சிறுகதை

தாயெனும் தெய்வம் | கௌசல்யா ரங்கநாதன்

Spread the love

அம்மாவைக் காணவில்லை.

எங்கள் நெஞ்சை அடைக்கிறது. எங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் உரியவர்.

அம்மாவைக் காலை முதலே காணவில்லை எங்கே போயிருப்பார் .

அதுவும் எங்களிடம் சொல்லி விட்டுத்தான் வெளியே எப்போதும் போவாங்க .

அதுவும் குறைந்த தூரம் மட்டுமே.

75 வயதாகும் என் அம்மா எப்போதும் காலை 5 மணிக்கு எழுந்து வாசல் தெளித்து,கோலம் போட்டு பால் காய்ச்சி காபி கலந்து குடித்து விட்டு அன்றைய சமையலுக்கு தேவையான அனைத்தையும் மள மளவென செய்துமுடித்திருப்பார். நான் படுக்கையை விட்டு எழுந்து வந்து பார்க்கையில் அனேகமாய் சமையலையே முடித்திருப்பங்க அம்மா.

எனக்கு வெட்கம் பிடுங்கி தின்னும்.

“என்னம்மா, கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். அதிகாலையில் எழுப்பியிருக்க கூடாதா?” எனும் போது ஒரு புன்சிரிப்புடன் “எதுக்கு உன்னை எழுப்பணும்? இந்த வயசில் தூங்காட்டா அப்புறம் எப்ப தூங்க முடியும்மா.. நிம்மதியா ரெஸ்ட் எடு” என்பார்.

“என்ன பெரிய வேலை இருக்கு இங்கே. கூட மாட ஒத்தாசை செய்ய” எனும் போதெல்லாம் நான் சொல்வேன்.

.”இருந்தாலும்…..”மறுபடி அம்மா, விடு..சின்னஞ்சிறிசுக இப்ப எந்த கவலையையும் மனசில் போட்டு குழப்பிக்கக் கூடாது. நாளைக்கே உன் குழந்தை வளர்ந்துட்டா இருக்கவே இருக்கு ஓய்ச்சல் ஒழிவு இல்லாத வாழ்க்கை” என்பார்.

அம்மா புறம்பேசி நாங்கள் பார்த்ததில்லை.அம்மா அடிக்கடி சொல்வார்,

“பார்த்து பழகுடி பெண்ணே எல்லார் கிட்டவும். நீ வெகுளியாய் இருக்கே.உன் வாயைப் பிடுங்கி, அதை பலவிதமா, பத்தவச்சு உன் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தறவங்களும் இருக்காங்க.

கெட்டவங்களை ஒதுக்கிட்டு,நல்லவங்ககூட சாவகாசம் வச்சுக்கணும். அதுவும் அப்படி அந்த தீயவர்களை நாம் ஒதுக்கறோம்ன்றது கூட அவங்களுக்கு தெரியாம”என்பார்.

எனக்கும் என் கணவருக்கும் ஒரு சின்னத் தலைவலி என்றாலும் பதறி, துடித்து போய் விடுவார்! அம்மாவை பிடிக்காதவர்கள் என்று யாருமே கிடையாது. எஎல்லோரிடமும் இன்முகம் காட்டுவார். உதவி தேவைப் பட்டால் ஓடோடி வந்து செய்வார்.

அப்படிப்பட்ட அம்மாவைக் காணவில்லை காலை முதலே காணவில்லை!

“வந்துடுவாங்க. எங்கே போயிருக்கப் போறாங்க? ஏன் வீண் கவலை படறீங்க?” என்றார்கள் அக்கம் பக்கத்தினர். “இது போல அம்மா எங்கேயும் தனியாய் இவ்வளவு நேரம் போனதில்லையே.

“”அதனால் என்ன?சீக்கிரமா வந்துடலாம்னு சொல்லாம போயிருக்கலாம்.போன இடத்தில் தாமதம் ஆயிருக்கும்.வந்துடுவாங்க”.என மனதை சமாதனப்படுத்தி

என் கணவரிடம் கேட்டேன் “அம்மா வந்துடுவாங்களா?” என்று அழுதபடியே!

“அசடு..ஏன் அழுகிறாய் ? வந்துடுவாங்க” என்றார் அவரும்.

வெற்று வார்த்தைகள் ஆறுதலை தருமா என்ன? இருந்தாலும் இப்படியொய் ஆறுதலும் பிறரிடமிருந்து தேவைப்படுகிறதென்பதும்

உண்மைதானே.மணியோ ஓடிக்கொண்டேயிருக்கிறது.எங்குதான் போயிருப்பார்?

வெளியில் போய் ஏதாவது விபத்து…….நினைத்துப் பார்க்கவே அச்சமாயிருக்கிறது…அம்மாவை யாராவது

கடத்திக்…….சே.. என்ன அற்பத்தனமான யோசனை…அம்மா தைரியசாலி.எதையும் எதிர்கொள்ளும் மன உறுதி படைத்தவர். அம்மாவுக்கு விரோதிகள் என்று யாருமே இல்லை.

“பாட்டி வந்துடுவாங்கம்மா. பயப்படாதே” என்றான் என் மகன்.

குழந்தை வாக்கு பலிக்கட்டும். மணி காலை 10. இனி பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

“என்னங்க..என்னங்க…எனக்கு கவலையாய் இருக்குங்க”, என்றபோது அவரும் “எனக்கும்தான்” என்றார்.

நான் அழுவது பார்த்து அவரும்”ஏன் பைத்தியம் மாதிரி எதை எதையோ நினைக்கிறே”., என்றவர் கண்களிலும் கண்ணீர் தெறித்து நிற்பது தெரிந்தது.

“அப்ப அம்மா வந்துடுவாங்கள்ள…..வந்துடுவாங்கள்ள”…

“ஷ்யூர்..வந்துடுவாங்க பாரு..எங்கேயாச்சும் போயிருப்பாங்க.. யாராவது பழைய ஃப்ரண்ட்ஸை பார்த்திருப்பாங்க..நேரம் போறது கூட தெரியாம பேசிக்கிட்டிருந்திருக்கலாம்..”

“அப்படின்றீங்க..அம்மா.அம்மா,அம்மா……”

“சே ..அசடு..அவங்க உனக்கு மட்டுமா அம்மா.எனக்கும் தான்.

நான் ஒண்ணு பண்றேங்க. இப்ப மறுபடி தலைக்கு குளிச்சுட்டு, ஈரத்துணியோட ஸ்ரீதேவி, பூமிதேவி நாச்சியார் சமேதராய் காட்சி தரும் நம்ம குலதெய்வம் உப்பிலியப்பனுக்கு காசு முடிஞ்சு வைக்கலாம்னு இருக்கேன்”.என்ற போது “குட்..அப்படியே செய்” என்றார் என் கணவர்.

“ஈன்ற தாயை நான் கண்டதில்லை..எனது தெய்வம் வேறெங்குமில்லை… என்ற பாடல் வாரிகள்தான் இப்ப என் நினைவுக்கு வருதுங்க..” என்ற போது அவர்,

“நீ இப்ப என்ன சொல்ல வரேனு புரியுதும்மா..’’

எஸ்..ஒரு பெத்த தாய் இருந்தாக்கூட இப்படி பார்த்துப் பார்த்து செய்வாங்களா என்ன. அவங்க என்னை பெறாத பிள்ளையாத்தானே நினைச்சு எல்லாத்தையும் செய்யறாங்க..எதாவதொண்ணுனா துடிச்சு போயிடறாங்க..”என்ற என் கணவரிடம்

“நீங்களாவது ஒரு ஆண்..ஆனா நான்! இவங்க ஒரே பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு இந்த வீட்டுக்கு வந்தவ. என்னை பெறாத பெண்ணாகவே பாவிச்சு அன்பு செலுத்தின தெய்வம் இவங்க.

யார் கண்கள் பட்டிச்சோ, அவர் இரண்டு வருஷங்களுக்குள்ளேயே இப்படி அநியாயமாய் ஒரு நாள் காய்ச்சல்ல போயிடுவார் என்று. என்னையும் என் மகனையும் விட்டுட்டு போவார் என்று நான் எதிர்பார்க்கலைங்க.

நானாவது மூணு வருஷங்களுக்கு முன்னாலதான் இவங்க பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு இந்த வீட்டில் காலடி எடுத்து வச்சேன்.எனக்கே இந்த பேரிழப்பு தாங்கலை.

ஆனா நீங்க….

அம்மா தன் ஒரே பிள்ளையையும் தன் புருஷனையும் பறி கொடுத்துட்டு படிப்பறிவும் பட்டறிவும் இல்லாம அன்பு மட்டுமே செலுத்தி வளர்க்க என்ன பாடு பட்டிருப்பாங்க என் மாமியார் சாரி என்னைப் பெறாத தாய்.

நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி மேற்கொண்டு என்ன செய்யணும்னு தீர்க்கமா ஒரு முடிவெடுத்து, உங்களை எனக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க இந்த பெரிய மனசு வரும்? துன்பத்தைக் கண்டு துவண்டு போகாமலும் இன்பம் வரும் போது தலைகால் புரியாமல் ஆடாம எப்போதும் ஒரே மாதிரி இருக்கிற ஒரு “நிலை”. உன் வாழ்க்கை மொட்டிலேயே

கருகிடக்கூடாதுனு என்னைப் பலவிதமா, பல நாட்களாக சமாதானம் செய்து என் காலத்துக்கு பிறகு நீ என்னம்மா பண்ணுவே ஒரு குழந்தையும் வச்சுக்கிட்டு. அம்மா தி கிரேட்…”

வாங்க..போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் கொடுக்கலாம்” என்று வீட்டை பூட்டிக் கொண்டு வாசல் பக்கம் வரும் போது அங்கு அம்மா விரைவாக வந்து கொண்டிருந்தாள்..

“என்னம்மா, எங்கே போயிட்டீங்க. எங்களையெல்லாம் அழ வச்சுட்டு? அப்படியென்ன தப்புமா நாங்க பண்ணிட்டோம்?” என்றபோது….

“அசடு,அசடு..என்னவோ இன்னைக்கு காலையில் கோவிலுக்கு போய் அந்த ஜகன்மாதா கிட்ட நீ,உன் புருஷன், என் பேரன் எல்லாம் தீர்க்காயுசா, நோய், நோடி எதுவும் இல்லாம சீரும் சிறப்புடன் வாழணும்னு பிராத்தனை செய்ய தோணிச்சு..அதான் போனேன்..” என்றார் பாசத்துடன்.

நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *