறான். தன்னைவிட்டு ஓடிப் போனால் தனக்கு பெருத்த அவமானம் ஏற்படும் என்று நினைத்த திரு ரம்யா செய்வதை எதுவும் கேட்பதில்லை.

ஒவ்வொரு இரவும் இவன் தரையில் படுத்து இருப்பான். அவள் மெத்தையில் படுத்துக்கொண்டு ரமேஷ் உடன் பேசிக்கொண்டிருப்பாள்.

அந்த மௌன இரவுகளில் கைகளை மடக்கி தலையணையாக அதை வைத்துக்கொண்டு கண்ணீர் ஒழுக ஒழுக தூங்கிக்கொண்டு இருப்பான் திரு. ரம்யா மெத்தையில் அமர்ந்தபடியே ரமேசுடன்.உடன் பேசிக் கொண்டிருப்பாள். இந்த பொய்யான வாழ்க்கையின் தூரம் எவ்வளவு நாட்களுக்கு போகுமென்று யாருக்கும் தெரியாது .

திருவின்அழுகையும் அவன் அவமானங்களையும் அவன் யாரிடமும் சொல்வதில்லை .

நிறைய இரவுகள் கழிந்து இருக்கின்றன.

அவன் முதல் இரவு தான் எப்போது என்று யாருக்கு தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *