உத்தமபாளையம், டிச.9–
தாய்ப்பால் கொடுத்தபோது புரையேறி 22 நாள் பச்சிளங்குழந்தை இறந்தது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோவிந்தம்பட்டி இந்திராகாலனியை சேர்ந்த மகாலிங்கம் மனைவி கவிதா (வயது 24). இவர்களுக்கு சக்திவேல் (4) என்ற மகனும், சாய்ஸ்ரீ(3) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் 3–வதாக கருவுற்ற கவிதாவிற்கு கடந்த 22 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. சம்பவத்தன்று அந்த குழந்தைக்கு படுத்துக் கொண்டிருந்தவாறே தாய்ப்பால் கொடுத்த கவிதா அதன் பிறகு குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது குழந்தையின் காதிலும், மூக்கிலும் பால் வெளியேறி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது.
இதனால் பதறிப்போன கவிதா உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்து சென்றார். ஆனால் அது ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தைக்கு பால் கொடுத்தபோது புரையேறியதால் அது இறந்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.