ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் படித்தபோது ஆனந்துடைய ஆளுமை ,திறமை, லட்சியம் எல்லாம் ஒரு சேர இருந்தது. எப்படியும் இந்த பூமியில் பிறந்ததற்கு நாம் ஜெயித்து பெயரை நிலைநாட்டி விட வேண்டும். பள்ளிப் படிப்பில் மாநிலத்தில் முதலாவதாக வரவேண்டும் என்றெல்லாம் அவன் கற்பனைக் கோட்டைகளைக் கட்டி வைத்திருந்தான்.
அதுபோலவே தான் அவன் செய்கைகளும் படிப்பும் அவனுடைய நடவடிக்கைகளும் இருந்தன. நண்பர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு நிறையப் பேர் இருந்தாலும் யார் நன்றாக படிக்கிறார்களோ ? அவர்களை மட்டும் நண்பர்களாக ஏற்றுக் கொண்டிருந்தான் ஆனந்த்.
இதனால் அவனைச் சிடுமூஞ்சி என்று கூட சிலர் சொல்வார்கள். அதையெல்லாம் அவன் பொருட்படுத்த மாட்டான். சிரித்துக் கொண்டே கடந்து விடுவான். காரணம் லட்சியத்தில் ஜெயிக்க வேண்டும் என்பது அவனுடைய ஒரே நோக்கமாக இருந்தது. இருந்தாலும் அவனுடைய அடி மனதில் காதல், அன்பு தீராமல் நின்று கொண்டு தான் இருந்தன. அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு தான் இந்த புது உலகத்திற்குள் நுழைந்திருந்தான்.
அப்பா அரசாங்க வேலை . அடிக்கடி மாற்றலாக வேண்டிய சூழல். இப்படி இருந்த நிலையில் திடீரென்று அப்பாவிற்கு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வேலை மாற்றாலானது வேறு வழி இன்றி ஆனந்தின் படிப்பு அடியோடு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது .
புது இடம், புதுச் சூழல் ,புது மனிதர்கள் என்று வந்த இடம் அவனுக்கு எல்லாமே புதிதாக இருந்தன. அது மட்டும் அல்ல ஆண்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த பள்ளியில் இருந்த போது அவனுடைய லட்சியம் அசைக்க முடியாத ஆணிவேராக இருந்தது.
ஆனால் இப்போது அவன் சேர்ந்திருக்கும் பள்ளி ஆண்களும் பெண்களும் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளி என்பதால் அவனுக்குள் அவன் லட்சியம் லேசாக ஆட்டம் கண்டது. .அழகழகானப் பள்ளி; மாணவிகள் பட்டாம்பூச்சி பாேல அவன் கண் முன்னால் கடந்து சென்றார்கள். அழகழகான பள்ளி மாணவிகள்; குட்டைப் பாவாடை அணிந்து வரும் குட்டி மான்கள் பாேல துள்ளிப் பாேனார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது அவனுக்குள் சந்தோஷம் சிறகடித்து பறந்தது. அதுவரையில் அடக்கி வைத்துக் கொண்டிருந்த ஆசைகள் எல்லாம் இப்போது வெட்ட வெளிச்சமாகின. எதற்காகவும் காதலித்து விடக்கூடாது. .லட்சியத்தில் கண்ணாக இருக்க வேண்டும் காதல் நம்மை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் அல்லது தாழ்ந்த இடத்தில் தள்ளிவிடும் என்று அவனுக்கு தெரியும். இதையெல்லாம் நினைத்துக் கொண்டுதான், அதுவரையில் காதல் கத்திரிக்காய் எல்லாம் செய்யாமல் இருந்து வந்தான். ஆனால் இந்த நொடி அவனுக்கு ஒரு புது மாற்றத்தை ஏற்படுத்தியது, இருபாலர் படிக்கும் பள்ளி. நாம் வழி தவறி செல்கிறோமா ? நம்முடைய எண்ணத்தை லட்சியத்தை அடைவதற்கு இந்த இரு பாலர் படிக்கும் பள்ளி சரியாக இருக்குமா? என்று இரவெல்லாம் தூங்காமல் விழித்து சிந்தித்துக் கொண்டே இருந்தான். அவன் நினைத்தது போலவே நடந்து விட்டது .
ஒரு அழகிய பெண் அவன் மனதிற்குள் சிறகு விரித்துப் பறந்தாள். பள்ளி, கல்வி, பாடம் ,நல்வழி என்று மட்டுமே இருந்தவன் மனதிற்குள் அந்த தேவதை தேரில் வந்து அவன் இதயத்திற்குள் அமர்ந்தாள். அவன் நினைத்த சில விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கின. படிப்பில் ஆர்வம் குறைந்தது . கேளிக்கையில் அதிகம் நாட்டம் ஏற்பட்டது. பெண்ணுடன் சுற்றுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான் இதைவிடப் பெரிய சொர்க்கம் உலகத்தில் வேறு எங்கும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு கவிதை எழுதினான்.
அந்தப் பெண்ணை வசியப்படுத்துவதற்காகவும் அவளை கவர்வதற்குமாகவே உடைகள் அணிய ஆரம்பித்தான். எப்போதும் அவள் நினைவாகவே இருந்தான் .
“என்ன ஆனந்த்… உன் லட்சியம், கனவெல்லாம் என்னாச்சு? என்று நண்பர்கள் கேட்டால்
“லட்சியம் ஒரு பக்கம் இருக்கு. ஆனா காதல் பெருசா தெரியுது. .என்ன படிச்சாலும் என்ன பண்ணினாலும் கடைசில கல்யாணம் காட்சின்னு தானே வாழ்க்கை நடத்துறோம். அது எனக்கு இப்பவே கிடைச்சிருச்சுன்னு நினைக்கிறேன்”
என்று தத்துவம் சொன்னான்.
அதுவரையில் நேர்த்திசையில் போய்க் கொண்டிருந்த அவனது பயணம் இப்போது திசை மாறிய பயணமாக மாறி இருந்தது .
இந்த பூமியில் புது மனிதனாக புறப்பட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அவனது எண்ணம் இப்போது புதிய திசையில் பயணப்பட்டது.
நாட்கள் கடந்தன. அவன் புத்தியில் ஏதோ சட்டென்று ஓங்கி அடித்தது போல இருந்தது. நாம் செய்வது தவறு? சின்னச் சின்ன சந்தோஷங்களில் நாம் பெரிய லட்சியங்களை மறந்து விடுகிறோம் “
என்று காதல் என்ற கைவிளக்கத்தை கொஞ்சம் மறைத்து வைத்துவிட்டு லட்சியம் என்ற ஒளிவிளக்கை நெஞ்சுக்குள் ஏற்றி வைத்தான்.
திசை மாறிய பயணம் இப்போது திசை மாறித் திரும்பவும் அவன் லட்சியத்தில் வந்து முடிந்தது.
அவன் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற மீண்டும் படிப்பில் கவனம் மேற்கொண்டான்.