வெளுத்து வாங்கும் மழையில் தெருவெங்கும் நிறைந்து வழிந்தது மழைவெள்ளம். ஓடும் வாகனங்களை விட நின்று கொண்டிருந்த வாகனங்கள் நிறைய. ஒழுகாத இடம் தேடி ஓடிக் கொண்டிருந்தன நாய்கள். சோ வென்று பெய்து கொண்டிக்கும் மழையில் வெறிச்சோடிக் கிடந்தன சாலைகள்.
“மழை. கடும் மழை. இன்னைக்கு வியாபாரம் கெட்டுப் போச்சு .இனி அவ்வளவுதான் இன்றைய பொழுது வீணாகிவிட்டது ” என்று புலம்பி கொண்டு இருந்தான் தர்மன்.
அவன் முன்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன பழைய செருப்புகள். செருப்புத் தைக்கும் தொழில் செய்து கொண்டிருக்கும் தர்மனுக்கு அன்றைய மழை மிகவும் வருத்தத்தை தந்தது.
இன்னைக்கு வருமானம்ங்கிறது இல்லை. இன்றைய பொழுதை எப்படிப் பணம் இல்லாமல் கழிப்பது என்று வருத்தப்பட்டு கொண்டு இருந்தான்.
மழை விட்ட பாடில்லை. இனி யாரும் செருப்பை தைப்பதற்கு வர மாட்டார்கள். என்ன செய்வதென்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். ஒழுகாத இடம் தேடி நின்று கொண்டிருந்தவன் புத்தியில் ஒரு நிகழ்ச்சி அவன் பிடரியில் படார் என்று அடிப்பது பாேல் இருந்தது.
” இது உண்மையா? நாம் காண்பது நிஜமா? இப்படியும் ஒரு தாய்மைப் பாசமா ? என்று நினைத்துக் கொண்டிருந்தான் தர்மன். அது உண்மைதான் என்பது அவன் போகப் போக தெரிந்து கொண்டாம்
மழைவெள்ளம் நிறைந்து வழியும் சாலையில் தண்ணீர் வரும் ஒரு இடத்தில் ஒரு சுழியில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. அந்தத் தண்ணீரை உற்றுப் பார்த்தபடியே இருந்தான் தர்மன்.
அந்தச் சுழியில் இறங்கிய ஒரு எலி தன் வாயில் ஒரு குட்டியை தூக்கிக் கொண்டு வெளியே வந்தது மறுபடியும் அந்தச் சுழியில் உள்ளே நுழைந்த அந்த எலி உள்ளே இருந்து மறுபடியும் ஒரு குட்டியைத் தூக்கி வந்து ஒழுகாத ஒரு இடத்தில் போட்டது.
இப்படிப் பத்துத் தடவைக்கு மேல், தண்ணீர்ச் சுழியில் இறங்கி அங்கு இருந்த எலிக்குட்டிகளைத் தூக்கிக் கொண்டு வந்து வெளியில் போட்டது தாய் எலி.
இதைப் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்த தர்மனுக்கு என்னவோ பாேலானது.
ஒரு நாள் மழை பெய்கிறது. நமக்குத் தொழில் கெட்டு விட்டது .எப்படி வாழப் போகிறோம் ? நினைத்துக் கொண்டு குழம்பிக் கொண்டிருந்தாேம். நமக்கு இப்படி ஒரு ஆறுதலா? இந்த மனித வாழ்க்கை மட்டும்தான் தாய்மை. இன்பம். துன்பம் என்று இருக்கிறதா ? என்று நினைத்துக் கொண்டிருந்தோம் .ஆனால் எல்லா உயிர்களுக்கும் தாய்மை உணர்வு இருக்கிறது” என்பதை அறிந்து கொண்டாேம் என்று ஒழுகாத இடத்தில் தன் குட்டிகளைத் தூக்கிப்போட்ட அந்த தாய் எலி தன் குட்டிகளை நாவால் தடவி விட்டுக் கொண்டிருந்தது.
தொடர்ந்து மழை சோ எனப் பெய்து கொண்டிருந்தது.
குட்டிகளை தன் நாவால் தடவிக் கொடுத்துத் கொண்டிருந்த தாய் எலியைப் பார்த்த தருமனுக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது
இந்த பூமியில் வாழ்வதற்கு பணம் மட்டும் அவசியம் இல்லை. தைரியம் தான் அவசியம் என்பதை இந்த எலி நமக்குச் சொல்லிக் கொடுத்து விட்டதே?என்று தெளிந்தான் தருமன்.
நம்மை என்ன செய்யப் பாேகிறது இந்த மழை ? பார்ப்போம்?
என்று தைரியமாக நின்று கொண்டிருந்தான் தர்மன்.