சிறுகதை

தாய் சொன்ன சொல்! – கனிவிழி

சேயூர் ஓர் அழகிய கிராமம். சுற்றிலும் காடுகளால் சூழப்பட்டது. இந்த கிராமத்தில் வளர்ந்து நின்ற நன்செய் பயிர்களும் புன்செய் பயிர்களும் இதன் செழுமையை புலப்படுத்தின.

இனிமை பசுமை சூழ நிற்கும் இந்த கிராமத்தில் ஆதிரை தன் குடும்பத்துடன் வாழ்ந்துவந்தாள். தனக்கேயான அழகிய மிடுக்குடன் ஆதிரை பள்ளிக்கு செல்வதை பார்க்கும் யாவரும் அவளை ரசிக்கத்தான் செய்வார்கள்.

ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாலும் ஓய்வு நேரத்திலும் கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து வந்ததால் ஆதிரையின் தந்தை தேவைக்கு அதிகமான வருமானத்தை ஈட்டினார். இதனால் ஆதிரையின் குடும்பம் பொருளாதாரத்தில் ஒரு நல்ல நிலையிலேயே இருந்தது.

என்னத்தான் செழுமையாகவும் அழகாகவும் இருந்தாலும் சேயூரும் பெரும்பாலான பகுதிகளைப் போல சாதி என்னும் சமூக வேறுபாட்டால் பிளவுற்றே இருந்தது.

சேயூர் அதில் வாழும் மக்கள் அனைவரையும் ஒன்றாக பார்க்க ஏனோ தவறியது.

அனைவருக்குமான பொதுத்தெருவில் வசித்து வந்தாலும் ஆதிரையும் அவள் குடும்பமும் அந்த வேறுபாட்டில் சிக்கித் தவித்தனர். இது ஆதிரைக்கு தெரிவதற்கு சில காலம் எடுக்கத்தான் செய்தது. பிஞ்சு மனங்களுக்கு நஞ்சுகளை அடையாளம் காண்பது கடினம் தானே!

சமூக பிளவுகளை உயர்த்திப் பிடித்து, வேற்றுமையைப் பறைசாற்றுவது போல் ஒரு நிகழ்வும் அப்பொழுது சேயூரில் நடந்தது.

சேயூர் மக்கள் பொதுத்தெருவில் தங்களுக்கு என மற்றுமொரு கோவில் கட்ட முடிவுசெய்தனர். இங்கே சேயூர் மக்கள் என்று குறிப்பிடுவது உயர்சாதியினரயே. அங்கே வாழ்ந்து வரும் கீழ்மட்ட வகுப்பினர் என்று அட்டவணைப்படுத்தப்பட்டவர்களிடம் தகவல் கூட தெரிவிக்க யாரும் முற்படவில்லை. அவர்களிடம் இருந்து கோவில் கட்ட வரியும் வாங்கப்படவில்லை.

ஆதிரைக்கு தனது வீட்டிற்கு முன்னால் கட்டப்பட்டுவரும் அந்தக் கோவிலை பார்க்கும் பொழுது வருத்தமாக இருந்தது. சேயூர் மக்களால் கட்டப்பட்டு வருவது கோவிலில்லை, வேற்றுமையின் சின்னம் என்பதை நினைக்கும் பொழுது கோபம் மேலிட்டது.

உணர்ச்சி மேலிட்டவளாய் ஆதிரை தனது வீட்டின் அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து கட்டப்பட்டுவரும் அந்த கோவிலை இடிக்க முடிவுசெய்தாள். கையில் கம்பியுடன் கோவிலைப் பார்த்து ஆதிரை நடந்தாள்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதிரையின் தாய் அவளிடன் ”எங்கே செல்கிறாய் ?” எனக் கேட்டாள். ஆதிரை தான் அந்த கோவிலை இடிக்கப்போவதாகக் கூறினாள்.

அதைக் கேட்ட அவளின் தாய் சிரித்துக்கொண்டே ” கோவிலை எப்படி இடிக்கப்போகிறாய் ?” என்று கேட்க, அதற்கு சற்றும் தயங்காமல் ஆதிரை, ”என் கையில் உள்ள இந்த கம்பியால் தான்!” எனக் கம்பியை உயர்த்திக் காட்டினாள்.

”இந்தக் கம்பி போதுமா?” என மீண்டும் கேட்ட தாயிடம், ஆதிரை தன் கையில் இருக்கும் இந்தக் கம்பியே எனக்கு ஒரு பெரும் ஆயுதம் என பதிலுரைத்து தன் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினாள்.

அந்தத் தாய் புன்முறுவலுடன் கீழே குனிந்து ஆதிரையின் கையிலிருந்த அந்தக் கம்பியை வாங்கினாள். பின் ஆதிரையின் முகத்தை உற்று நோக்கினாள். அந்த நொடி ஆதிரையின் வாழ்க்கையையே மாற்றியமைக்கப்போகும் வார்த்தைகளை அவளின் தாய் கூற ஆதிரை கேட்டாள்.

“மகளே … கல்வியே இந்த உலகத்தின் மிக வலிமையான ஆயுதம்.. செல்..சென்று படி” என்றாள் அந்த தாய்.

பதிலுரைக்காது ஆதிரை வீட்டினுள் சென்றாள்.

வருடங்கள் கழிந்தன… இன்று அந்த கோவில் குடமுழுக்கு.. மாவட்ட ஆட்சியர் ஆதிரை அந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். கல்வி என்னும் ஆயுதம் மீண்டும் இந்த உலகுக்கு தன் வலிமையை காட்டியது!

ஆதிரை நெகிழ்ந்து போனாள்.

Loading

One Reply to “தாய் சொன்ன சொல்! – கனிவிழி

  1. தாய் சொன்ன சொல் கதை வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கதை. வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. உண்மையான கதை என்றே சொல்ல முடிகிறது.
    பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *