சிறுகதை

தாலி – ஆவடி ரமேஷ்குமார்

‘ வேண்டாம் தாலி’ நிகழ்ச்சிக்கு தன் மாவட்டத்தின் சார்பில் பத்து ஜோடிகளை தேடிப்பிடித்து அழைத்துப்போனார் தணிகாலம்.

நிகழ்ச்சியை, தன் கட்சி டி.வி.யில் நேரலை செய்து உலக மக்களுக்கு காட்டியது.

மாலை.

பெரும் எதிர்பார்ப்பிற்கு நடுவே நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதும் சந்தோஷமாக வீடு திரும்பினார் தணிகாசலம்.

வீட்டினுள் நுழைந்தார்.

அப்போது அவரின் மனைவி

மொட்டை மாடிக்கு போக மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தார்.

ஹால்.

சோபாவில், தன் மகள் ஊரிலிருந்து வந்து அமரந்திருப்பதை பார்த்தார்.

” வாம்மா திவ்யா! சௌக்கியமா? எங்க மாப்பிள்ளை,பசங்களை காணோம்? ” என்று கேட்டார்.

” வீட்ல ஒரு பெரிய பிரச்சினைப்பா.நான் மட்டும் தான் வந்தேன்” என்றாள் திவ்யா.

” என்னம்மா பிரச்சினை?!”

” உங்க ‘………. ………’ கட்சி ஒரு மோசமானகட்சியாம்; அதில் நீங்க இனிமேல் உறுப்பினரா இருக்கக்கூடாதாம்; விலகிடனுமாம். இதை என் புருஷன் வீட்ல எல்லோரும் உங்க கிட்ட சொல்லச் சொன்னாங்கப்பா”

” என் சுதந்திரத்துல தலையிட

அவங்க யாரு…கேட்கிறது தானே திவ்யா?”

” கேட்டேன்ப்பா.நல்லா வாங்கிக்கட்டிட்டு வந்திருக்கேன்”

” இதென்னமா அநியாயமா இருக்கு.நான் அந்தக்கட்சியில

மாவட்ட பொறுப்பாளர்.இவங்களுக்கு அந்த கட்சியை பிடிக்கலேனா

நான் எதுக்கு அந்த கட்சியிலிருந்து விலகனும்?

லாஜிக்கே இல்லையே…நான் என்ன அவங்க அடிமையா?

நீ கேட்க வேண்டியது தானே அவங்க கிட்ட?”

” நான் கேட்காம இருப்பேன்னா? கேட்டேன்ப்பா.

நீங்க விலகலேனா நான் இந்த வீட்டிலேயே இருந்திடனுமாம்.

சொல்லிட்டாங்கப்பா!”

” சுத்த பைத்தியக்காரத்தனமா இல்லே இருக்கு! சரி..மாப்பிள்ளை என்ன சொன்னாரு?”

” உங்களை ‘ மாமனார்’ னு சொல்லிக்கவே அவருக்கு வாய் கூசுதாம்.உங்களை கெட்ட கெட்ட வார்த்தையால

திட்டினாரு”

” ஊரே எங்க கட்சியை திட்டுச்சு.அவருமா? சரி விடு.நான் உங்க வீட்டுக்கு வந்து விவரமா, ‘ இது ஒரு கட்சிக்கான விளம்பர

நாடகம்’ அப்படிங்கிறதை அவங்களுக்கு புரியற மாதிரி

விளக்கிச்சொல்லிடறேன்.நீ

இப்ப உன் வீட்டுக்கு புறப்படும்மா”

” அதுக்கு இனி அவசியமே இல்லைப்பா”

” என்னம்மா சொல்லற?”

” எங்கப்பா ஒரு பிடிவாதக்காரர். அவர் ரத்தம் தான் என் உடம்புலயும் ஓடுது.

தாலி கட்டிட்டினதால பெண் ஆணுக்கு அடிமையில்ல. இதை புரிய வைக்க அவரோட கட்சி பாடுபடுது.அதன் கொள்கைகள் எனக்கும் பிடிச்சிருக்கு.உங்க மகன் எனக்கு தாலி கட்டிட்டினதால நான் உங்க மூனு பேருக்கும் அடிமையில்ல.எங்கம்மாவும் எங்கப்பாவும் உங்களுக்கு அடிமையில்ல.தாலிங்கிறது ஒரு அடையாளம்…

இந்த தாலி இப்ப என் கழுத்தில்

இல்லேனாலும் நான் இவருக்கு பொண்டாட்டிதான்.

இந்த வீட்டு மருமகள் தான். நான் எங்கப்பா வீட்டுக்கே போறேன்.உங்களுக்கு எப்ப மருமகள் வேணும்; இவருக்கு பொண்டாட்டி வேணும்னு தோனுதோ; அப்ப எங்க வீட்டுக்கு வந்து கூப்பிடுங்க.வர்றேன்’னு சொல்லிட்டு சூட்கேஸ்ல துணி மணிகளை எடுத்திட்டு வந்துட்டேன்ப்பா….

வர்றதுக்கு முன்னாடி என் தாலியை கழட்டி மரியாதையா

என் கணவர் கையில் கொடுத்திட்டுத்தான் வந்தேன்ப்பா.ஏன்னா நான்

உங்க பொண்ணுப்பா!”

அதிர்ந்தார் தணிகாசலம்.

” பாவி!மகளே, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? என்ன காரியம் செஞ்சுட்டு வந்திருக்கே நீ…! தாலியை போய் கழட்டி மாப்பிள்ளை கைல…உன்னை..!” என்று கத்தியபடி அடிக்க கையை ஓங்கிய தணிகாசலம், “அய்யோ” என்றபடி திவ்யாவை அடிக்க முடியாமல்

நெஞ்சைப்பிடித்தபடி தடாலென்று மயங்கி மடங்கி தரையில் விழுந்தார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *