புதுடெல்லி, ஏப்.3–
கைது செய்யப்பட்டதில் இருந்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் எடை 4.5 கிலோ குறைந்துள்ளது என ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி வருத்தம் தெரிவித்துள்ளார்.
புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. கெஜ்ரிவாலை 15–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான நீரிழிவு நோயாளி மற்றும் உடல் நலக்குறைவு இருந்த போதிலும், 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்து வந்தார்.
கைது செய்யப்பட்டதில் இருந்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் எடை 4.5 கிலோ குறைந்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது. இன்று அவரை பா.ஜ.க.வினர் சிறையில் அடைத்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதாவது நேர்ந்தால், கடவுள் கூட அவர்களை (பா.ஜ.க.) மன்னிக்க மாட்டார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அதிஷி கூறியுள்ளார். இதனால் ஆம் ஆத்மி கட்சியினர் வருத்தம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் நலமாக இருப்பதாகவும், கடந்த 1ந்தேதி சிறையில் அடைக்கப்பட்ட போது 55 கிலோ எடை இருந்ததாகவும், தற்போதும் இருப்பதாகவும் ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறும் போது, வீட்டில் சமைத்த உணவை சாப்பிட கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அவரது சர்க்கரை அளவு குறைந்தது. அவருக்கு சர்க்கரை அளவு தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்தததால் திகார் சிறை டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்தார். தற்போது அவரது ரத்த சர்க்கரை அளவு சாதாரணமாக உள்ளது. அவர் யோகா செய்தார் என தெரிவித்தனர்.