அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

தானிய வைப்பறை..! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

அறைகள் சொல்லும் கதைகள்- 22


வெப்பத்தால் வெடித்துக் கிடந்த பூமி, சாரல் மழை பொழிந்ததும் ஈரம் அப்ப ஆரம்பித்தது. உஷ்ணத்தை வெளியேற்றிய மண்ணில் விதைகளை விதைக்கலாம் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு வந்தது. ஒவ்வொரு மாநில நீரையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து வறண்டு போன வாய்க்கால் வரப்புகள் எல்லாம் வானம் பொழிந்த மழையை வாங்கிக் கொண்டு செழித்து நின்றன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கானல் நீர் மட்டுமே மண்டிக் கிடந்த வெளிகள் எல்லாம் ஈரக்காற்று வீச ஆரம்பித்தது. அதிகாலையில் கூட வெந்து தணிந்த பொழுது, இப்போது உச்சி வேளையில் கூட மழை பொழிய ஆரம்பித்ததால் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏர்க்கலப்பை, டிராக்டர் கொண்டு நிலத்தை உழ ஆரம்பித்தார்கள் விவசாயிகள்.

அன்னம்மாள், அதிகாலையில் எழுந்தாள். அறுந்து கிடந்த அவள் நம்பிக்கையில் விழுந்த மழைத்துளிகள் சந்தோஷத்தைத் தந்தது. மாட்டின் குளம்படிகளில் கூட ஊற்று சுரக்க ஆரம்பித்த செம்மண் பரப்பிக் கிடந்த ஓடையில் நடக்க ஆரம்பித்தாள்.செருப்பணியாத அவள் பாதங்களில் செம்மண் பட்டதும் செக்கச் செவேர் என்று ஆனது அவள் இரண்டு பாதங்களும்.

இரு கரைகளில் வளர்ந்திருந்த செடிகளில் தூறல் துளிகள் பட்டுத்தெறித்து காற்று ஜில்லென்று வீசிக் கொண்டிருந்தது. எப்படியும் இந்த வெள்ளாமை நமக்கு கை கொடுத்து விடும் என்று நினைத்தாள் அன்னம்மாள்.

தூரம் பார்த்தாள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மழை பெய்து தண்ணீரால் நிறைந்திருந்தது . வயல்வெளி.ஈரம் சுரந்து நிற்கும் பூமியைப் பார்த்ததும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் ததும்பியது .எப்படியும் இந்த முறை விதைத்து விட வேண்டுமென்று நினைத்தாள், அன்னம்மாள். இருபுறமும் வளர்ந்து நின்ற வரப்பில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவள் அருகே வந்து அமர்ந்தார் , அன்னம்மாளின் கணவன் தெய்வநாயகம். அவர் அமர்ந்ததைக் கூட அறியாத அன்னம்மாள், தூரம் பார்த்தே அழுது கொண்டிருந்தாள்.

ஏ கழுத ஆளு வந்தது கூட தெரியாம அப்பிடியென்ன யோசன என்று அவள் தோளைத் தொட்டார் தெய்வநாயகம் .

விசுக்கென்று திரும்பிய அன்னம்மாவைப் பார்த்து

“ஏன் இப்பிடி அழுதுக்கிட்டு இருக்க “என்று தெய்வநாயகம் கேட்டதும்

” ரொம்ப நாளைக்கு அப்புறம் மழை பேஞ்சு இருக்கு. விதைக்கலாமா?” என்று வாய் திறந்து கேட்டாள், அன்னம்மாள். அதற்கு பதில் சொல்லாமல் தலையை மட்டுமே ஆட்டினார் தெய்வநாயகம்.

“நெலம் மழை பேஞ்சு விரிஞ்சு கெடக்கு. ஆனா நம்ம நெலம சரிஞ்சு கெடக்கே . வறண்டு கெடந்த நேரம் வாய்க்கும் வயித்துக்கும் இல்லாம வாழ்ந்திட்டோம். இப்ப மழை நெறய பெய்யுது. வெதைக்க வழி இல்லையே அன்னம்மா ” என்று நெக்குருகி அழுதார் தெய்வநாயகம்.

“நான் அப்பவே சொன்னேன். நீ தான் கேக்கலய்யா .இப்ப கடவுள் நமக்கு வழி காட்டியிருக்கான். ஆனா, நெலம் , நெலமாவே இருக்கு. வெள்ளாமக் காடா மாறலியே” என்று அழுத அன்னம்மாவைத் தொட்டுத் தேற்றினார், தெய்வநாயகம்.

“வா போய் தானிய அறைய பாக்கலாம் .

ஐ …என்று இருவரும் வயல்வெளியை விட்டுக் வீட்டிற்கு கிளப்பினார்கள் . எப்போதும் தானியங்களாலும் விதைகளாலும் நிரம்பி இருக்கும் தானிய அறை இப்போது வெறிச்சோடி கிடந்தது.

இருட்டு அப்பிக் கிடந்த அந்தத் தானிய அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்தார்கள். வவ்வால்களும் பூச்சிகளும் அங்கு பறந்து கொண்டிருந்தன. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்

“அன்னம்மா இப்ப என்ன பண்ணலாம்? என்று தெய்வநாயகம் கேட்க

“நீதான்யா சொல்லணும் என்று அன்னம்மாள் சொல்ல

” சரி வா கேட்டு தான் பாக்கலாம் என்று இருவரும் தானிய வைப்பறையை விட்டு வெளியே நடந்தார்கள். சிறிது தூர நடைக்குப் பின் ஒரு வட்டிக்கடையில் போய் நின்றார்கள்.

” ஐயா மழை வருது. நீங்க மனசு வச்சா விதைக்கலாம்னு இருக்கோம்” என்று இருவரும் ஒரு சேரச் சொல்ல அன்னம்மாவையும் தெய்வநாயகத்தையும் ஏற இறங்கப் பார்த்த அந்த வட்டிக் கடைக்காரன்

“அது எல்லாம் சரிதான் .வாங்குன கடன கொடுத்துட்டு உங்க வெத நெல்ல எடுத்துட்டு போங்க .இல்ல அது இங்கேயே கிடக்கட்டும் “என்று ரொம்பவும் கறாராகப் பேசினான்.

“ஐயா நாங்க கடன் வாங்குனது உண்மைதான். அதுக்காக வெத நெல்ல ஈடா கொடுத்துட்டு தான் உங்ககிட்ட கடன் வாங்கி இருக்கோம். இன்னைக்கு மழை விழுந்து நிலமெல்லாம் செழிப்பா நிக்குது. நீங்க வெத நெல்ல கொடுத்தீங்கன்னா . விதைச்சு அறுவடை செஞ்சு உங்க பணத்தை கொடுத்துருறாேம்.கொஞ்சம் ஒத்தாசை செய்யுங்க “என்று அன்னம்மாள் கேட்க

அப்படியா , நெல்லு என்னைக்கு விளைச்சு என்னைக்கு என்னுடைய கடனை நீங்க அடைக்கிறது .முடியாது பணத்தைக் குடுத்துட்டு எடுத்துட்டு போங்க” என்று விறைப்பாகப் பேசினான். அந்தக் கந்து வட்டிச் கடைக்காரன் இதற்கு மேல் அவனிடம் கெஞ்சுவது நமக்கு முறையல்ல என்பதை உணர்ந்து கொண்ட இருவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள். இந்த வெள்ளாமைக்கு நாம் விதைக்க போவதில்லை? என்ற அவநம்பிக்கையில் அப்போது பெய்த மழையில் நனைந்து கொண்டே வந்தார்கள்.

” என்ன தெய்வநாயகம் ஏன் மழையில இப்படி நனைச்சுட்டு போறீங்க? ” என்று ஒரு பெரியவர் கேட்க பதில் சொல்ல முடியாமல் விழித்தார் தெய்வநாயகம்

” எல்லாம் எனக்கு தெரியும்யா. உன் புள்ள படிக்கிறதுக்கு ஈடா வெத நெல்ல பணயம் வச்சு தான் கடன் வாங்குன. அது எனக்கு தெரியும். கடன் காரன் நெல்ல திருப்பித் தர மாட்டேங்குறான். அதுவும் எனக்குத் தெரியும். என் வீட்டுல விதை நெல்லு இருக்கு . எடுத்துட்டு போய் காடு கரையில விதைச்சு வெள்ளாமை எடுங்க ” என்று அந்தப் பெரியவர் சொல்ல, அவர் சொல்வது உண்மைதான் என்பதை உணர்ந்து கொண்ட அன்னம்மாவும் தெய்வநாயகமும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு விதை நெல்லை வாங்கிக்கொண்டு ரொம்பவே நம்பிக்கையோடு தானிய அறைக்குள் நுழைந்தார்கள்.

இருள் கவிழ்ந்த அந்தத் தானிய அறையில் ஆங்காங்கே சில நெல்மணிகள் முளைத்திருந்தன.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *