சிறுகதை

தாய்மாமன் செய்முறை | ராஜா செல்லமுத்து

எத்தனை உறவுகள் ஒன்று கூடினாலும் தாய்க்கு அது ஈடாகாது”

“இந்த நகை நல்லாயிருக்கான்னு பாரு அபிராமி ” என்று அடுக்கி வைக்கப் பட்டிருந்த நகைகளிலிருந்த ஒரு நகையைக் காட்டினான் நாகராஜ்

“இல்லண்ணே இத விட நல்லதா பாப்பமே ” என்ற அபிராமி மீண்டும் நகைகளை ஆராய் ஆரம்பித்தாள்.

“அத எடுங்க” என்று கடைக்காரரிடம் கேட்ட போது அவர் கொஞ்சங் கூட சலிக்காமல் நகைகளை எடுத்து காட்டினார்

“ம் ம்ம்” என்ற பெருமூச்சை விட்ட படியே நகைகளைத் தேர்வு செய்ய ஆரம்பித்தாள்.

அண்ணே இது நல்லா யிருக்கான்னு பாரு என்று ஒரு நகையைக் காட்டினாள்

“ம்” உனக்கு பிடிச்சிருக்கா?

“ஆமாண்ணே

எடுத்துக்கோ என்ற நாகராஜ் இது எத்தனை சவரன்?

மூணு” எவ்வளவு?

இதோ என்ற கடைக்காரன் அவர்களுக்கு பிடித்த நகையை எடை போட்டு பில் தொகையைச் சொன்னான்.

எவ்வளவு ஆச்சு?

எழுபத்தி எட்டாயிலும் ரூபாய் ஓ.கே என்ற நாகராஜ் பாக்கெட்டிலிருந்த பணத்தை எடுத்து சர்…. சர்…. . என எச்சில் தொட்டுத் தொட்டு எண்ணினான்.

“சரியா இருக்கான்னு பாருங்க”

“இதோ” என்ற நகைக்கடைக்காரன் பணம் எண்ணும் மிஷினில் ரூபாய் நோட்டுக்களை வைத்தான். பணத்தை உள் வாங்கிய மெஷின் “சர்ர்” என ஒன்று கூட விடாமல் எண்ணித் தூக்கிவைத்தது.

சரியா இருக்கு வேற ஏதாவது பாக்குறீங்களா?

“இல்ல” என்று சொல்லிக் கொண்ட நாகராஜ் அங்கே இருந்த அம்மா அப்பாவைப் பார்த்தான்.

இரண்டு பேரின் கண்களும் நீரால் நிறைந்து நின்றன. அவர்கள் நாகராஜனைப் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருந்தது.

நாகராஜனும் கண்களாலே பதில் சொன்னான்.

“போகலாம்மா”

“ம்” என்று குடும்பமே நகைக் கடையை விட்டு வெளியேறினர்.

“வேறென்ன வேண்டும்”

“மாலை டிரஸ் பழம் வெத்தல பாக்கு. அவ்வளளவு தானா?

“ஆமா”

“அபிராமி போதுமாம்மா”

“போதும்ண்ணே. ஒன்னோட சக்திக்கு தக்கன எடுத்துத் தா. கடன் கிடனெல்லாம் வேண்டாம்ண்ணே என்ற அபிராமி எடுத்த நகைகளை மீண்டும் சரியாக வைத்துக் கொண்டாள்.

மாலை கடை எங்க இருக்கும்மா

மார்க்கெட் போவமா?

அங்க கொஞ்சம் விலை கம்மியா இருக்கும்.

சரி அங்கயே போவோம் என்றவர்கள் மார்க்கெட்டுக்குச் சென்றனர்.

கலர்கலராய் தொங்கிக் கொண்டிருந்தன மாலைகள்.

“இது சரியா இருக்கான்னு பாரும்மா”

“இது பெருசுண்ணே” தாங்கமாட்டா

“இது’’ என்று இன்னொரு மாலையைக் காட்டினான் நாகராஜ்.

இது சரியா இருக்கும்ன்ணே என்றவள் ஒரு சின்ன மாலையைத் தேர்வு செய்தாள்.

பாப்பா எப்பிடி இருக்கா.

இருக்கான்னே என்ற போதே அபிராமியின் கண்கள் பணித்தன.

“ஏய் ஏம்மா”

இல்லண்ணே… நீ மெட்ராஸ்ல இருக்க. இங்க புள்ள பெரிய மனுஷியாகிட்டா தாய்மாமன்னு சொல்ல உன்னைய விட்டா வேற யார் இருக்காண்ணே என்று அபிராமி கலங்கிய போது குடும்பமே கண்ணீரில் மூழ்கியது.

‘‘விடும்மா அதான் வந்திட்டானே …அப்பெறம் ஏன் இப்படி அழுதிட்டு இருக்க’’.

“இல்லப்பா …அண்ணன் தான் சினிமா அது இதுன்னு கஷ்டப்பட்டுட்டு இருக்கே. எங்க வராதுன்னு நினைச்சிட்டு இருந்தேன் . வந்திருச்சு அதான் ஒரு மாதிரியா இருந்துச்சும்மா” என்றபடியே அபிராமி அழுதாள்.

ஏண்ணே காசு இல்லாம கஷ்டப்பட்டு இருந்தியே. எப்படி இவ்வளவு ரூபா வந்துச்சு .யார்கிட்டயும் கடன் ஏதும் வாங்குனியா? என்ற அபிராமி கேட்ட போது நாகராஜால் பேசவே முடிய வில்லை .

ஏய் சும்மா இரு. அதெல்லாம் நீ ஏன் கேக்குற. அதான் ஒனக்கு தாய்மாமன் செய்ற செய்முறைய அவன் செஞ்கிட்டு இருக்கான. பெறகு எதுக்கு அவன போட்டு கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்கே என்ற அம்மா தன் மகனை விட்டுக் கொடுக்காமல் பேசிக் கொண்டிருந்தாள்.

நாகராஜால் மேற்கொண்டு எதையும் பேசவே முடியவில்லை.

டேய் சும்மா இருபா. பொண்ணு மாதிரி அழுதிட்டே இருப்பான் என்ற அப்பா நாகராஜைத் தேற்றினார்.

அம்மாவை ஈரம் சுமக்கும் விழிகளோடு நோக்கினான்.

அந்த இரவு நடந்தவைகள் அவன் மனக்கண் முன்னே விரிந்தன.

என்ன நாகராஜ் கிளம்பிட்டியா?

“ஆமாப்பா …வேற விசயமா இருந்தாலும் பரவாயில்ல. ஒன்னோட தங்கச்சி மகள் வயசுக்கு வந்திட்டா .தாய்மாமன் நீ ஒருத்தன் தான். வேற ஆம்பளைங்க ஏதுமில்ல. நீ வரலன்னா ஊர்ல இருக்கிற ஆளுக ஒருமாதிரியா பேசிப்புடுவாங்க. பஸ்ஸூக்கு யார்கிட்டயாவது கொஞ்சம் பணம் வாங்கிட்டு ஓடியா மிச்சத்த பாக்கலாம்

சரிம்மா” என்ற நாகராஜ் இந்த இருபது வருடங்களில் என்ன சேர்த்து வைத்தான்.

எதுவுமில்லை. சினிமா இந்த மாய உலகத்திற்குள் வந்து நான் மாட்டியிருக்கக் கூடாதோ? உண்மையை மட்டுமே பேசிப் பழகிய எனக்கு பூச்சுப் பேச்சு வர மறுக்கிறதே .பொய்பேச நா கூசுகிறதே … இந்த ஒப்பனை வாழ்க்கைக்குள் என்ன ஒப்படைத்தது என் தவறு தான் .யாரைச் சொல்லியும் குற்றமில்லை. இது அத்தனைக்கும் காரணம் நான் தான் . என்ற நாகராஜன் இரவுப் பயணம் கண்ணீரோடே கடந்து வந்தது.

பனிவிழும் அதிகாலையிலே நாகராஜை எதிர்பார்த்து பேருந்து நிலையத்திலேயே அம்மாவும் அப்பாவும் காத்திருந்தனர். வரும் பேருந்தை ஆசலோடு பார்த்துக் கொண்டே இருந்தனர்.

அந்தா அவனான்னு பாருங்க .அவன் இல்லடி. எம் மகன் கட்டு மஸ்தா இருப்பான் என்ற அப்பா நாகராஜனுக்கு இலக்கணம் சொல்லிவிட்டு வரும் பேருந்தை இருவரும் எதிர்பார்த்தே இருந்தனர்.

ஒரு பேருந்திலிருந்து இறங்கியவனை ஓடிப் போய்த் கட்டிப் பிடித்தாள் அம்மா

நாகராசு எப்படி இருக்க?

என்னய்யா இப்படி எளச்சுப் போயிட்ட சாப்பிட்டயா?

ம்ம்…. என்று மட்டும் தலையாட்டினான்.

இந்தாய்யா பணம்.

வச்சுக்க ஊருக்குள்ள நீ வெறுங்கைய வீசிட்டு வந்தா நல்லா இருக்காது. பிடி என்று லட்ச ரூபாய்க் கட்டைக் கையில் திணித்தாள் அம்மா.

“அம்மா”

“புடிடா” நீ ஒத்தக்காசு இல்லாம தான் இங்க வந்திருப்பேன்னு தெரியும்”

என்று அம்மா சொன்னது ஞாபகம் வர மாலையை வாங்கிக் கொண்டு நடந்தனர்.

தான் செலவழித்த நாட்களை எண்ணி வேதனைப்பட்டான் நாகராஜ்

அவனின் அடுத்த இலக்கு சரியாக இருக்குமென நம்பிக் கொண்டு நடை போட்டான் நாகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *