சிறுகதை

திசை மாறிய மேகங்கள் – எம்.பாலகிருஷ்ணன்

அன்று மாலை

அருகில் உள்ள முருகன் கோவிலில் கனகா. கணவனுடன் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வரும் போது அவளது அம்மா அப்பா நேர் எதிராக வந்ததை எதார்த்தமாக பார்த்து விட்டாள்.

அவள் பார்த்து விட்டதை அவளுடைய அம்மா அப்பா கவனித்தவர்கள். உடனே கோபத்துடன் முகத்தை வேறொரு பக்கம் திருப்பிக் கொண்டனர்!

அதிர்ச்சியடைந்தாள் கனகா.

இதை கவனித்த கணவன் குமார் கனகா இன்னும் உங்க அம்மா அப்பா நம்ம மேல இருக்கும் கோபம் தீரலபோல. நீ அவங்கள பார்த்ததும் முகத்தை திருப்பிட்டு போறாங்க” அவன் சொன்ன விசயத்தைக்கேட்டு கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறே மௌனமாக நடந்து வந்தாள் கனகா அவனது கரங்களைப் பிடித்துக் கொண்டாள்.

அவளது பதில் என்னவாக இருக்கும் என்று அனுமானித்துக் கொண்டவன் ‘‘சரி வா வீட்டிற்கு போகலாம்” என்று கூறிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அவளை ஏற்றிக்கொண்டு வீட்டு வந்து சேர்ந்தான் குமார்.

வீட்டினுள் சென்றவர்கள் சோபாவில் அமர்ந்தவாறே கோவிலில் நடந்த விசயத்தை எண்ணி சற்று நேரம் அமைதியாகவிருந்தனர்.

வீடே நிசப்தமாய் இருந்தது போல் இருந்தது. கனகாவின் முகத்தை பார்த்தவன் சோகம் அவள் முகத்தில் அப்பி இருந்ததை அவன் கண்டான்.

பிறகு அவனே “என்ன கனகா கோவிலில் உங்க அம்மா அப்பா உன்னை பாக்காம போனதை நினைச்சி கவலையா இருக்கா? எல்லாமே என்னால் தானே இவ்வளவு பிரச்சனைக்கு காரணம்” என்று பேசி முடிப்பதற்குள் சட்டென கோபம் கொண்டவளாய் ஏங்க இப்படி பேசுறீங்க? எல்லாத்துக்கும் உங்களையே குற்றம் சொல்றீங்க’’ என்றாள்.

“ஆமாம் நீ உங்கப்பா அம்மாவோட சந்தோசமாய் இருந்த நான் உன்னை காதல் பண்ணி கல்யாணம் முடிச்சதுனால தானே அவங்கள விட்டு பிரிஞ்சி வந்துட்டே.

“இந்தக் கல்யாணம் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு தானே. எப்படி உங்கள மட்டும் பொறுப்பாக்க முடியும். அப்படிப் பாத்தா நீங்களும் தானே உங்க அம்மா அப்பாவை பிரிஞ்சி வந்திட்டீங்க?

குமார் பதில் சொல்ல முடியாமல் மௌனம் காத்தான்.

“நீயும் நானும் அவங்க அப்பா அம்மாவ பார்க்க முடியாம இருக்கோம். ஏன்னா இது நம்ம எடுத்த முடிவுதான். நீ சொல்வதும் சரி தான் என்று மனதை சமாதானமாக்கினான்.

குமாரும் கனகாவும் கலப்புத்திருமணம் செய்து கொண்டவர்கள். ஒரே கம்பெனியில் பணிபுரிபவர்கள் இருவரும் ஆரம்பத்தில் சாதாரணமாக பழகி வந்தவர்கள் இனம்புரியாத காதல் வலையில் சிக்கிக் கொண்டார்கள்.

நாம் வீட்டிற்குத் தெரியாமல் கல்யாணம் முடிப்பது பெற்றவங்களுக்கு செய்யும் பெரிய துரோகம் என்று நினைத்தார்கள் .

சரி முறையோடு அவகளிடம் சொல்லி சம்மதத்துடுடன் திருமணம் செய்வோம் என்று குமாரும் கனகாவும் சேர்ந்து முடிவுவெடுத்தனர். முதல்லி கனகா அவள் அம்மாவிடம் இதைப் பற்றி பேசினாள் : அம்மா….. நான் வேலை செய்ற இடத்தில ஒருத்தர விரும்புகிறேம்மா. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறோம். அவரு என்னை கல்யாணம் செய்றேன்னு சொல்றார்ம்மா. அவர் ரொம்ப நல்லவர்ம்மா என்று சொல்லி முடித்ததும் கனகாவின் கன்னத்தில் பளார் என்று ஒர் அறை விட்டாள் அவளது தாய் மேனகா.

“ஏண்டி உனக்கு எவ்வளவு தைரியமிருந்தா என்னை ஒருத்தன் காதலிக்கிறான்னு எங்கிட்டேயே சொல்வே. இந்த விசயம் உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியுமா என்று காட்டுக்கத்தலாய் கத்தினாள்.

“அம்மா இப்படி கன்னத்தை பதம் பார்ப்பாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை கனகா கன்னத்தை தடவிக்கொண்டு விம்மி அழ ஆரம்பித்தாள் . நம்ம குடும்பத்துக்கு இப்படி லவ் எல்லாம் தேவையாடி . ஒழுங்கு மரியாதையா இந்த விசயத்த இதோட மறந்துடு. இதை உங்கப்பாகிட்ட சொல்லிடாதே. நானாவது இதோட விட்டேன். உங்க அப்பா கோவக்காரன்னு உனக்கு தெரியுமுல்ல. பயந்து நடந்துக்கோ. காதல்கீதல்னு பைத்தியக் காரத்தனமாக அலையாமே. உனக்கு நாங்க பாக்குற மாப்பிள்ளையை கல்யாணம் முடிச்சுக்கோ. புரியுதா? என்று மிரட்டும் தொனியில் பேசினாள் தாய்

மறுநாள் காலைப் பொழுது

மனைவியின் பெரும் சப்தமான குரல் கேட்டு மீனாட்சிசுந்தரம் திடுக்கிட்டு அதிர்ச்சியுடன் எழுந்தார்..

“என்னங்க நம்ம மகள் கனகாவை காணோமுங்க!

“என்னடி சொல்ற கனகாவை காணாமா? வீட்டில நல்ல தேடிப்பாருடி எங்க போகப்போற வெளியே வீட்டு வாசல்ல கோலம் போட்டுக்கிட்டு இருப்பா…

நானும் வெளியே பார்த்துட்டேன் வீட்ல பாத்துட்டேன் அவள காணோமுங்க. மனைவி மேனகா உறுதியாக சொல்லியதும் மீனாட்சிசுந்தரம் எழுந்து அவரும் கனகாவை தேடலானார். மனைவி ஒருபக்கம் கணவர் ஒருபக்கம் சல்லடை போட்டுக் கனகாவை தேடினர். எங்கும் அவளைக் காணமுடியவில்லை. இருவருடைய மனம் பதைபதைத்து என்ன செய்வதென்று என்று புரியாமல் திகைத்தனர்.

அடியே அவகிட்ட பழகுன பிள்ளைக வீட்ல பாரு என்று கத்தினார் மீனாட்சிசுந்தரம்.

மேனகாவும் ஓடினாள் கடைசியில் கனகாவை கண்டுபிடிக்க முடியவில்லை தோழிகள் வீட்டிலும் போன் பண்ணி பார்த்துவிட்டனர். எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. கனகாவை காணாமே என்ற கவலைகள் மேலோங்க புலம்பல் சத்ததுடன் வாய்விட்டு கதற ஆரம்பித்தனர் இருவரும்!

எங்கே போனாளோ என்ன ஆனாளோ தெரியலையே பாவி. லெட்டராவது எழுதி வச்சாளா? ஒரு தகவலும் தெரியலையே என்று தலையில் அடித்தபடி அழ ஆரம்பித்தனர்.

பிறகு கனகாவின் அப்பா மீனாட்சிசுந்தரம் அடியே மேனகா வா போலீஸ் ஸ்டேசனுக்கு போய் கம்ப்ளைன்ட் கொடுப்போம் என்று மனைவியை அழைத்தார்.

வா போலீஸ் ஸ்டேசனுக்கு என்று மனைவியை அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து சேர்ந்தார். அங்கே போலீஸ் ஸ்டேசனில் கண்ட காட்சியை பார்த்து அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டனர் கனகாவும் குமாரும் மாலையும் கழுத்துமாக ஒரு மூலையில் மனக்கோல தம்பதிகளாக உட்கார்ந்து இருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் மீனாட்சிசுந்தரத்திற்கும் மேனகாவிற்கும் கண்கள் சிவந்தன . கோபக்கனலில் போலீஸ் ஸ்டேசனில் அவர்களை ஆத்திரம் தீர சத்தம் போட்டனர்.

முடிவில் கனகா தனக்கு குமார் தான் வேண்டும் எனவும் தாய் தந்தை வேண்டாம் எனவும் இனி அவனோடு தான் வாழப்போவதாக சொல்லிவிட்டாள்.

ஆனால் அவர்கள் பெற்றவர்கள் சொல்பேச்சை மீறி கல்யாணம் முடித்ததால் எங்களுக்கு மகளே இல்லை என்று ஸ்டேசனில் கைப்பட எழுதி கையெழுத்துப் போட்டுவிட்டு வெளியேறினார்கள்.

ஆறு மாதங்கள் ஆகிவிட்டன

மகளைப் பற்றிய நினைவுகள் இல்லாமல் வைராக்கியமாக மீனாட்சிசுந்தரமும் மேனாகவும் வாழ்ந்து வந்தனர். கனகாவும் குமாரும் பெற்றோர்கள் இருக்கும் நான்கு தெருக்கள் தள்ளியே வாடகைக்கு வீடு பிடித்து குடியிருந்தனர். ஆதலால் கோவில்கள் மார்க்கெட் பகுதி பஸ் ஸ்டாண்ட் கடைவீதி இப்படி ஒவ்வொரு இடங்களிலும் பெற்றவர்களுக்கு கனகாவும் குமார் தென்படத்தான் செய்வார்கள். ஆனால் அவளது பெற்றோர் மகளே இல்லை என்று முடிவு எடுத்தவர்கள். இவளை பார்த்தாலும் கோபம் கொண்டவர்களாக முகத்தை திருப்பிச் செல்வது இப்போது வாடிக்கையாக விட்டது.

இதே போல் குமார் வீட்டிலும் சொல்பேச்சை கேட்காமல் அவன் இஷ்டத்திற்கு திருமணம் செய்துட்டானே என்ற வெறுப்பால் அவனிடம் அவன் குடும்பத்தார்கள் எவரும் பேசுவதில்லை!

பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்ததால் இரு வீட்டார் அன்பு இல்லாமல் அனாதை போல் வாழ்வது போல் அவர்களுக்கு மனதில் உராய்ந்தது. இருந்தாலும் என்ன செய்ய? இந்த திருமணம் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுவல்லவா எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று மனதை தேற்றிக் கொள்வார்கள். இருவரும் ஒரே கம்பெனியில் வேலை செய்வதால் வேலை செய்யும் ஊழியர்களே அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் நண்பர்களாக இருந்தனர்.

ஒரு வருடம் உருண்டோடியது

ஒரு நாள்

வீட்டில் மேனகா அமைதியாக உட்கார்ந்திருந்ததை மீனாட்சிசுந்தரம் பார்த்து “என்ன மேனகா ஏதோ சிந்தனையா அமைதியாயிருக்க என்ன விசயம் எனக் கேட்டார்.

அதற்கு மேனகா நான் ஒரு விசயம் சொன்னா என்ன கோவிச்சுக்க மாட்டீங்களே

“என்னடி புதிர் போடுறே விசயத்தை சொல்லு என்றார் தயங்கியபடியே மேனகா…. “நம் கனகாவைப் பற்றி…என இழுத்தாள்.

“என்ன கனகா பத்தி என்ன சொல்லப் போற? அவ தான் நம் மகள் இல்லையின்னு ஆயிடிச்சே அவள பத்தி ஏன் பேசுறே.

மனதில் தைரியத்தை ஏற்படுத்திய மேனகா இல்லங்க” நாம வெளியில போகும்போது எங்காவது கோவில் கடைவீதின்னு அவள பார்ப்போம். இந்த ஆறுமாதமா அவள எங்கேயுமே பார்க்க முடியலங்க உள்ளூர்ல இருக்காளா? இல்ல வெளியூர்ல இருக்கலான்னு தெரியல.

பிள்ளபாசம் போகலையோ உனக்கு. அவள பத்தி இனிமே எங்கிட்ட பேசினே நான் பொல்லாதவனா மாறிடுவேன் என்று மனைவி மேனகாவை எச்சரித்து விட்டு வெளியே சென்றார் மீனாட்சிசுந்தரம்.

இப்போது கனகா அவளுடைய கணவன் குமாரும் பெற்றவர்கள் கண்களில் படாமல் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை காலி செய்து பத்து கிலோ மீட்டர் தள்ளி வேறொரு வீட்டில் வசிக்கின்றனர். அதனால் தான் பெற்றோர்கள் பார்வையில் படாமல் இருக்கின்றனர். மேனகாவிற்கு என்னதான் மகள் மீது கோபம் இருந்தாலும் அவளது அடி மனதில் மகள் மீது பாசம் இல்லாம

லில்லை .ஏனென்றால் அவளுக்கு கனகா ஒரே மகளாச்சே. மேனகா கோவில் கடைவீதி பஸ் ஸ்டாண்ட் கணவருடனோ தனியாகவோ போனாலும் எங்கேயாவது மகள் தென்பட மாட்டாளா என்று ஏக்கம் தலை தூக்கியது. ஆரம்பத்தில் அவளைக் கண்டால் முகத்தை திருப்பிச் சென்றவள் இப்போது மகள் கண்களில் பட மாட்டாளா என்று தவித்துக் கொண்டு வருகிறாள்.

மறுபடியும் மாதங்கள் கடந்தன.

மகள் கனகாவைப் பற்றிய முழு நினைவுகள் அவளை வாட்டி எடுத்தன சில நேரங்களில் பக்கத்து தெருக்களில் தெரிந்தவர்களிடம் மகளைப் பற்றி விசாரிப்பாள். அவள் எங்கே இருக்கிறாள் என்ற விபரம் கிடைக்கவில்லை!

அன்றொரு நாள் மீனாட்சிசுந்தரம் மனைவி மேனகாவிடம் “நான் வெளியூருக்கு போயிட்டு ரெண்டு நாள் கழிச்சி வந்திடுறேன் என்று சொல்லிக் கொண்டு வெளியூர் சென்றார் கணவர்.

அவர் வெளியூர் சென்றதால் மேனகா தனியாக இருந்து வருந்தினாள்

மகளைப் பற்றிய சிந்தனை வலையில் சிக்கி திணறியவள் திடீரென்று ஒரு யோசனை மனதில் பட்டது மகள் குடியிருந்த வீட்டின் ஓனரிடம் ஏன் மகளை பற்றி கேட்கக்கூடாது என்று முடிவெடுத்து மகள் குடியிருந்த நான்கு தெருவுக்குத் தள்ளி வேகமாக நடந்தாள். கணவர் வெளியூருக்கு சென்றது மேனகாவுக்கு சௌரியமாகப்பட்டது. வீட்டின் உரிமையாளரிடம் மகள் மாறியிருக்கும் வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டாள். மிகவும் உற்சாகமானாள் மேனகா.

வீட்டைப் பூட்டி விட்டு பஸ் நிலையத்திற்குச் சென்று பஸ் ஏறினாள். ஒரு மணி நேர பஸ் பயணம் முடிந்து அந்த ஊரில் இறங்கினாள்.

ஒரு வழியாக மகள் இருக்கும் வீட்டைக் கண்டுபிடித்தாள். மேனகா வீட்டுக்கருகில் சென்றாள். தயங்கியபடி வீட்டு கிரீல் கேட்டை மெதுவாகத் திறந்து அந்த இடத்தில் நின்றவாறே வீட்டினுள் பார்வையை வீசினாள்.

யாரோ வெளியே நிக்கிற மாதிரி தெரியுதே என்று கனகா வெளியே வந்தவள் அம்மாவை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாக ஆனந்தக் கண்ணீருடன் அம்மாவின் கைகளைப் பிடித்து அம்மா…. என்றவாறே கட்டிப்பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள் மேனகாவும் கண்களில் பெருக்கெடுத்தோடிய கண்ணீரைத் துடைத்தபடி வீட்டினுள் சென்றாள் அங்கே அவளுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

அதைப் பார்த்ததும் சிலையாக நின்றாள் மேனகா. அவள் கணவன் மீனாட்சிசுந்தரம் மடியில் பேரக்குழந்தைகள். கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார்!

இதைக் கண்ட மேனகாவிற்கு ஆச்சரிய மின்னல் தாக்கியது போல் இருந்தது. என்னால நம்ப முடியலங்க… நீங்களா இங்கே?

“உனக்கு மட்டும் தான் மகள் மேல் பாசம் வருமா? ஏன் எனக்கு வராதா மீனாட்சிசுந்தரம் பேசவும் மேனகாவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. அவர் மடியிலிருந்த பேரக் குழந்தையை முகம் மலரத் தூக்கினாள்!

“அம்மாடி கனகா எங்களை நீங்க ரெண்டு பேரும் மன்னிச்சிடுங்க. நீங்க கல்யாணம் முடிச்சதை ஆரம்பத்தில கோபமா இருந்ததுனால வெளியே உங்கள எங்க பாத்தாலும் பேச முடியாம இருந்துட்டோம் என்றாள்.

உடனே குமார் “அத்தை மாமா எங்கள நீங்க தான் மன்னிக்கணும் . உங்க பேச்ச மீறி நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். வருத்தம் இருக்கத்தானே செய்யும் என்று கூறிக்கொண்டு அத்தை உட்காருங்க என்று கையில பேரக் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தவளை உட்கார சொன்னான்.

“தம்பி உங்க விசயத்தில நான் ரொம்ப கோவப்பட்டு விட்டேன். சாதி என்ன தம்பி சாதி இந்த உலகத்தில மனிசன் பிறக்குறது ஒரு முறை ; இறக்குறது ஒரு முறை இதுக்கு நடுவில் சாதி எதற்கு?

ஒரே உலகம் ஒரே நாடு ஒரே இனம் ஒரே மொழின்னு உலகம் மாறிவர்ற இந்த காலத்துல மனிசனுக்குள்ள சாதி என்ன வேண்டி கிடக்கு. நாமெல்லாம் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளை வாழ்ற காலம் இது மாறிவரும் நவீன காலத்துல இன்னும் மனிசன்களும் மாறனும் அப்படி இல்லையின்னா நமக்கும் மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்.

இதைக் கேட்டு குமார் நெகிழ்ந்து போனான்.

நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் என்று மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசினார் மீனாட்சிசுந்தரம்.

அந்த நேரத்தில் குமாரின் அப்பா அம்மாவும் பேரக்குழந்தையை பார்க்க வீட்டினுள் வந்தனர்.

அங்கே

சந்தோச பூங்காற்று வீசியது.

சாதிப் பூக்கள் உதிர்ந்து சமரச பூக்கள் மலர்ந்தன!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *