சிறுகதை

தாயானாள்.. காதலி…! – ராஜா செல்லமுத்து

நினைவுகள் எல்லாம் நெருப்பாகவும் கனவுகள் எல்லாம் காயங்களாகவும் பார்ப்பதெல்லாம் கசப்பாகவும் வாழும் வாழ்க்கை எல்லாம் வெறுமையாகவும் இருந்த நேசனுக்குள் ஒரு மெல்லிய காலைப் பொழுதில் மெல்ல நுழைந்தாள் வீணா. அவள் வரும் வரையில் அடைத்தே கிடந்த அவனின் இதய வாசல் கதவுகள் எல்லாம் அன்று பூக்களை பொக்கேவாக வடித்துக் கொண்டு அவன் கைகளில் வலுக்கட்டாயமாகத் திணித்துவிட்டு சென்றன.

” இந்த இதய ரோஜா செடியில் ஒற்றைப் பூ பூத்து விட்டால், அத்தனை முட்களும் உதிர்ந்து போகின்றன” என்று எங்கோ படித்த கவிதை அவன் மூளைக்குள் முகாமிட்டு வாழ்க்கையை வசந்தமாக்கியது .அதுவரையில் கண்டிராத ஒரு ஆனந்த அவஸ்தையை அவனுக்குள் விதைத்தாள் வீணா

வீணா என்ற பெயருக்கு ஏற்றது போல வீணை வாசிப்பாள். வயலின் வாசித்துக் கொண்டிருந்த அவனுக்குள் அவள் வீணையின் கிட்டார் ஒலியை மீட்டினாள் வீணா.

எதற்கெடுத்தாலும் அழுது காெண்டிருந்த அவனின் பொருளற்ற அழுகைக்கு அவள் மெல்லிய குரலில் அன்பை விதைத்து தொலைதூரத்தில் இருந்து அவனைத் தேற்றினாள்.

ஏன் இப்படி அழுதுட்டு இருக்கீங்க? அர்த்தமற்ற அழுகையில எந்த பயனும் இல்லை. உங்களுடைய நேர்மையை திறமையை ஏன் நீங்களே குறைத்து மதிப்பிடுறீங்க? உங்களுக்கான வாசல் கண்டிப்பா திறக்கும் .நீங்க வருத்தப்படவோ கலங்கவோ கூடாது. அப்படி கலங்கினீங்கன்னா நீங்க தான் கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

“எல்லாம் இருந்தா சந்தோசமா இருக்கும் அப்படிங்கறத விட சந்தோசமா இருந்தா எல்லாம் கிடைக்கும் : அப்படின்னு நினைங்க ” என்று கவிதையே வாசித்தாள்.

அதனால சந்தோசமா , ஜாலியா றெக்க விரிச்சி பறக்கிற பறவையா இருந்தீங்கன்னா, இந்த உலகம் உங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும் என்று ஆறுதல் வார்த்தைகளை எங்கிருந்தோ தேவதை பூ மாரி பொழிவது போல தெளித்துக் கொண்டிருந்தாள்.

அதுவரை அவன் சந்தித்திராத ஒரு பெண்மையின் உண்மையை அவனது உள்ளம் கொண்டாடியது. அவன் மனதுக்குள் மகரந்த சேர்க்கை நடந்து பேசும் வார்த்தைகள் எல்லாம் பூப் பூத்து நறுமணம் வீசியது .

வெறுமையாக இருந்தவன் உலகத்தில் இப்போது கோடி நிலவுகள் உதித்து ஒளிர்வதாக உணர்ந்தான்.

எப்போது பேசினாலும் அவன் ஏற்பாடு செய்யாமலே அவன் இதழ்கள் புன்னகைக்கு தயாராகின.

வீணாவைத் தன்னுடைய காதலியாக வரிந்து கட்டிக் கொண்டான் .

அவள் காதலிக்கிறாளோ இல்லையோ இருவருக்கும் சேர்த்து நேசனே காதலித்தான்.

காதலை அவளிடம் சொல்லலாமா வேண்டாமா? என்று அவனுடைய அடி மனதில் பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது.

அவள் அக்கறை, கனிவுப் பேச்சு எல்லாம் அவனுக்குள் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அந்த அதிர்வை அவனுக்குள்ளேயே அடை காத்து வைத்திருந்தான்.

கொஞ்சம் கூட வீணாவை நோக்கி நகர்த்தவில்லை.

நாட்கள் செல்லச் செல்ல அவனுடைய இதய ஈரத்தில் வீணா வீணை மீட்டும் சரஸ்வதி ஆகவே வீற்றிருந்தாள்.

இன்று சொல்லி விடுவது என்று முடிவு செய்தான் .அது நடக்காமல் போய்விடும் .நாளை சொல்லிவிடலாம் என்று நினைப்பான். அதுவும் நடக்காமல் போய்விடும்.

நாட்கள் நகர நகர வீணாவின் மெல்லிய பேச்சு அவன் காதுகளுக்குள் விழுந்து உயிருக்குள் கூடு கட்டியது.

அவளைத் தன் காதலியாகவே வரிந்து கட்டிக் கொண்டான்.

இதை அவளிடம் சொல்லவில்லை என்றால் அவனுக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது .

ஒரு நாள், இரண்டு நாள் என்று மாதங்கள் கடந்தன. இன்று சொல்லிவிடலாம் என்று எத்தனித் தான்.

ஆனால் அவன் மனது வேறு மாதிரி ஒரு விஷயத்தை சிந்தித்தது .

ஏன் தொட்டுக் கொண்டால் மட்டும் தான் அன்பு பிறக்குமா? ஒட்டிக்கொண்டால் மட்டும் தான் உறவு இருக்குமா? கட்டிக்கொண்டால் மட்டும் தான் காதல் பிறக்குமா? ஏன் தூய்மையான அன்பில் நேசம் பிறக்காதா ? இனி வீணா காதலியல்ல . அம்மா, தாய் என்று அவன் மனதில் எழுதி வைத்தான்.

வீணாவைத் தன் காதலி என்று நினைத்துக் கொண்டிருந்தவன் மனது அவளை அம்மாவாகியது.

காதலியை விட உதிரம் கொடுத்து உயிர் கொடுக்கும் தாயின் ஸ்தானம் உயர்ந்தது.

தன்னை ஒரு இடத்திற்கு கொண்டுவரும் அவளின் மேன்மை மிகுந்த பேச்சுக்களை ஏன் நான் கொச்சைப்படுத்த வேண்டும்? காதலியாக்கி ஏன் களங்கப்படுத்த வேண்டும் ? அவள் இனிமேல் என் அம்மா என்று இதயத்தில் எழுதிக் கொண்டான் நேசன் .

இப்போதெல்லாம் வீணா பேசும்போது அவனுக்கும் அவளுக்குமான உரையாடல்கள் ஒரு தாய்க்கும் மகனுக்குமான உரையாடல்களாகவே இருக்கின்றன.

தாயானாள்.. காதலி…!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *