டெல்லி, ஆக. 9–
தாயின் தங்க நகைகளைத் திருடி விற்று, காதலியின் பிறந்த நாளுக்கு, ஐபோன் வாங்கிய 9 ஆம் வகுப்பு மாணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் நஜாஃப்கர் என்ற பகுதியில் தனது வீட்டில் இருந்த தங்க செயின்கள், கம்மல் மற்றும் மோதிரம் காணாமல் போனதாக 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமாரவை போலீசார் சோதனை செய்துள்ளனர். ஆனால், சந்தேகப்படும்படியான வெளிநபர்கள் யாரும் வீட்டிற்குள் வந்து செல்லாதது தெரியவந்தது.
மாணவன் கைது
எந்த ஒரு துப்பும் கிடைக்காத நிலையில், இச்சம்பவம் நடந்ததில் இருந்து அப்பெண்ணின் மகன் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவரின் பள்ளி நண்பர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுவன் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் வாங்கியிருந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் நடைபெற்ற நாளில் இருந்து அப்பெண்ணின் மகனைக் காணவில்லை என்பது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்தது. இதையடுத்து, தொடர்ந்து மாணவரைத் தேடி வந்த நிலையில் ஒவ்வொரு முறையும் அவர் தப்பித்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 6ம் தேதி மாணவர் தனது வீட்டுக்கு வருவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் கண்காணித்து வந்தனர். மாலை 6.30 மணியளவில் அப்பகுதிக்கு வந்த மாணவர் சுற்றிவளைத்து கைதுசெய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவர் தனது காதலிக்கு பிறந்த நாள் பரிசு கொடுப்பதற்காக தனது தாயின் தங்க காதணி, மோதிரம், செயினை கக்ரோலா பகுதியில் உள்ள தங்கநகை வியாபாரிகள் இருவரிடம் விற்பனை செய்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய 40 வயதான கமர்வர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.