செய்திகள்

தாம்பரம் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்களை இயக்க கூடுதல் தண்டவாளம்

Makkal Kural Official

3-வது முனையமாக்கும் பணி தீவிரம்

சென்னை, ஆக. 7–-

தாம்பரம் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்களை இயக்க கூடுதல் தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. 3-வது முனையமாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையை அடுத்த தாம்பரம் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில் வழித்தடத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கியது. அதன்படி, ஏற்கனவே தண்டவாளத்தில் உள்ள 220 கிலோ எடையுள்ள சிலிப்பர் கற்களை அகற்றிவிட்டு, புதிதாக 300 கிலோ எடை கொண்ட சிலிப்பர் கற்கள் அமைக்கப்படுகிறது.

இதற்காக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, அதில் ஏற்கனவே உள்ள ஜல்லி கற்கள் மாற்றப்படுகிறது. அதில் புதிய ஜல்லி கற்களை கொட்டி, அதன் மீது சிலிப்பர் கற்களை வைத்து தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. இதனால் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற விரைவு ரெயில்கள் பராமரிப்பு பணி முடிவடைந்த பின்னர் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இதேபோல, தற்போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரெயிலும் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது.

கூடுதல் ‘கிராஸ் ஓவர்’

ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்ற தண்டவாளங்களுக்கு செல்லும் வகையில் கூடுதல் ‘கிராஸ் ஓவர்’ வேலையும் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரையில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் கிராஸ் ஓவர் செய்து வந்தது. தற்போது 50 கிலோ மீட்டர் வேகத்தில் ‘கிராஸ் ஓவர்’ செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மின்சார வயர்களை சீரமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க விரைவு ரெயில் நிறுத்தமான 8-வது மற்றும் 9-வது நடைமேடையை பயணிகளின் நலனுக்காக நீட்டிக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

இது ஒருபுறம் இருக்க, தாம்பரம் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகளும் தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, தாம்பரம் ரெயில் நிலையம் 3-வது ரெயில் முனையமாக மாற்றப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, 3-வது முனையம் அமைப்பதற்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தாம்பரம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில்களுக்காக 4 நடைமேடைகளும், விரைவு ரெயிலுக்காக 4 நடைமேடைகளும் உள்ளது. கூடுதலாக நடைமேடை 9 மற்றும் 10 ஆகிய புதிய 2 நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், நடைமேடை 9-ல் தண்டவாளங்கள் அமைக்கும் பணி வரும் 14-ம் தேதிக்குள் முடிவடைய உள்ளது. இப்பணி முடிவடைந்த பின்னர் நடைமேடை 9-ல் விரைவு ரெயில்களும் இயக்கப்பட உள்ளது. நடைமேடை 10-ல் தண்டவாளம் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செல்கிறது. தாம்பரம் ரெயில் நிலையம் 3-வது முனையமாக மாற்றும் பணிகள் முடிவடைந்த பின்னர் எழும்பூர் ரெயில் நிலையத்தை போலவே தாம்பரத்தில் இருந்தும் தென் மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படும்.

இங்கு கூடுதலாக 2 விரைவு ரெயில் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் சிரமம் குறைக்கப்படும். தாம்பரம் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு பணி முடிவடைந்து விரைவில் 3-வது முனையமாக செயல்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *