செய்திகள்

தாம்பரம் பகுதியில் புதிய மருத்துவ கல்லூரியை முதல்வர் அமைத்து தருவார்: டாக்டர் ராமதாஸ் பேச்சு

காஞ்சீபுரம், ஏப். 12-–

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து தாம்பரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீவிர பிரச்சாரம் செய்தார். 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை நீங்கள் வெற்றி பெறச் செய்யுங்கள், தாம்பரம் பகுதியில் நிச்சயம் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் அமைத்து தருவார் என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. கூட்டணி பாமக வேட்பாளர் டாக்டர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து தாம்பரம் சண்முகம் சாலையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் தலைமை வகித்தார். இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு வேட்பாளரை ஆதரித்து பேசியதாவது:

கருத்து கணிப்புகளில் பாஜக கூட்டணிக்கு 300 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 100 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. துணை நகரம் அமைக்க தயாநிதி மாறன் ஒரு புளுப்பிரிண்ட் கொண்டு வந்தார். தாத்தாவே இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார் என்று அனுப்பி வைத்தேன். ஆனால் துணை நகரம் 270 சதுர கிலோ மீட்டரில் அமைக்க கருணாநிதி மறுநாள் அறிவித்தார். அடுத்த நாள் தாம்பரம் அருகே ஒரு போராட்டத்தை செய்தேன். என் போராட்டத்தை பற்றி கருணாநிதிக்கு தெரியும். நான் ஒரு நாள் போராடியதும் துணை நகரம் வராது என்று அறிவித்தார்.

உலகம் தரம் வாய்ந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உலகம் தரம் வாய்ந்த ஒரு விளையாட்டு திடல் அமைத்து தருவேன். தாம்பரம் பகுதியில் ஒரு பெரிய மருத்துவ கல்லூரி, தரம் வாய்ந்த பல்நோக்கு மருத்துவமனை அமைத்து தருவேன். கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிச்சயம் அமைத்து தருவேன். தமிழக முதல்வரிடம் எடுத்து கூறி அமைக்க பாடுபடுவேன்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு சாராய ஆலை அதிபர் வேண்டுமா? மருத்துவர் வேண்டுமா? இந்துகள் புண்படுத்துகின்ற காரியத்தை சிலர் திட்டமிட்டு செய்கின்றனர். ராமானுஜர் படத்தை ஒரு கும்பல் அழித்தது, ஆண்டாளை கொச்சைப்படுத்திய வைரமுத்துவை கண்டித்தேன்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பிரச்சனையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கனிவுடன் கவனிப்பார். அதுபோல் நியாய விலைக்கடை பணியாளர்கள் பிரச்சனைகள், சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பிரச்சனை, சத்துணவு ஊழியர்கள் பிரச்சனைகளையும் தீர்ப்பார். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறப் போவது நாம் தான்.

39 இடங்களில் தனித்து நின்றே அண்ணா தி.மு.க. வெற்றி பெற்றது. மெகா கூட்டணியிலா இல்லை. ஒரு இடத்தில் தருமபுரியில் பாமக வெற்றி பெற்றது. எதிர்த்து நின்ற தி.மு.க.விற்கு டெபாசிட் இல்லை. நமது சின்னம் இரட்டை இலையுடன் கூடிய மாம்பழம்

டாக்டர் வைத்தியலிங்கத்தின் வாக்கு வித்தியாசம் 4 லட்சம், 5 லட்சம் வித்தியாசத்தில் இருக்க வேண்டும். அவ்வளவு பெரிய வெற்றியை நீங்கள் தர வேண்டும். இந்த சக்தி வாய்ந்த மெகா கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பரங்கிமலை ஒன்றிய கழக செயலாளர் என்.சி.கிருஷ்ணன், தாம்பரம் நகர கழக செயலாளர் எம்.கூத்தன், மாவட்ட மாணவரணி செயலாளர் செம்பாக்கம் ஜி.எம்.சாந்தகுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகி கோவிலம்பாக்கம் என்ஜினியர் சி.மணிமாறன், முன்னாள் எம்.எல்.ஏ. ப.தன்சிங், மாவட்ட பிரதிநிதி பி.கே.பரசுராமன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எல்.ஆர்.செழியன், தாம்பரம் பேரவை செயலாளர் கோபிநாதன், பீர்க்கன்காரணை பேரூராட்சி செயலாளர் ஏ.வி.சம்பத்குமார், பாமக மாவட்ட செயலாளர் வினாயகம், முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் கே.ஆறுமுகம், தேமுதிக மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், பாஜக நிர்வாகி வேதாசுப்பிரமணியன், தாமக மாவட்ட செயலாளர் தாம்பரம் மணி, உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் வெகு சிறப்பாக செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *