சிறுகதை

தவறிய எண் | ராஜா செல்லமுத்து

தம்பி எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? என்று மதுரையில் இருந்து கேட்டாள் மலர்விழி.

அக்கா சொல்லுங்க, உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு நான் உதவி செய்யப் போறேன்? என்று சரவணன் சொன்னான்.

ஒன்னு இல்ல தம்பி, நான் எப்பவும் சாப்பிடற மாத்திரை சென்னையிலிருந்து வாங்குவேன். எப்பவும் மாத்திரைய வாங்கி அனுப்புற என்னோட மருமகன், இப்ப ஊர்ல இல்ல. அதனாலதான் உன்னை கேட்கிறேன். அந்த மாத்திரையை இங்கே வாங்க முடியாது. சென்னையில் மட்டும் தான் கிடைக்கும். நான் உனக்கு வாட்சப்ல அனுப்புறேன். நீ அந்த மாத்திரை வாங்கி அனுப்பிவிடு என்று சொன்னாள் மலர்விழி.

அக்கா, நீங்க உடனே அனுப்புங்க நான் மாத்திரை வாங்கி அனுப்புறேன் என்று சரவணன் சொன்னான், சிறிது நேரத்திற்கெல்லாம் மாத்திரையை வாங்கி அனுப்பினான் கூரியரில் அனுப்பினான் சரவணன்

அக்கா அனுப்பிட்டேன். நாளைக்கு வந்து சேர்ந்திடும் என்று சொல்லிய சரவணனிடம் தம்பி உங்களோட அக்கவுண்ட் நம்பர் அனுப்புங்க என்று மலர்விழி கேட்க சரவணன் அவனுடைய செக் புக்கை அனுப்பினான். செக் புக் செக்கில் அவனுடைய வங்கி கணக்கு எண் /ஐ எஃப் எஸ் சி கோட் முதலியவை இருந்தன அடுத்த பத்தாவது நிமிடத்தில் மொபைல் பாங்கிலிருந்து சரவணனுக்கு பணம் போட்டு விட்டாள் மலர்விழி,

தம்பி உங்க அக்கவுண்ட்ல பாருங்க. நான் அதுல பணம் போட்டுட்டேன் என்று சொன்னாள் மலர்விழி. அதுக்குள்ள போடணுமா? சரவணன் கேட்டான்.

இல்லப்பா, பண விஷயம் எப்பவுமே சரியா இருக்கணும். இல்லன்னா உறவு கெட்டுப்போகும். நீ முதல்ல உன்னோட அக்கவுண்ட் செக் பண்ணிட்டு எனக்கு சொல்லு என்று சொன்னாள் மலர்விழி.

சரவணன் தன்னுடைய அக்கௌன்ட் இருப்பை பார்த்தான். மலர்விழி அனுப்பிய பணம் வந்து சேரவில்லை. அவர்களிடம் இதை எப்படி கேட்பது என்று அவன் மனதுக்குள் தடுமாறினான். இருந்தாலும் பரவாயில்லை நமக்கு வரவேண்டிய பணம் இன்னொருத்தருக்கு வேஸ்டாக போய்விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தான் சரவணன்.

அக்கா, நீங்க போட்ட பணம், வந்து சேரல. எந்த நம்பருக்கு போட்டீங்க என்று சரவணன் கேட்டான்.

நீ கொடுத்த நம்பருக்கு தான் நான் போட்டேன் என்று மலர்விழி சொன்னாள்

இல்லக்கா, என்னுடைய அக்கவுண்டுக்கு பணம் வந்து சேரல என்று சரவணன் சொல்ல

இல்லையே நான் உன்னுடைய அக்கவுண்டுக்கு பணம் போட்டேன் என்று மலர்விழியும் சொன்னாள்.

வங்கியில் போய் கேட்டான் சரவணன். நெட்வொர்க் பிரச்சனை ஏதாவது இருக்கும் என்று வங்கியில் பதில் சொன்னார்கள்.

இரண்டு நாள் கழித்து பார்த்தால் அவன் வங்கியில் பணம் ஏறவில்லை. அவன் மலர்விழி தன்னுடைய நம்பரை தனியாக எழுதி அனுப்பினான். அப்போதுதான் தெரிந்தது மலர்விழி ஒன்பது என்ற எண்ணுக்கு பதிலாக நாலு என்று தவறாக அவன் கணக்கில் பதிவு செய்திருப்பது.

ஐயையோ தவறா நம்பர் போட்டுட்டு, வேற ஒருத் தங்களுக்கு போயிருச்சு என்ற மலர்விழி

என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தாள்.

மலர்விழி தவறாக அனுப்பிய பணத்தை அவர்களிடம் எப்படி கேட்பது? என்பதை மறைத்துக்கொண்டு மறுபடியும் சரவணனுக்கு இன்னொரு முறை பணத்தை அனுப்பினாள்.

மறுபடியும் சரவணனுக்கு சேரவேண்டிய பணத்தை அனுப்பி விட்டாள். இருந்தாலும் சரவணனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

நம்மால் ஒருவர் பாதிப்படைய கூடாது என்று நினைத்த சரவணன், வங்கியை தொடர்பு கொண்டு மலர்விழி தவறாக பதிவிட்ட எண்ணுக்குரிய முகவரியை கண்டுபிடித்தான்.

அது பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் வங்கி கணக்கு எண்ணாக இருந்தது . அவர்களை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை சொன்னபோது, அவர்களும் தங்களுடைய வங்கிக் கணக்கில் நீங்கள் செலுத்திய பணம் இருக்கிறதா? என்று பார்த்துவிட்டு நான் சொல்கிறேன் என்று சொன்னார்கள்.

இரண்டொரு நாள் கழித்து பணத்தை பரிவர்த்தனை செய்கிறேன் என்று சொன்னவர்கள் .அதுவரையிலும் பணத்தைப் போடவில்லை.

மறுபடியும் சரவணன் அவர்களுக்கு தொடர்புகொண்டு பேச அவர்கள் பணத்தை சரவணன் வங்கி கணக்கில் செலுத்தினார்கள்.

இதை மலர்விழியிடம் சொன்னான் சரவணன்.

நான் செய்த தவறை நீங்க திருத்திட்டிங்க இப்படி நிறைய பணம் எனக்கு வேஸ்டா போயிருக்கு என்று மலர்விழி சொன்னாள்.

இல்லங்க நாம ஒருத்தருக்கு மனதார உதவி செய்றது என்கிறது வேற. இப்படி தவறா ஒரு வங்கிக் கணக்கில பணம் செலுத்தி இருக்கிறது வேற. அதான் நான் அந்த பணத்தை திரும்ப வாங்கிட்டேன் என்று சரவணன் சொன்னான்

பரவால்ல நான் கூட இப்படி கேட்க மாட்டேன். நீங்க தைரியமா கேட்டு வாங்கி விட்டீங்க என்று மலர்விழி சொன்னாள்

ஆனா நீங்க பண்ணதிலயும் ஒரு விஷயம் ஒளிஞ்சி இருக்கு என்றான் சரவணன்.

என்ன என்று கேட்டாள் மலர்விழி.

நீங்க தவறா எழுதிப் போட்ட வங்கி கணக்கு உள்ள அந்த நபர் கூட எனக்கு இப்போ நல்ல பிரண்ட் ஆயிட்டாங்க.

நீங்க அப்படி பண்ணலைன்னா ஒரு நல்ல நண்பர் எனக்கு கிடைச்சிருக்க மாட்டாங்க. தவறான ஒரு நம்பர், எனக்கு ஒரு நல்ல சரியான ஒரு நண்பர அறிமுகப்படுத்தி இருக்கீங்க என்று சரவணன் சொன்னபோது

மலர்விழி தான் தவறு செய்திருந்தாலும் ஒரு நல்ல நட்பு சரவணனுக்கு கிடைத்திருக்கிறது என்பதில் அவள் பூரித்து நின்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *