யாருக்காகவும் வாழாத ராகவேந்திரன் இப்போது நான்கு பேர்களிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனின் செய்கை, அவனின் நடவடிக்கை, அவனின் சுயநலம், அவனுக்காக மட்டுமே இருந்தது. அப்படி வாழ்ந்து கொண்டிருந்தவன் இன்று நான்கு பேருடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.
‘‘முன்பெல்லாம் அவன் சம்பாதிப்பது அவன் சேர்த்து வைப்பது அவனுக்காகவும் அவன் குடும்பத்திற்காக மட்டும்தான். அவனைப் பார்ப்பவர்களுக்கு எரிச்சல் கூட ஏற்படும். இப்படி ஒரு சுயநலக் கிருமியை சந்தித்ததே இல்லை’’ என்று அவனைச் சுற்றி இருப்பவர்கள் புலம்புவார்கள்.
“அவன் அப்படி இருப்பது சரிதான். சுயநலம் இருந்தால் தான் இங்கு வாழமுடியும். சுயநலம்தான் ஒரு மனிதனை உயர்த்தும் என்றெல்லாம் ராகவேந்திரனுக்கு ஆதரவாகவே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. அவன் நான்கு பேருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
” இன்னைக்கு அப்பாவ போய் பாத்துட்டு வரலாமா?’’ என்று ராகவேந்திரன் மகன் மதி கேட்க,
‘‘சரி போகலாம் ’’என்று மதியும் ராகவேந்திரன் மனைவி மாலதியும் குடும்பத்தினர்களுடன் கிளம்பினார்கள்.
” இப்ப எங்க போறம்மா ” என்று மதன் கேட்க
சென்னையில தி.நகர்ல ஒரு வீட்டுக்கு என்றாள் மாலதி
அந்த வீட்டில் மதனும் மாலதியையும் குடும்பத்தினரையும் பார்த்த வீட்டுக்காரர்கள் .அவ்வளவு வரவேற்றார்கள்.
” வாங்க நீங்க வருவீங்கன்னு தான் நாங்க காத்துக்கிட்டு இருந்தோம்”
என்று உள்ள உணர்வோடு அவர்களை வரவேற்று உபசரித்து உணவு கொடுத்து கண்ணில் நீர் ததும்பப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
தி.நகர் வீட்டில் இருந்த சுப்பிரமணியம் மதனையும் மாலதியையும் கையெடுத்து கும்பிட்டார் .
“நீங்க நல்லா இருக்கணும் ” என்று அழுதார்.
சுப்பிரமணியத்தை நன்றாக பார்த்த மாலதி
” சரி , நாங்க வரோம் “
” நீங்க எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம் .உங்களுக்காக எங்க வீட்டு கதவு திறந்தே இருக்கும் “
என்று சொன்னார் சுப்பிரமணியம் . ஒரு வழியாக அவர்களிடமிருந்து விடைபெற்றார்கள்.
” அப்புறம் எங்க போகணும்மா” என்று கேட்டான் மதன்
“மதுரைக்கு “
நெடுந்தூரப் பயணம் . மதுரைக்கு சென்றார்கள். அங்கு சென்றவர்களை இன்முகத்தோடு வரவேற்றார்கள்.
“தியாக சுந்தரம் .என் மகன் இன்னைக்கு உயிரோட இருக்கான்னா உங்க வீட்டுக்காரர் தான் காரணம் ” என்று ராகவேந்திரன் குடும்பத்தை வரவேற்று உபசரித்து கவனித்துக் கொண்டிருந்தார்கள், அந்தக் குடும்பத்தார்கள். தியாகசுந்தரம் மாலதியின் காலில் விழுந்தான்.
” இப்படி எல்லாம் செய்யக்கூடாது. எந்திரிங்க. இது தவறு. நாமெல்லாம் கடவுள் இல்லை. மனுசங்க தானே?’’ என்று மாலதி சொல்ல
” எங்களுடைய பார்வையில நீங்க கடவுள் தான் ” என்று கண் கலங்கினான் தியாகசுந்தரம்.
அங்கிருந்து விடை பெற்று அதே ஊரில் மதுரையில் உள்ள இன்னொரு வீட்டுக்கு சென்றார்கள் .
அங்கேயும் அதே வரவேற்பு . அதே உபசரிப்பு, அதே உற்சாகம். அத்தனையும் கடந்து காரில் போது அழுது புலம்பினாள் மாலதி.
” இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மதன். உங்க அப்பா யாருக்கும் உதவி செய்ய மாட்டார். கஞ்சத்தனமான மனுஷன். இப்படித் தான் அவரப்பத்தி பேசிட்டு இருப்பாங்க. ஆனா இன்னைக்கு அவர் இல்ல. அவருடைய உடல் உறுப்புகளை தானமாக வாங்குன நாலு பேர் உயிரோட வாழ்ந்துகிட்டு இருக்காங்க. பொன், பொருள் கொடுத்து உதவல. ஆனா இன்னைக்கு தன்னோட உறுப்புகளை கொடுத்து அத்தனை பேரையும் வாழ வெச்சுட்டு இருக்காரு. உங்க அப்பா எனக்கு உண்மையிலேயே ரொம்ப பெருமையா இருக்கு மதன்” என்று கண்கள் குளமாகப் பேசினாள் மாலதி.
“அப்பாவ பத்தின தப்பான பேச்சு எனக்கும் தெரிஞ்சதும்மா. ஆனா இன்னைக்கு உசந்த இடத்தில இருக்காரு .தான் சாகறதுக்கு முன்னாடியே அத்தனை உறுப்புகளையும் உடல் தானம் பண்ணி வச்சிருந்திருக்காரு .அவர மாதிரி தான் நானும் இருக்கணும்னு ஆசைப்படுகிறேன்”
என்றான் மதன்.
இன்னொரு வீட்டைத் தேடி ஓடிக் கொண்டிருந்தது கார்.