சலுகையை காலவரையின்றி நீடித்தது தாய்லாந்து அரசு
பாங்காக், நவ.6-–
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக இந்தியர்கள் பெருமளவில் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்கின்றனர்.
சுற்றுலாத்துறை மூலம் அரசுக்கு பெரும் வருவாய் கிடைப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க தாய்லாந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்தியர்கள் தாய்லாந்து வருவதற்கு அவர்களுக்கு விசா தேவையில்லை என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்து அரசு அறிவித்தது. இந்த விசா சலுகை கடந்த மே மாதத்துடன் நிறைவு பெற இருந்த நிலையில் நவம்பர் 11–-ந் தேதி வரை நீட்டித்தது தாய்லாந்து அரசு.
இந்த நிலையில் இந்தியர்களுக்கான விசா சலுகையை காலவரையின்றி நீட்டிப்பதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் தாய்லாந்தில் விசா இல்லாமல் 60 நாட்கள் வரை தங்கலாம். அதோடு உள்ளூர் குடியேற்ற அலுவலகங்கள் மூலம் அதை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.