செய்திகள்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு போலீஸ் சம்மன்

திருநெல்வேலி, ஏப். 15–

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.3.99 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

விசாரணையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு, ரூ.1.10 லட்சம் ரொக்கத்தைக் கைப்பற்றினர்.

இது தொடர்பாக விசாரிக்க கோவர்த்தனனுக்கு தாம்பரம் மாநகர காவல் துறை சம்மன் அனுப்பியது. பணம் எங்கிருந்து வந்தது, யார் மூலமாக வந்தது, யாருக்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து அவரிடம் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே, உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராக இயலாது எனகோவர்த்தனன் தரப்பில் வழக்கறிஞர் மூலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஆசைத்தம்பி, முருகன், ஜெய்சங்கர் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் யாரும் இதுவரை போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

மேலும், ரூ. 3.99 கோடி பணத்தைஒப்படைக்கும்படி வருமான வரித்துறையினர் செங்கல்பட்டு ஆட்சியருக்கு கடந்த 7-ம் தேதி கடிதம் அனுப்பினர். ஆனால் இன்னும் அதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்படவில்லை. பணமும் ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: சம்மன் தொடர்பாக எனக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை. அமைச்சர் துரைமுருகன் தொடர்புடையவர்கள் வீட்டில் இருந்து ரூ.5 கோடி பறிமுதல் செய்துள்ளனர். அவர்களுக்கு சம்மன் அனுப்பவில்லை. தேசிய நெடுஞ்சாலை அலுவலகத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கும் சம்மன் அனுப்பவில்லை.

திமுகவினர் எல்லா இடங்களிலும் வாக்குக்கு பணம் கொடுத்து வருகின்றனர். அதை எந்தப் போலீஸாரும் பிடிப்பதில்லை. எனது பிரச்சார வாகனத்தை ஒரே நாளில் 3 முறை சோதனை செய்தனர். காவல் துறை பாரபட்சத்துடன் செயல்படுகிறது.

எனக்கு வேண்டிய எல்லா இடங்களிலும் சோதனை நடத்தினர். எனது நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளால் எனக்கு எந்த மனஅழுத்தமும் இல்லை. ஒருதலைபட்சமாக தொடர்ந்து சோதனை நடத்துவதால், எங்களால் முறையாகப் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் வீடுகளில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். நெல்லை சந்திப்பில் எலெக்ட்ரானிக் கடை வைத்துள்ள மாவீரர் என்பவரது வீடு மற்றும் கடையில் சோதனை நடைபெற்றது. மேலும், அம்மன் சந்நிதி பகுதியில் உள்ள 2 வீடுகளில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையிட்டனர். சுமார்2 மணி நேரத்துக்கும் மேல் சோதனை நடைபெற்றது. இதில் பணம், பரிசுப் பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே கடந்த வாரம் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் வீடுகளில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், மீண்டும் நேற்று சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *