செய்திகள்

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 அரிய வகை குரங்குகள்: சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை, மார்ச்.8-

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 4 அரிய வகை குரங்கு குட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது தமிழகத்தை சேர்ந்த பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் கொண்டு வந்த உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது உடமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாக அதிகாரிகள் அதை திறந்து பார்த்ததில், அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவை தென் அமெரிக்காவை சேர்ந்த பிரேசில், கொலம்பியா போன்ற நாடுகளில் வசிக்கும் ‘மார்மோ செட்டு’ என்ற அரிய வகை 4 குரங்கு குட்டிகள் என்பது தெரியவந்தது. இது பற்றி பயணியிடம் விசாரித்த போது, இந்த அபூர்வவகை குரங்கு குட்டிகளை வளர்ப்பதற்காக எடுத்து வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் விலங்குகளை கொண்டு வந்ததற்கான முறையான ஆவணங்களும், குரங்குகளை மருத்துவ பரிசோதனை செய்து நோய்க் கிருமிகள் இல்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவை அவரிடம் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் மற்ற நாட்டில் இருந்து வனவிலங்குகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கு சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறை மற்றும் இந்திய வனவிலங்கு துறையின் தடையில்லா சான்றிதழும் அவரிடம் இல்லாததால் 4 குரங்கு குட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் கடத்தி வரப்பட்ட அபூர்வ வகை குரங்கு குட்டிகளை சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் சோதித்து பார்த்து விட்டு மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *