சிறுகதை

தாயின் வாசம்- ஆர். வசந்தா

அந்தக் கோவில் திருவிழாவில் ஒரு பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. தலைப்பு ‘தாய் பற்று – தந்தை பற்று’ என்பது தான்.

‘தாய் பற்று’ சிறந்தது என்று சிலர் பேசினர். சிலர் தந்தையின் பாசமே உயர்ந்தது என சிலர் பேசினர்.

தாய் பற்றே என்று பேசிய ஒருவர் சொன்னார்:

நம் நாட்டை தாய் நாடு என்று தான் சொல்வோம். பாரத மாதா என்று தான் உரைப்போம். நம் நாட்டின் நதிகளை கங்கை, காவேரி, கோதாவரி, நர்மதா, சிந்து என்று தான் அழைக்கிறோம்.

‘வீர சிவாஜி’ என்று உருவானவர் தன் அன்னையினால் தான் உருவானார்.

புரட்சி தலைவரும் தாய்பாசம் மிகுந்தவர். அதனால் அவர் பாடிய ‘தாயில்லாமல் நான் இல்லை’ என்ற பாடலால் மக்களை தன் வசப்படுத்தியவர்.

மோகன் தாஸ் காந்தியாக தன் தாய்க்கு தந்த 3 வாக்குறுதிகளை கடைப்பிடித்தது ஒழுக்கத்தில் உயர்ந்ததால் தான் காந்தி மகான் ஆனார் என்று ஒருவர் உரைத்தார்.

தாயிற்சிறந்த கோயில் வேறில்லை எனத் தாய்க்கு பெருமை சேர்க்கும்படி பேசினார்.

தந்தை தான் குடும்பத்தை அதிகம் சுமப்பவர் என்று பேசியவர் :

இந்திராகாந்தி தன் தந்தையை மிகவும் மதித்து அவர் வழியில் உயர்ந்தார்; நாட்டை வழி நடத்தினார் என்று புகழ்ந்தார்.

‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற தன் தந்தையின் பொன் மொழியை கடைப்பிடித்ததால் தான் ஏவிஎம் சரவணன் மிக உச்சத்தைத் தொட்டார் என்று ஒருவர் பேசினார். மற்றொருவர் பரசுராமரை உதாரணம் காட்டினார். ஒருவர் தந்தை சொல் மிக்க மந்திரம் வேறில்லை என்ற பழமொழியை சுட்டிக்காட்டினார்.

‘தந்தை வழியில் நடந்த லேணா தமிழ்வாணன் தான் சிகரம் தொட்டார் என்று தந்தை கட்சியினர் பேசினார். இப்படி அவர்கள் தந்தையின் பெருமையைச் சொன்னார்கள்; தன் அணியினருக்கு வெற்றியை சேர்க்கக் கணை தொடுத்தனர்.

இரு பக்கத்து வாதங்களையும் உன்னிப்பாக கவனித்தார் நடுவர். அவரால் இரு பக்கத்திலும் சமமான நியாயங்கள் இருப்பதை உணர்ந்தார். ஒரு குடும்பம் சீராக இயங்க இருவரின் பற்றும் பாசமும் நிச்சயமாகத் தேவை. 2 தண்டவாளத்தின் மீது தான் குடும்பம் சீராகச் செல்ல முடியும் என்றார் நடுவர். அதனால் தாயும் தந்தையும் சமமானவர்கள் என்று தீர்ப்பு சொன்னார்.

பட்டிமன்றம் முடிந்ததும் சிறப்பு விருந்து நடந்தது. அனைவரும் உண்டு மகிழ்ந்து வீடு திரும்பினர்.

எச்சில் இலைகள் வெளியே கொட்டப்பட்டன. ஒரு குட்டி ஆடு ஒன்று வேகமாக இலைகளை நோக்கி வந்தது. ஒரு இலையை சாப்பிட முகர்ந்தது. அதில் தன் தாயின் வாசத்தை உணர்ந்தது. அப்படியே அடுத்த இலைக்கு போனது. அதிலும் தன் தாயின் வாசத்தை உணர்ந்தது. பிறகு வேகமாக வெளியேறியது. தன் தாயின் பரிவும் கனிவும் அதன் கண்களில் தெரிந்தது. தான், தன் தாயின் மடியில் முட்டி முட்டி பால் குடித்தது நினைவுக்கு வந்தது. தன்னை தாய் தன் தலையால் முகத்தை முகர்ந்தது ஞாபகம் வந்தது. அந்த ஆட்டுக்குட்டிக்கு தன் தாய்ப்பாசம் பீறிட்டு வந்தது.

அதனால் வாய் பேச முடியாததால் மனத்தால் மட்டும் தன் பாச உணர்வை உணர்ந்தது. இந்த உணர்வு மட்டும் நடுவருக்குத் தெரிந்தால் கண்டிப்பாக தாய்ப்பற்றே என தீர்ப்பளித்திருப்பார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *