சிறுகதை

தாமத உணவு..! …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

” மூணு மணி ஆகப் போகுது இன்னும் மதியம் சாப்பிடலையா? என்று எதிர் திசையில் இருந்து திட்டினாள், பானு

“இல்ல இன்னும் சாப்பிடல ” என்று உதட்டில் ஒட்டியும் ஒட்டாமல் பதில் சொன்னான் கிருஷ்ணன்

” ஏன் சாப்பிடல?”

” பிடிக்கல “

“ஏன் பிடிக்கல? “

” பிடிக்கலன்னா பிடிக்கல “

” சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும். நீ சாப்பிடாம இருக்கிறதனால, இங்க எதுவும் நடக்க போறதில்ல ” கடிந்து கொண்டாள், பானு

” என்ன நான் பேசிட்டே இருக்கேன் பதில் சொல்லாம இருக்க “

கிருஷ்ணனிடம் கொஞ்சம் முறைப்பாகக் கேட்டாள், பானு

” என்ன சொல்லணும் ?

“இப்ப ஏன் நீ சாப்பிடாம இருக்க? போய் சாப்பிடு”

“முடியாது”

” இப்ப நீ சாப்பிடலன்னா எனக்கு கெட்ட கோவம் வந்துரும் ” என்று பானு மறுபடியும் பேசியதற்கு பதில் எதுவும் சொல்லாமல் இருந்தான், கிருஷ்ணன்

“யாரு மேலயோ கோவத்த வச்சிட்டு சாப்பிடாம இருக்கிற. சாப்பிடாம இருக்கிறதால உனக்குத்தான் நஷ்டம். மத்தவங்களுக்கு எதுவும் நஷ்டம் இல்ல. நீ சாப்பிடாம எங்கேயாவது மயங்கி கீழ விழுந்துட்டா உன் பக்கத்துல நானா வந்து நிக்கப் போறேன். ஏன் வீணா சாப்பிடாம இருந்து உடம்ப கெடுத்துக்குற. போய் சாப்பிடு” என்று தூரத்தில் இருந்து கொண்டே கிருஷ்ணனைச் சாப்பிட துரத்தினாள், பானு.

இது எதற்கும் பதில் சொல்லாமல் இருந்தான், கிருஷ்ணன்

“என்ன சொல்றது கேக்குதா?” என்று மறுபடியும் பானு கேட்டாள். அவள் குரலில் ஈரம் அப்பிக் கிடந்தது.

இந்த பந்தத்தை எந்தச் சொந்தத்தில் சேர்ப்பது? குறுகிய காலத்தில் பழகியவள், உயிர் வரை இறங்கி விட்டாளே? இதை ஒதுக்கி வைப்பதற்கு வழி இல்லை. வெறுத்து முடிப்பதற்கும் முடியவில்லை. கிருஷ்ணனுக்குள் வேதனை வெப்பம் அவனை வெகுவாகத் தாக்கியது. ” சரி சாப்பிடுறேன்” என்று சன்னமான குரலில் பதில் சொன்னான், கிருஷ்ணன்.

” முதல்ல போய் சாப்பிடு. அதுக்கு அப்புறமா வேலைய பாரு. இங்க யாரும் யாருக்காகவும் இல்ல. உன்னுடைய உடம்ப நீ பாத்துக்கிட்டா மட்டும் தான் உண்டு” என்று வேதாந்தம் சொன்னாள், பானு.

ஒரு வழியாக அவள் சாப்பிடச் சொல்லியே அவனைச் சாப்பிட அனுப்பி வைத்தாள்.

அது மதிய உணவு முடிந்த நேரம். உணவு விடுதிகள் எல்லாம் ஓய்ந்து போய்க் கிடந்தன.

” சாப்பிட்டேன்னு எனக்கு பதில் சொன்னா மட்டும்தான் நம்புவேன். சாப்பிடுறத எனக்கு வாட்ஸ் அப் அனுப்பு ” என்று கிடுக்குப் பிடி போட்டாள், பானு.

பொய் சொல்ல முடியாது. பொய் சொல்லி கிருஷ்ணனுக்கு பழக்கமில்லை. எப்படியும் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும் போல என்று முடிவு செய்தான், கிருஷ்ணன்.

எங்கே சாப்பிடுவது? சில கடைகளைத் தேடினான். அத்தனை கடைகளும் அந்த நேரம் ஓய்ந்திருந்தன. ஒரு துரித உணவகத்திற்குள் நுழைந்தான். அங்கே எஞ்சி இருந்தது பிரியாணி மட்டுமே. கடிகாரத்தைப் பார்த்தான் மணி மூன்றைக் கடந்திருந்தது.

” பிரியாணி மட்டும் தான் இருக்கு. சாப்பிடுறீங்களா? ” என்று கேட்டாள் கடையில் இருந்த ஒரு வயதான பெண்மணி.

” சூடா இருக்கா? ” என்று கேட்டான் கிருஷ்ணன்.

” லேசா சூடா இருக்கு. மணி மூணு ஆச்சுல்ல ” என்று அந்தப் பெண்மணி சொல்ல

“சரி இருக்கிறத கொடுங்க ” என்று சாப்பிட அமர்ந்தான்

அவள் கொடுத்த அளவே போதுமானதாக இருந்தது. அந்த பிரியாணியில் முட்டையும் சிக்கன் கறியும் மிகுந்து கிடந்தன. வெளியே சென்றிருந்த ஓட்டல் முதலாளி அப்போது தான் உள்ளே நுழைந்தார்

” என்ன சார் தாமதமா வந்தீங்களா? சாப்பிடுங்க” என்று சொன்னவர்

“இன்னும் கொஞ்சம் பிரியாணி வேணுமா? ” என்று கேட்க

“வேண்டாம் சார். இதே போதுமானது “

” இல்ல இன்னும் பிரியாணி தர்றேன் சாப்பிடுங்க என்று அதிகமான இறைச்சியும் அதிகமான பிரியாணியையும் அள்ளிக் கொண்டு கிருஷ்ணனின் இலையில் வைத்தார்.

” ஐயோ சார், இவ்வளவு எதுக்கு? என்னால சாப்பிட முடியாது” என்று படபடப்பாகச் சொன்னான், கிருஷ்ணன்.

சாப்பிடாத வரை பட்டினியாகக் கிடந்த கிருஷ்ணனுக்கு இப்போது மிகை உணவாக எல்லாம் கிடைத்திருந்தது. சாதாரணமான நேரத்தில் சாப்பிட்டிருந்தால் கூட இவ்வளவு உணவு கிடைத்திருக்காது. அவ்வளவு சாப்பிட முடியாது என்றாலும் அவன் எதிரே அவன் சாப்பிடும் அளவிற்கு மேலே மிகுந்து கிடந்தது கறியும், பிரியாணியும்.

கிருஷ்ணனைச் சாப்பிடத் தூண்டிய பானுவால் தான் இந்த மிகை உணவு கிடைத்தது என்று மகிழ்ச்சி கொண்டான், கிருஷ்ணன்.

தாமதமாகக் கிடைத்த அந்த உணவில் சுவையும் உயர்தரமும் இருந்தன. இது பானுவால் தான் வந்தது என்று நினைத்து அந்த உணவிற்கும், உணவைச் சாப்பிடத் துரத்திய பானுவிற்கும் மிகை உணவு அளித்த அந்த ஓட்டல் முதலாளிக்கும் மனதிற்குள்ளேயே நன்றி கூறினான், கிருஷ்ணன். நேரம் மாறியிருந்தாலும் நல்ல சுவையாக இருந்தது, அந்தத் தாமத உணவு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *