வர்த்தகம்

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தோடு எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி ஒப்பந்தம்

கொரோனா நோயாளிக்கு சித்த மருந்து

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தோடு எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி ஒப்பந்தம்

சென்னை, செப்.15-

காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இரண்டும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இதனால் கொரோனா நோயாளிக்கு ஆங்கில மருந்துடன் சித்த மருந்து வழங்க முடியும். இதற்கான நிகழ்ச்சி காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது.

எஸ்.ஆர்.எம். மருத்துவ நிறுவனத்தின் இணை துணை வேந்தர் டாக்டர் ஏ.ரவிக்குமார், டீன் டாக்டர் ஏ.சுந்தரம், தாம்பரம் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி மற்றும் கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் கிருஷ்டியன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பரிமாறிக்கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி 2 நிறுவனங்களும் சித்த மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி, நோயாளிகள் பாதுகாப்பு, மருத்துவ கல்வி புத்தகங்கள் மற்றும் இதழ்கள் தயாரித்தல், குறுகிய கால மற்றும் நீண்ட கால படிப்புகளை உருவாக்குதல், இதுதொடர்பான மூலப்பொருட்கள் பற்றிய குறிப்புகளை மேம்படுத்துதல், மருத்துவ பயிற்சி மற்றும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு சித்த மருத்துவம் தொடர்புடைய பணிகள் மேற்கொள்ளவும், தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ளவும் உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கே.தங்கராஜ், இணை டீன் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோரும் பங்கேற்றனர்.

இது பற்றி காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன டீன் டாக்டர் ஏ. சுந்தரம் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சையில் நல்ல பலன் வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இங்குள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவத்துடன் சித்த மருத்துவமும் இணைந்து சிகிச்சை அளிக்க உதவும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *