சிறுகதை

தானம் – ஆவடி ரமேஷ்குமார்

செய்தி கிடைத்ததும் முதியோர் இல்லத்திலிருந்த சத்தியமூர்த்தியும் பார்வதியம்மாளும் ஹாஸ்பிடலுக்கு விரைந்து வந்தார்கள்.

அறை எண் 303.

“அவர் பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க மாமா..!” என்று சொல்லி கதறி அழுதாள் மருமகள் சாந்தா.

அவளருகில் பேரனும் பேத்தியும் நின்றிருந்தனர்.

கட்டிலில் படுத்திருந்த மகனை

இருவரும் அழுதபடி பார்த்தார்கள்.

அதிர்ச்சியில் உறைந்து போய் தவித்தனர் இருவரும்.

மகன் சண்முகம் பற்றி உயர்வான எண்ணம் இல்லை சத்தியமூர்த்திக்கு.மிகவும் சுயநலக்காரன்; எச்சில் கையால் காகத்தை ஓட்டாதவன்; ஐம்பது காசு தர்மம் பண்ண ஆயிரம் யோசனை செய்பவன்; மனைவி,குழந்தைகளுக்காக மனதார செலவு பண்ண மனமில்லாதவன்; பெற்றவர்களுக்கு கணக்குப் பார்த்து, அவர்களை தொல்லையாக கருதி

முதியோர் இல்லத்திற்கு அனுப்பியவன்; இப்படி பல.

இரண்டு மணி நேரத்திற்கு முன் தன்னிடம் பெரிய டாக்டர் சொன்ன சில விஷயங்களைத் தன் மாமனார், அத்தையிடம் அழுதபடியே பகிர்ந்து கொண்டாள் சாந்தா.

அப்போது பெரிய டாக்டர் அறைக்குள் வந்தார். கூடவே இரண்டு நர்ஸ்கள்.

சத்தியமூர்த்தியைப் பார்த்துப் பரிதாபப்பட்டார்.

“பெரியவரே…. உங்க மகன் சண்முகம் பைக்-லாரி ஆக்ஸிடென்ட்ல ரொம்ப மோசமான நிலையில் தான் இந்த ஹாஸ்பிடலுக்கு வந்தாரு. நாங்களும் ரொம்ப சிரம்மப்பட்டு காப்பாத்த முயற்சி செய்தோம்; ஆனா முடியல. அதற்குள் அவரு மூளைச்சாவு அடைச்சிருக்கார். உங்க மருமகள்கிட்ட எல்லாம் சொல்லியிருக்கோம். அவங்க உங்க கிட்ட சொன்னாங்களா? இப்ப நீங்க எங்களுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?”

டாக்டர் கேட்டுவிட்டு மௌனமாக அனைவரையும் மாறி மாறி பார்த்தார்.

சத்தியமூர்த்தி… மனைவி, மருமகள்,பேரன், பேத்தி என்று அனைவரையும் ஒரு முறை பார்த்தார். மனதை கல்லாக்கிக் கொண்டு டாக்டரிடம் சொன்னார்.

“என் மகனோட உடல் உறுப்புகளைத் தேவைப்படும் நோயாளிகளுக்கு தானமா தர நாங்க மூன்று பேரும் மனப்பூர்வமா சம்மதிக்கிறோம் டாக்டர்”

சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி அழுதார். அவரை ஆறுதலாக தட்டிக் கொடுத்து அமைதிப்படுத்தினார் டாக்டர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *