அந்த மருத்துவமனையில் எப்போதும் இல்லாமல் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் என்று இல்லாமல் நோயாளிகளே இல்லாமல் நிறைய பேர் கூடி நின்றார்கள்.
அது அந்த மருத்துவமனைக்கு வருமான இழப்பு என்றாலும் வந்திருந்தவர்களின் மனசை அங்கு இருந்தவர்கள் வெகுவாக வாழ்த்தினார்கள்.
“இப்படித்தான் மனிதர்கள் இருக்க வேண்டும் .இப்படித்தான் மனிதர்கள் வாழ வேண்டும். இவர்கள்தான் மனித வாழ்க்கைக்கு உண்மையான எடுத்துக்காட்டு. இந்த மாதிரி மனிதர்களால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவர்கள் செய்யும் செயலை மற்றவர்களும் செய்தால் இந்த மனித குலம் வாழும் என்று அங்கிருந்தவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள் .
மருத்துவர்கள் இன்முகத்தோடு வந்தவர்களை வரவேற்று
” நீங்க என்ன செய்றீங்கம்மா ?
என்று கேட்க
” நான் முழு உடல் தானம் பண்றேன்”
” நீங்க ?”
“நானும் முழு உடல் தானம் பண்றேன் “
என்று ஒவ்வொருவராகச் சொல்ல மருத்துவர்கள் வாஞ்சையோடு அத்தனை பேரின் பெயர்களையும் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
” இவ்வளவு பேரும் ஒரே நேரத்தில் எப்படி உடல் தானம் செய்ய வந்தாங்க. இவர்களை யாரும் உடல் தானம் செய்யச் சொல்லி வற்புறுத்தினாங்களா ? இல்ல இவர்களாக முன் வந்தாங்களா?”
என்று அந்த மருத்துவமனைக்கு புதிதாக வந்த ஒருவர் கேட்க
“எந்த ஒரு விஷயமும் நாம செஞ்சா மட்டும்தான் அதனுடைய பலன் தெரியும். இல்ல .அதிலிருந்து ஒரு விழிப்புணர்வு வந்தா மட்டும் தான் நமக்கு ஒரு தெளிவு பிறக்கும். இங்க வந்திருக்கிறவங்களுக்கு எல்லாமே தெரியும் .அந்தா நிக்கிறாரு பாருங்க அவர் இன்னைக்கு உயிரோடு இருக்கிறாருன்னா யாரோ செஞ்ச தியாகம். அதை மனசுல வச்சுத்தான் இருக்கிற சொந்த பந்தங்கள எல்லாம் இன்னைக்கு உடல் தானம் பண்ண வந்திருக்கிறாங்க. வாங்குறத மட்டுமே வாடிக்கையா வச்சிருக்கிற மனுஷங்களுக்கு மத்தியில வாங்கறது மட்டும் இல்லாம கொடுக்கிறதும் மனித வழக்கம்தான். அதுதான் நல்லதுன்னு அவங்க மொத்தமா கூடி வந்திருக்காங்க”
என்றவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது
” நம்மைத்தான் ஏதோ சொல்கிறார்கள் என்று அருகில் வந்தார் அந்த நபர்.
” ஐயா உங்கள பத்தி என்னமோ சொல்றாங்களே? அது உண்மையா நீங்களும் உடல் தானம் பண்ண வந்திருக்கீங்களா? என்று அவர் கேட்க
” நான் உடல் தானத்தில உறுப்பு தானம் வாங்குனதுனால தான் இப்ப உயிரோட இருக்கேன். இங்க இருக்கிற உறவினர்கள் எல்லாம் உடல் தான் பண்ண முன் வந்து இருக்காங்க. எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்னாடி என் உடம்புல இருக்க சில உறுப்புகள் பழுது அடஞ்சிடுச்சு. இன்னும் ஒரு மாசம் ரெண்டு மாசம் தான் உயிரோடு இருப்பேன்னு டாக்டர்கள் எல்லாம் கை விரிச்சுட்டாங்க. அப்படி இருக்கும்போது ஒரு நாள் உடல் தானம் பண்ணுனாங்க . இப்படி சில பேரோட உறுப்புகளால நான் இன்னைக்கு உயிரோடு இருக்கேன். அன்னைக்கு அவங்க உடல் தானம் பண்ணி அந்த உறுப்புகள் எனக்கு பொறுத்தலன்னா நான் இன்னைக்கு உயிரோடயே இந்த பூமியில் இருந்திருக்க மாட்டேன். நாம வாங்கி மட்டுமே பழகி வச்சிருக்கிறோம். யாரும் கொடுக்கிறதில்ல. அதனாலதான் என்னுடைய உறவினர்கள் தெரிஞ்சவங்க எல்லாருமே என் மேல அக்கறை வச்சவங்க எல்லாருமே உடல் தானம் பண்ண வந்திருக்காங்க”
என்று அவர் சொன்ன போது
” தம்பி நீங்க சொன்னது எனக்கு என்னமோ மாதிரி ஆகிப் போச்சு. நாளைக்கு எனக்கு வரலாம் . நாளைக்கு என் பிள்ளைக்களுக்கும் இது வரலாம். என் குடும்பத்தில இருக்கிற யாருக்கு வேணும்னாலும் என்ன வேணாலும் நடக்கலாம் .நமக்கு தேவைப்படும் போது கண்டிப்பா அது கிடைக்கும். அதனால என் உடலை நான் தானம் பண்றேன். அதுக்கு எங்க தம்பி போகணும் “
என்று அங்கு வந்த ஒருவர் கேட்க
” இந்த டாக்டர் கிட்ட சொல்லுங்க. எல்லாத்தையும் அவரே பாத்துக்கிருவார்” என்று அவர் சொன்னார்.
என் பேரு நித்திலன் என்னுடைய உடம்பையும் தானம் பண்றேன். எழுதிக்கோங்க ” என்றார்.
“ஒரு மனிதனுக்கு செய்த உடல் தான உதவி இன்று இத்தனை பேரின் மனதை சீர்படுத்தி இருக்கிறது சபாஷ் “
என்ற மருத்துவர் நித்திலன் என்பவரை மட்டும் இல்லாமல் தன்னுடைய பெயரையும் உடல் தானப் பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டார் அந்த மருத்துவர்.