கவிதா ஓர் அரசாங்க ஊழியர். கை நிறைய சம்பளம்.அன்பான கணவன். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்; எல்லாம் இருக்கிறது என்ற வாழ்க்கை. அழகான குழந்தைகள். இதற்கு மேல் என்ன வேண்டும்? ஆனால் அவருக்கு இலக்கியப் பசி அதிகம். சமையல றையில் இருப்பதை விட அவர் கவிதை, கதை ,கட்டுரை எழுதுவதில் தான் மிகவும் தீவிரமாக இருப்பார்.
தலையில் நரை பூத்து பேரன் பேத்தி எடுக்கும் வயதில் கூட அவருக்கு கவிதை, கதை என்றால் அவ்வளவு ஆர்வம். எப்போதும் பேனாவும் கையுமாக இருப்பார். சமூக வலைதளங்களில் அவருடைய கதையும் கவிதையும் எப்போதும் வலம் வரும். அவரின் கவிதைக்கும் கதைக்கும் ரசிகர்கள் ஏராளம். காலையில் எழுந்ததும் கதை, கவிதை ,ஹைக்கூ, படக்கவிதை என்று எழுதி பதிவிட்டால் தான் அவருக்கு மனசு ஆறும். இல்லையென்றால் மனது அடித்துக் கொள்ளும் .
” ப்பா, இன்னும் பத்து நிமிசம் தான் இருக்கு. அதுக்குள்ள கதை , கதை போடலன்னா, எல்லாரும் என்னை என்னன்னு கேள்வி கேப்பாங்களே “
என்று அடித்துக் கொண்டார் கவிதா.
இப்படி ஒவ்வொரு நாளும் அவர்படும் அவஸ்தையைப் பார்த்து,
“ஏம்மா எப்ப பாத்தாலும் பேனாவும் கையுமா இருக்க? வேற வேலை செய்ய வேண்டியது தானே? வீட்டு வேலைய நீ சரியா கவனிக்கறது இல்ல.உனக்கு என்ன இப்ப கவிதை எழுதணும்னு இருக்கு ? இந்த வயசுல கவிதை எழுதி என்ன செய்யப் போற? “
என்று மகன் கேட்டாலும்
” டேய் போடா இலக்கியங்கிறது வாழ்க்கை. அது வேலை இல்லை. எனக்கு சுவாசம் மாதிரி. நான் அப்படித்தான் எழுதுவேன் ” என்று மகனிடம் சொல்வார் கவிதா.
ஒரு இலக்கியக் காதலி, மனைவி கிடைத்ததில் அவருக்கு சந்தோஷம். சராசரி மனிதனை விட மனைவி கவிதாவுக்கு ரசனை அதிகம் “என்று சொல்வார்அவர் கணவர்.
அந்த இலக்கிய இல்லறமே அவருக்கு இனித்தது. ஆனால் பிள்ளைகளுக்கு தான் கவிதாவின் கவிதை கசந்தது.
” நீ கவிதை எழுதி உனக்கு பாராட்டு வாங்கணும்னு யாரு சொன்னது ? அதுவும் நீ எப்போ பார்த்தாலும் கவிதை, கதை எழுதிக்கிட்டு இருக்க ? இது வேண்டாம்மா உனக்கு நீயே காலையிலிருந்து சாயங்கால வரைக்கும் இதையே முட்டிக்கிட்டு உட்காந்துட்டு இருக்க .அது உன் மனசுக்கும் உடம்புக்கும் பிரச்சினையக் கொடுக்குது. வேண்டாம்னு சொன்னாலும் விடமாட்டேங்குற ? உனக்கு தெரியாது. நீ எழுதுறதுக்கு எவ்வளவு கஷ்டப்படுகிறன்னு தெரியுமா ? ஒனக்கு அது மன அழுத்தத்த குடுக்குது”
என்று பிள்ளைகள் சொல்வதை ஒரு கட்டத்தில் ஆமோதித்தார் கவிதா.
“அதுவும் சரிதான். நாமதான் காலையில மாலையில கவிதை, கதை எழுதித்தான் ஆகணும் அப்படிங்கிற நிர்பந்தத்துக்கு தள்ளப்படுறாேம். இத கொஞ்சம் தள்ளி வைக்கலாமா ? “
என்று யோசித்தார் அன்றே முடிவெடுத்தார் .கவிதை ,கதை என்பது வானவில் மாதிரி. காளான் மாதிரி தாழம்பூ மாதிரி. ஏன் ஒரு தாய் வயிற்றிலிருந்து பிறக்கும் குழந்தை மாதிரி. எப்போது வேண்டுமானாலும் அது வரலாம் என்று தான் இருக்க வேண்டுமேயாெழிய , அது கூட மல்லுக்கட்டிட்டு பேனா ,பேப்பர எடுத்து உட்காந்து எழுதுறதால எதுவும் வந்துவிடாது”
என்று முடிவு செய்தார் கவிதா. அன்றிலிருந்து சமூக வலைதளங்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்தார். படைப்புகளை சில தினங்கள் பதிவிடாமல் இருந்தார்
” என்ன கவிதா இன்னைக்கு கதை, கவிதைய காணலயே ?”
என்று எதிர் கேள்விகள் வந்து விழுந்தன. அத்தனைக்கும் ஏதோ ஒரு பதில் சொல்லி சமாளித்தார்.
ஆனால் அந்த பதிலால் அவர்கள் சமாதானம் அடையவில்லை.
கவிதாவின் கவிதை கதைகளை படிக்கவில்லை என்றால் எங்களுக்கு மனசு ஒப்பாது. நீங்கள் கதை, கவிதைகளை எழுதித்தான் ஆக வேண்டும் என்று விண்ணப்பம் வைத்தார்கள் சமூக வலைதளவாசிகள்.
காலை, மாலை என்று எப்போதும் பேனாவும் கையுமாக இதைச் செய்துதான் ஆக வேண்டும். கதை ,கவிதை எழுதிப்போட்டு தான் ஆக வேண்டும் என்று நிர்பந்தமாக இருக்கும் போது கவிதா யோசித்தால் ,சிந்தித்தால் தான் வரும் கதை ,கவிதைகள் என்ற நிலையிலிருந்து இப்போது விடுபட்டிருந்தாள்.
அத்தனை அழித்துவிட்டு அமைதியாக இருந்தார். கவிதை, கதைகள் அவள் எண்ணம் முழுவதும் நிரம்பி வழிந்தன. எழுத வேண்டும் என்று நிர்பந்தமாக உட்காரும்போது எதுவும் வர மறுக்கிறது. ஆனால் இப்போது, மடை திறந்த வெள்ளமாக இலக்கிய வெள்ளம் வழிகிறதே ? இதுதான் வாழ்க்கை. எதையும் நாம் திணித்து வரவழைக்கக் கூடாது. தெளிந்து வர வேண்டும் . கவிதையானாலும் சரி. கதையானாலும் சரி .வாழ்க்கையாக இருந்தாலும் சரி என்பதை ஒத்துக் கொண்டார் கவிதா.
இப்போது, கதை ,கவிதை எழுதுவதற்கு என்று அவர் நேரம் ஒதுக்கி அமர்வதில்லை. ஊற்றுபோல அவர் மனதில் கதை, கவிதைகள் பூத்துக் குலுங்குகிறது.