செய்திகள்

தாம்பரம் உள்பட 19 அரசு மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்வு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை, ஏப்.30-

மருத்துவத் துறையில் 4,308 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழக சட்டசபையில் நேற்று மருத்துவம்–மக்கள் நல்வாழ்வுத் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துதல் திட்டத்தின்கீழ் ரூ.1018.85 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் உள்பட 19 அரசு மருத்துவமனைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் மாநில பொது சுகாதார மையத்தில் பன்றிக்காய்ச்சல், டெங்கு, எலிக்காய்ச்சல், சிக்குன்குனியா, நிபா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களை கண்டறிய ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின்கீழ் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கருவிகள் நிறுவப்படும்.

நவீன கருவிகள்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு தாலுகா மருத்துவமனையில் உலக வங்கி திட்டத்தின்கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி உள்ளிட்ட நகர்ப்புற மருத்துவமனைகளுக்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின்கீழ் ரூ.5.85 கோடி மதிப்பீட்டில் நவீன கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு வட்ட மருத்துவமனை ரூ.2.20 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும். சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய்த் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உடற்கூறு திசுக்களை சுத்திகரிக்க நவீன காமா நுண்கதிர் அறை ரூ.1.90 கோடி செலவில் கட்டப்படும்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உயர் சிறப்பு சிகிச்சை

சென்னை பெரியார்நகர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் தேவையான கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கி 3 ரத்த வங்கிகள் அமைக்கப்படும். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர்சிறப்புச் சிகிச்சை வழங்க உலக வங்கி திட்டத்தின்கீழ் ரூ.125 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம், கருவிகள் வழங்கப்படும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு ஜப்பான் பன்னாட்டு முகமை திட்டத்தின்கீழ் ரூ.110 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.

பெரியார்நகர் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை, விபத்துக்காய சிகிச்சைப் பிரிவு, தொற்றாநோய் பிரிவு, டயாலிசிஸ், ரத்த வங்கி போன்ற சேவைகள் வழங்க உலக வங்கி திட்டத்தின்கீழ் ரூ.71.81 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் சிறந்த மருத்துவ சேவையை பெறுவதற்காக நவீன உபகரணங்களுடன் புதிய நரம்பியல் பிரிவு கட்டிடம் ரூ.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு இதயநோய்களுக்கான சிகிச்சை முறைகளை வலுப்படுத்த, ‘கேத்லேப்’ கருவிகள் ரூ.16 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும்–48 திட்டத்தை மேலும் வலுப்படுத்த செங்கல்பட்டு உள்பட 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு ரூ.237.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

சோழிங்கநல்லூரில் விபத்து சிகிச்சை மையம்

இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்–48 திட்டத்தின்கீழ் சென்னை சோழிங்கநல்லூரில் 100 படுக்கைகளுடன் நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவமனை புதிதாக ரூ.60.05 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

பொன்னேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களுக்கு நவீன உபகரணங்கள் ரூ.2.76 கோடி செலவில் வழங்கப்படும்.

தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார சீரமைப்பு திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியில் 12 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.12 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் தேசிய நலவாழ்வு குழும நிதியில் கட்டப்படும்.

சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.4.80 கோடி செலவில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவை வசதிகள் விரிவுபடுத்தப்படும்.

தாய்–சேய் நல சேவைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் தேசிய நலவாழ்வு குழும நிதியில் தாய்–சேய் நல ஒப்புயர்வு மையங்களுக்கு கூடுதல் கட்டிடங்கள் ரூ.84.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

சென்னை தண்டையார்பேட்டை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு மையம் மருத்துவ கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய புதிய கட்டிடங்கள் ரூ.12 கோடி மதிப்பீட்டில் மொத்தம் ரூ.24 கோடி செலவில் தேசிய நலவாழ்வு குழும நிதியில் கட்டப்படும்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் புற்றுநோயியல் பிரிவுக்கு அதிநவீன உபகரணங்கள் ரூ.21.09 கோடியில் வழங்கப்படும். சென்னை அரசு கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் கருப்பைவாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் விதமாக எச்.பி.வி.–டி.என்.ஏ பரிசோதனைக்கான நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வகம் ரூ.9.07 கோடி செலவில் நிறுவப்படும்.

புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள்

தமிழ்நாட்டில் முன்னோடித் திட்டமாக சென்னை மாவட்டத்தில் 12–14 வயதுடைய அனைத்து வளரிளம் பெண்களுக்கு ரூ.7.15 கோடி செலவில் எச்.பி.வி. தடுப்பூசி செலுத்தப்படும். செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் ரூ.60.17 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு குருத்தணு பதிவேடு சென்னை அரசு சிறார் நல நிலையம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் இயங்கி வரும் பிரத்தியேக ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அலகு சிகிச்சை மையத்தில் உலக வங்கி திட்டத்தின்கீழ் ரூ.30 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

சென்னை எழும்பூர் அரசு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு மகளிர் சிறார் உள்ளிட்ட மருத்துவமனைகளில் கட்டமைப்பு உபகரணங்களுடன் ரூ.5 கோடி செலவில் கருத்தரிப்பு மையங்கள் நிறுவப்படும்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள தண்டுவட அறுவைசிகிச்சை பிரிவில் மனிதவளம் வலுப்படுத்தப்படும். சென்னை ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 6 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், எலிக்கொல்லி மருந்தை உட்கொள்வதால் ஏற்படும் உடல் பாதிப்புகள், இறப்புகளை குறைக்கும் நோக்கில், அதிநவீன ரத்த சுத்திகரிப்பு உபகரணம் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின்கீழ் மின்னணு சுகாதார இயக்குனரகம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். சென்னை அரசு மனநல மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய மாவட்ட மருந்து கிடங்குகள் ரூ.30 கோடி மதிப்பீட்டில் தேசிய நலவாழ்வு குழும நிதியில் நிறுவப்படும்.

மாநில தலைமையிட நவீன தடுப்பூசி சேமிப்புக்கிடங்கின் கூடுதல் கட்டிடம் செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் ரூ.66.87 லட்சம் மதிப்பீட்டில் தேசிய நலவாழ்வு குழும நிதியில் கட்டப்படும்.

4,308 காலிப் பணியிடம்

ஆயிரத்து 21 உதவி மருத்துவர்கள், 3 ஆயிரத்து 287 மருத்துவம் சார்ந்த இதர பணியிடங்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்து 308 காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள்.

10 அரசு மருத்துவமனைகளின் தர மேம்பாட்டு பணிகளை ஒருங்கிணைக்க மருத்துவக் கல்லூரி முதல்வர் அல்லது மருத்துவக் கண்காணிப்பாளரின்கீழ் மருத்துவமனை மேலாண்மை அலுவலர் உலக வங்கி திட்டத்தின்கீழ் நியமிக்கப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.