சிறுகதை

தாத்தாவின் அடுத்த பயணம் – மு.வெ.சம்பத்

வருணுக்கு சிறு வயது முதலே எல்லா வேலைகளும் செய்து தருபவர் அவர் தாத்தா தான்.

வருணுக்கு அந்தந்த வயதில் அறிந்து கொள்ள வேண்டியவற்றை அவனுக்கு அவன் தாத்தா தவறாமல் கற்றுக் கொடுத்தார். சில விளக்கங்களுக்கு வருணை நேரில் அழைத்துச் சென்று விளக்கி அவன் மனதில் பசு மரத்தாணி போல் பதிய வைத்தார். தாத்தாவும் பாட்டியும் அவனுக்கு இரு கண்களாகத் திகழ்ந்தனர்.

வருண் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது அவனுக்கு ஊக்கம் அளித்துப் பள்ளி நேரம் போக நல்லதோர் ஆசானிடம் சேர்த்து பள்ளித் தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற வைத்தார் தாத்தா.

பின் மேற்கொண்டு என்ன படிப்பது என வீட்டில் விவாதம் வந்த போது பொறியியல் கல்லூரியில் சேர்ப்பதென முடிவானது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க வசதியாக இருக்குமெனக் கூற தாத்தா இந்த உரையாடலிலிருந்து விலகி நின்றது வருணுக்கு தர்ம சங்கடமாகப் போனது.

தாத்தா சொல்லும் பாடப் பிரிவைத் தான் படிப்பேன் என்றதும் சிறிது அமைதிக்குப் பிறகு தாத்தா ஆர்க்கிடெக்ச்சர் பிரிவைத் தேர்ந்தெடு என்றதும் வருண் சரியெனக் கூறினான். வெளியூரில் நல்ல முதல் தரமான கல்லூரியில் படிப்பதற்கு அனுமதி கிடைத்தது. என்ன செய்வது என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கையில் தாத்தா நானும் பாட்டியும் உன்னுடன் அங்கு ஒரு வீடு எடுத்து உனக்கு உறுதுணையாய் இருப்போம் என்றதும் அங்கு சில சலசலப்பிற்கு இடையே தாத்தா முடிவு வென்றது.

கல்லூரி சென்ற சில நாட்களிலேயே வருணுக்கு கல்லூரி வாழ்க்கை இனிக்கத் தொடங்கியது. தாத்தா அவனிடம் படிப்பில் முழு கவனம் செலுத்து, ஏதாவது கடினமாக இருந்தால் தயங்காமல் கூறு என்றார். விடுமுறை நாட்களில் அவனை ஊருக்கு அழைத்துச் செல்ல தாத்தா தவறியதில்லை.

வருடங்கள் உருள, வருணுக்கு படிப்பும் கூடியது. விடுமுறை நாட்களில் வருணை திறமையான கட்டிடக் கலை செறிந்த ஆலயங்களுக்கு தாத்தா அழைத்துச் சென்றார். ராமேஸ்வரம் ஆலயம் அழைத்துச் சென்று பிரசித்திப் பெற்ற பிரகாரத்தைக் காட்டினார். அதில் புதைந்துள்ள கட்டிடக் கலையைப் பற்றிக் கூறினார். இது ஒரு நேர் கோட்டுக் கட்டிடக் கலையென்றார். தூண்களின் அமைப்பு, அதைத் தாங்கும் மேல் தளங்கம் பற்றியும் கூறினார். இரு புறமும் நேர் கோட்டில் அமைந்ததால் தூரத்தில் இருந்து பார்த்தால் மையப் புள்ளி தோற்றம் ஏற்படும் என்றார்.

அடுத்து திரு உத்திரகோசமங்கை ஆலயம் அழைத்துச் சென்று அதன் கட்டிட நேர்த்தி பற்றி விளக்கினார். அங்கு சென்றதும் அவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோபுரங்கள் உள்ள ஆலயங்களில் கோபுர உயர்வளவு சீராகத்தான் அமைத்திருப்பார்கள். அப்பொழுது தான் காற்று சீராகப் பரவும் என்றார். கோபுரத்தின் உயரத்தைப் பொறுத்தே தான் அதன் நீளம், அகலம் நிர்மாணிக்கப்படும் என்றார்.

கிராணைட் கற்களால் அமைந்த சிலைகள், தூண்கள் எவ்வாறு கண்டறிவது எனக் கூறினார்.

யாளி போன்ற அமைப்பு உடைய கிராணைட் சிலையின் வாயில் உள்ள உருண்டை கல் எவ்வாறு செய்யப்பட்டதெனக் கூறினார். அடுத்து ஆவுடையார் கோவிலுக்குக் கூட்டிச் சென்றவர் இரண்டு நாட்கள் தங்கி அங்குள்ள கற்களின் வேலைப்பாடு பற்றி விளக்கினார். சங்கிலி போன்ற அமைப்பில் இருந்த கற்களால் ஆன வளையம் பற்றி விரிவாகவே கூறினார்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வாசல் கோபுரம் முதல் ஆயிரம் கால மண்டபம், தூண்கள் வரை காட்டி கட்டிடக்கலை பற்றிக் கூறி கிரங்க வைத்தார். திருவரங்கம், சிதம்பரம், தஞ்சை பெரிய கோயில் அழைத்துச் சென்று நிதானமாகக் கட்டிடக் கலை பற்றி விளக்கியது வருணை மெய் சிலிர்க்க வைத்ததென்றே கூறலாம்.

அந்தக் காலத்தில் சில நுணுக்கமான தூண்களின் வடிவமைப்பிற்கு கற்களை மணலாகப் பொடியாக்கி அதிக வெப்ப நிலைக்குக் கொண்டு சென்று பின் அதைக் குளிர வைத்து உபயோகப்படுத்தியதாக தான் கூறக் கேட்டதைக் கூறினார். பின்னல் வேலைபாடு, அடுக்கு வேலைப்பாடு, பிரமிடு சார்ந்த வேலைப்பாடு, இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் வகையிலான வேலைப்பாடு என அடுக்கிக் கொண்டே போனதைக் கண்டு வருண் பிரமித்துப் போனான்.

வருண் தேர்வு முடிவுகள் அவன் கல்லூரியில் முதல் மாணவனாக வந்ததை அறிவித்தது. வருண் தாத்தாவிடம் இந்தப் புகழெல்லாம் உங்களையேச் சேருமெனக் கூறினான். வருண் நான் அரசாங்க வேலையில் தான் சேரப் போகிறேன் என்றான். நான் அடுத்த வாரம் ஹைதராபாத் செல்கிறேன். அங்கு மத்திய அரசாங்க வேலைக்கான நேர் காணல் என்றான். நண்பர்களுடன் செல்வதால் அங்கு பக்கத்திலுள்ள இடங்களைச் சுற்றிப் பார்த்து விட்டு வருவதற்கு ஒரு வார காலமாகும் என்றான்.

வருண் பயணத்தை முடித்து வீடு திரும்பினான். வீட்டின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரங்கள், வீட்டின் முன்புறம் அலுவலக அமைப்பு கண்டு பிரமிப்படைந்தான். யாருக்கு யார் செய்துள்ளார் என அப்பாவிடம் வினவ, அவர் தாத்தா ஏற்பாடெனக் கூறி விட்டு சீக்கிரம் தயாராகு காலை 10 மணியளவில் விழா ஆரம்பம் என்றார்.

வருண் தயாராகி அலுவலக அமைப்பைக் கண்டு தாத்தாவை நோக்கி மானசீகமான புன்னகை ஒன்றை தழுவ விட்டான். காலை பத்து மணிக்கு நிறைய கட்டிடத் தொழிலதிபர்கள் நிறைந்த விழாவாக காணப்பட்டது.

விழாவில் பங்கேற்ற அனைவரும் தாத்தாவைப் பற்றி சில வார்த்தைகள் கூறத் தவறவில்லை. வருணையும் வாழ்த்தி விட்டு நாங்கள் வடிவமைப்பு வேலைகள் அனைத்தும் உங்களுக்கே தருகிறோம் என்று உறுதி மொழி தந்தனர்.

விழா முடிந்ததும் தாத்தா வருணைப் பார்த்து உனக்கு நல்ல எதிர்கால உள்ளது என்று கூறி விட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் வாசலில் ஏதோ ஒரு சப்தம் கேட்க விரைந்தான்.

வாசலில் நின்ற வாகனத்தில் சாமான்கள் ஏற்றப்பட்டிருந்தது. தாத்தா பாட்டி இருவரும் வந்து அமர்ந்தனர்.

வருண் என்ன தாத்தா என வினவினான்.

எனது மகள் பையன் 12 ஆம் வகுப்பு படிக்கிறான் அல்லவா? எனது அடுத்த பயணம் அங்கேதான் என்றார்.

வருண் தாத்தாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஆனந்த கண்ணீர் சிந்தினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *