உட்கார வைத்திருக்கிறார்கள் பேச்சு மூச்சில்லாமல் பொறுமையாய்:
நின்றிருக்கிறார்கள் ராமசந்திரன் + ஐவர் கூட்டணி பெருமையாய்…!
பால சரவணன் கலை வாழ்வில் மைல் கல்
அறிமுகப்படத்தில் ஜெயிக்க வேண்டுமா..?
ஒன்று காதலை கையில் எடுக்க வேண்டும். இல்லையா… பேயைத் தூக்க வேண்டும். கடந்த காலத்தில் கைமேல் பலனை ஓரளவுக்கு எதிர்பார்த்தது எதிர்பார்த்தபடி தந்திருக்கும் ஜனரஞ்சக வெற்றிக்கான ஃபார்முலா இது.
பார்த்துப் பார்த்து பழகி இருக்கும் நூற்றுக்கணக்கான படங்களின் ரசிகனாய் இருந்து, சாமானியனின் ரசனையை உணர்ந்து,“பேச்சி”யை பிடித்திருக்கிறார்கள் அறிமுக இயக்குனர் பி. ராமசந்திரன், அவரது யூனிட்.
நம்பிக்கை நாயகர்கள் ஐவரை ‘பேச்சி’ – அடையாளங்காட்டியிருக்கிற இந்தத் திரை உலகுக்கு.
1) வங்கிப் பணியை உதறித் தள்ளி விட்டு சினிமா மோகத்தால் வலது கால் எடுத்து கோடம்பாக்கம் வட்டாரத்தில் நுழைந்திருக்கும் அறிமுக இயக்குனர் பி.ராமச்சந்திரன். (முன் அனுபவம் விளம்பரப் படங்கள் இயக்கம்)
2) திக்குத் தெரியாத வனாந்தரத்துக்குள் முகாமிட்டு, செடி – கொடி – மரம் – புதர் – மேடு பள்ளத்தில் காமிராவோடு ஏறி இறங்கி ஓட்டமும் நடையுமாய் படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் பார்த்திபன்.
3)‘பேய்’ என்றாலே பயமுறுத்தும் காட்சிகள் இல்லாமலா? ‘திகில்’ படத்துக்கான இசையை பின்னணியில் பிரமாதமாக ஒலிக்கவிட்டிருக்கும் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன்.
4) அடர்ந்த காடு – ஓங்கி வளர்ந்த மரங்கள். நட்டநடுவில் பாழடைந்த திகில் பங்களா.
கைவண்ணத்தில் திறமையாக காட்டியிருக்கும் ஆர்ட் டைரக்டர் குமார் கங்கப்பன்.
5) வேகத்தடை இல்லாமல் விறுவிறுவென 125 நிமிடத்துக்கு ‘பேச்சி’யை ஓட விட்டிருக்கும் படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின்.
நம்பிக்கையோடு நடந்திருக்கும் இந்த ஐவர், திரைமறைவு இளைஞர்கள் பட்டாளம், பணம் நம்பிப் போடும் தயாரிப்பாளர்களைக் கைத்தூக்கி காப்பாற்றிக் கரை சேர்க்கும் கலைக் காவலர்கள் – என்று அடையாளம் காட்டி ஆராதிக்கலாம்.
பாலசரவணன், காயத்ரி சங்கர், பிரீத்தி நெடுமாறன், தேவ், முரளி, ஜனா முக்கிய வேடத்தில் இவர்கள் அறுவரைத் தவிர பேசும் பட நாயகி ‘பேச்சி’ கைத்தடி குடுகுடு கிழவி. (பெயர்: ?) ஆபாவாணனின் ஊமை விழிகளில் பயமுறுத்திய கிழவியின் உடன் பிறப்போ?
திக்குத் தெரியாத காட்டுக்குள் நுழையும் ஐவர் குழு. அவர்களுக்கு வழிகாட்டும் ‘கைடு’ பாலசரவணன். தடை செய்யப்பட்ட பகுதி என்று முள்வேலி போட்டு மூடி வைத்திருக்கும் பாழடைந்த வீட்டுப் பகுதிக்குள் நுழையப் போய்… அங்கு எதிர்ப்படும் விபரீத விளையாட்டு – குழந்தைகளை (இந்த வார்த்தை – தணிக்கையில் வெட்டு) சாகா வரம் வாங்கி இருக்கும் கைத்தடி குடுகுடு ‘அகோரக் கிழவி’யின் பிடியிலிருந்து தப்பிக்க – உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அந்த வனாந்தரத்துக்குள்ளேயே ஓடி ஓடி ஒளியும் ஐவர் பட்டாளம். அவர்கள் தப்பினார்களா, இல்லையா? என்பதே ‘பேச்சி’யின் திரைக்கதை.
கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் 2 ஜோடி, அவர்களின் நண்பன் போட்டோகிராபர். அவர்களோடு காட்டுக்குள் நுழையும் பாலசரவணன். கதையோடு காமிரா காட்டுக்குள் ஊடுருவுகிறது.
படம் ஓடத்துவங்கி 43 நிமிடம் வரைக்கும்… ஓடு பாதையில் மெது வேகத்தில் ஊர்ந்தபடி ஓடிக் கொண்டிருக்கும் விமானம் மாதிரி!
அதே விமானம் ஓடு பாதையை விட்டு மெல்ல மெல்ல மேலே ஏறி பறக்கத் தொடங்கியதும்… தரை இறங்கும் வரை சொகுசுப் பயணம் எப்படியோ, அப்படியே ‘பேச்சி’யின் முதல் 45 நிமிடமும் அதன் பிற்பாதி 75 நிமிடமும்.
பாலசரவணன் – என்னும் ஆர்வத் துடிப்புள்ள ஒரு கலைஞனை இதுநாள் வரை எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிறோம், ஒவ்வொரு படத்தின் நாயகனின் நட்பு வட்டாரத்தில். ஆனால் ‘பேச்சி’ பாலசரவணனின் கலை வாழ்க்கையில் ஒரு மைல் கல். நடிப்பில் தெறித்திருக்கிறார், நினைவலைகளில் மிதந்திருக்கிறார் இயக்குனர் பி.ராமச்சந்திரனுக்கு அவர் வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்லிக் கொண்டிருக்கலாம்.
45% திரைக்கதை – காட்சிகளை தன் தோள்களில் அல்லவா ஏற்றி, சுமைதாங்கியாகி இருக்கிறார். சுகமான சுமைதாங்கி பாலசரவணன்!
2 காதல் ஜோடிகளும் இயக்குனர் கட்டளைக்கு கட்டுப்பட்டு யதார்த்த நடிப்பின் எல்லைக் கோட்டில் நின்றிருக்கிறார்கள். குறை சொல்லவே முடியாது. ஓட்டம் – நடை – ஓட்டம்… என்று நடுக்காட்டில் விழுந்து புரண்டு மூச்சிறைக்க மூச்சிறைக்க நடித்திருக்கிறார்களே, அது தான் ஆர்வம். கலை மீதான வெறி.
பாராட்டுக்குரிய ஒரு அம்சம்: பேய்க்கதை என்றாலே பேயை இரவில் தான் காட்டுவார்கள், அது – மிரள வைக்கும். ஆனால் சற்று வித்யாசமாக பேயைப் பகலில் காட்டி பயமுறுத்தி இருப்பது அனுபவம் புதுமை, இங்கே.
பயமுறுத்தும் முயற்சியில் ரசிகர் பட்டாளத்தை உட்கார வைத்திருக்கிறார்கள்! இறங்கியிருக்கும் களத்தில் ப.ராமச்சந்திரன் & கோ நின்றிருக்கிறார்கள்!
பேய் வரிசையில்
‘பேச்சி’: கொடுக்கும் காசுக்கு
குறை சொல்லும்
‘பேச்சி’ல்லை!
இடைவேளைக்குப் பின் மயான அமைதி, அரங்கில்.
–வீ. ராம்ஜீ
#Parthiban Cameraman #Oomai Vizhigal # Balasaravanan # Jaishankarson # Ghost – Horror Movie #Makkalkural Ramjee