செய்திகள்

தாஜ்மகாலுக்கு ரூ.2 கோடி குடிநீர் வரி: ஆக்ரா நகராட்சி நோட்டீசால் அதிர்ச்சி

ஆக்ரா, டிச. 20–

தாஜ் மகாலுக்கு ரூ.1.9 கோடி குடிநீர் வரி, ரூ.1.5 லட்சம் சொத்துவரி செலுத்துமாறு ஆக்ரா நகராட்சி நிர்வாகத்திடமிருந்து, இந்திய தொல்லியல் ஆய்வு மையத்துக்கு நோட்டீஸ் வந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாஜ் மகால் பாரம்பரிய நினைவுச் சின்னமாக 1920ஆம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்திலேயே அறிவிக்கப்பட்டது. இதுவரை இந்த இடத்துக்கு சொத்து வரியோ, குடிநீர் வரியோ வசூலிக்கப்பட்டதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்திய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, இந்திய தொல்லியல் ஆய்வு மையத்தால் தாஜ் மகால் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், 2021 – 22 மற்றும் 2022 – 23ஆம் ஆண்டுக்கான குடிநீர் வரி மற்றும் சொத்து வரி செலுத்துமாறு தற்போது நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

15 நாளில் செலுத்த வேண்டும்

அது மட்டுமல்லாமல், வரும் 15 நாள்களுக்குள் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் தாஜ் மகால் முடக்கப்படும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய தொல்லியல் ஆய்வு மையம் தரப்பில் கூறப்படுவதாவது:–நினைவுச்சின்னங்களுக்கு சொத்து வரி விதிக்கப்பட மாட்டாது. அதுபோலவே, இது ஒன்றும் வணிக நிறுவனம் அல்ல, வணிக நிறுவனங்கள்தான் குடிநீர் வரி செலுத்த வேண்டியது வரும்.

இந்த வளாகத்தில் இருக்கும் செடிகளுக்கு மட்டும்தான் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. ஆக்ரா நகராட்சியிடமிருந்து சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்துமாறு நோட்டீஸ் வந்திருப்பது இதுதான் முதல் முறை. ஒரு வேளை தவறுதலாகவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று தெரிவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி ஆக்ரா நகராட்சி தரப்பில் கூறும்போது, தாஜ் மகாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. மாநில அளவிலான புவியியல் தகவல் அமைப்பு நடத்திய ஆய்வின் அடிப்படையில், அனைத்துப் பகுதிகளுக்கும் வரி கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து கட்டடங்களுக்கும், அரசு அலுவலகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்துமாறு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பிறகே, எந்தெந்த பகுதிகளுக்கு வரி தள்ளுபடி செய்யப்படும் என்பது கணக்கிடப்படும்.

இதன் அடிப்படையில்தான், இந்திய தொல்லியல் ஆய்வு மையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தை ஏற்று, வரி தள்ளுபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *